sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

துரோகம்!

/

துரோகம்!

துரோகம்!

துரோகம்!


PUBLISHED ON : மார் 31, 2019

Google News

PUBLISHED ON : மார் 31, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தம்பி சம்பந்தனிடம், ''வீடு வித்தாச்சா,'' என, கேட்டாள், பார்வதி.

''அந்த கொடுமையை ஏன் கேட்கற அக்கா... கண்ணை மூடிகிட்டு வித்தாலும், 20 லட்ச ரூபாய்க்கு போகும்... பாவிப் பயலுக, நம்ம இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி, வீட்டை அடிமாட்டு விலைக்கு கேட்கறானுங்க,'' என்றான், சம்பந்தன்.

''எவ்வளவு தருவாங்களாம்?''

''சொல்லவே நா கூசுது... கேவலம், நாலு லட்சத்துக்கு மேல் பைசா தரமுடியாதுங்கறாங்க, படுபாவிங்க... எப்பேர்பட்ட வீடு, யாரெல்லாம் வாழ்ந்த வீடு, பர்மா தேக்கு, பெல்ஜியம் கண்ணாடி, ராஜஸ்தான் பளிங்கு என, பார்த்து பார்த்து வாங்கி கட்டி, பரம்பரையா வாழ்ந்த வீடு...

''விலை போகாது... பிரிச்சு வித்தால், மொத்தமே சில ஆயிரங்கள் தான் போகும்... வீட்டு மனைக்கு தான் விலை... சம்மதம்ன்னா, உடனே பணம் தர்றோம்ன்னு சொல்றாங்க,'' என்றான்.

மூச்சு இரைத்தது. கண் மூடி யோசித்தாள்.

வயது, 70. பலவகை நோய்களின் தாக்கம். மாதக்கணக்கில் சிகிச்சை. கையிலிருந்த சேமிப்பு, விலை மதிப்பான பொருட்களை விற்று திரட்டியது என, அனைத்து பணத்தையும் உறிஞ்சிக் கொண்டது, மருத்துவ செலவு.

பார்க்க வந்தவர்கள் கொடுத்த ஆதரவு தொகைகளும் அன்றே செலவாகி, இப்போது, மருத்துவமனைக்கு செலுத்த வேண்டியது, இரண்டு லட்சத்திற்கு மேல் இருக்கிறது. என்ன செய்ய முடியும்...

ஒரு முடிவுக்கு வந்தவள், ''வித்துடு,'' என்றாள், பார்வதி.

இரண்டு நாளில் வேலை முடிந்தது.

மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய தொகையை கட்டி, மீதி தொகையை அக்காவிடம் கொடுத்தான்.

''நீ கொஞ்சம் செலவுக்கு வச்சுக்கோ,'' என்றாள்.

விருட்டென்று கைகளை பின்னுக்கு இழுத்துக் கொண்டான், சம்பந்தன்.

''என்னை, ரெண்டு அடி, அடிச்சுடு... இப்படி அசிங்கப்படுத்தாதே... உனக்கு, நான் தான் உதவணும்... காசுக்கு வக்கில்லாதவனா போயிட்டேன்... என்னாலான உதவியாய், நீ சொன்ன வேலைகளை முடிச்சு கொடுத்து, மனசை சமாதானப்படுத்திக்கிட்டேன்... எனக்கு போய் பணம் கொடுக்க வர்றீங்களே... மருத்துவ செலவு இன்னும் எவ்வளவு ஆகுமோ,'' என்றான்.

''இது, உனக்கு இல்லை... வீட்டில், விமலாவும், குழந்தைகளும் இருக்காங்களே... சாப்பிடறாங்களோ, இல்லையோ... பாவம்... அவங்களுக்கு கொடு,'' என்று வற்புறுத்தி, அவன் கையில் திணித்தாள்.

கண் கலங்கியபடி, வாங்கிக் கொண்டான்.

பார்வதிக்கு பிரதிபலன் பாராமல், சேவை செய்யும் சமையல்கார பெண் அருணா, ''மோசம்... மோசம்,'' என்று அரற்றினாள்.

''உங்க தம்பி, உங்களை ஏமாத்திட்டார்ம்மா... வீடு, 15 லட்சத்துக்கு விலை போயிருக்கு... வெறும், நான்கு லட்சம்ன்னு பொய் சொல்லி, மீதி, 11 லட்சத்தை அவர் எடுத்துக்கிட்டார்,'' என்றாள்.

''யார் சொன்னது,'' எனக் கேட்டாள், பார்வதி.

''வீடு வாங்கினவர், என் அப்பாவுக்கு தெரிஞ்சவர்... என்ன விலைக்கு போச்சுன்னு கேட்க, 15 லட்சம்ன்னு சொன்னார். அதிர்ச்சியா இருந்தது,'' என்றாள், அருணா.

''இதை கேட்கும்போது, எனக்கும் அதிர்ச்சியா தான் இருக்கு... இந்த விஷயத்தை வேறு யாரிடமாவது சொல்லிட்டியா,'' என்றாள், பார்வதி.

''இல்லை... இந்த கொடுமையை, உங்களை தவிர யாரிடமும் சொல்லவில்லை,'' என்றாள்.

''இனியும் சொல்லாதே... நான் கேட்க போவதில்லை... அருணா, நீயும் உண்மை தெரிஞ்சதா காட்டிக்காதே,'' என்றாள்.

''அம்மா,'' என்றாள், அருணா.

''எனக்கு இருக்கற ஒரே உறவு, தம்பி தான். நான் இறந்தால், என் இறுதி சடங்கை அவன் தான் நடத்தணும்... என்ன தேவையோ, சூழ்நிலையோ இப்படி ஒரு செயலை செய்துட்டான்... எனக்கு தெரிஞ்சுடுச்சுன்னு அவனுக்கு தெரிஞ்சால், மருத்துவமனை பக்கம் வரமாட்டான்...

''நான், அனாதை பிணமாயிடுவேன்... அந்த நிலை எனக்கு வரக்கூடாது... ஏமாத்திட்டான்னு நினைச்சால் தான் வேதனை... நானே அந்த பணத்தை அவனுக்கு கொடுத்ததாக நினைச்சு, மனச தேத்திக்கிறேன்... நீயும் மறந்துடு,'' என்றாள், பார்வதி.

அடுத்து வந்த நாட்களில், உடல்நிலை மோசமாகி, இறந்தார், பார்வதி.

'அக்காவுக்கு அக்காவாகவும், அம்மாவுக்கு அம்மாவாகவும் இருந்து வளர்த்தியே... என்னை அனாதை ஆக்கிட்டியே...' என்று அழுது புரண்டு, துடித்தான், சம்பந்தன்.

அவன் பாசத்தை கண்டு, கண் கலங்காதோர் இல்லை. இறுதிச் சடங்கு முடிந்தது. ஒரு மாதம் துக்கம் கடைப்பிடித்தான்.

எல்லாம் அடங்கி, ஓய்ந்த நாளில், மறைத்து வைத்திருந்த பணத்தை எடுத்தான், சம்பந்தன். ரூபாய் நோட்டுகளை மார்போடு அணைத்துக் கொண்டான்; பணக்கட்டுகளை முகர்ந்தான்.

தடாலென்று உள்ளே வந்த விமலா, கட்டு கட்டாக பணத்தை பார்த்ததும், மிரண்டு, ''ஏதுங்க இவ்வளவு பணம்,'' என்றாள்.

''கேள்வி கேட்காதே... தொட்டு பார்... தடவி பார்... மொத்தமா, 1,000 ரூபாயை பார்த்திருக்கியா... லட்சங்களை பார்... கையில் எடுத்து, கண்களில் ஒற்றிக்கொள்... மனசுல சந்தோஷ அலை அடிக்கும் பார்,'' என்றான்.

''சீச்சீ...'' என்று விலகி, ''அப்ப நான் கேள்விப்பட்டது உண்மையா... அக்கா வீட்டை அதிக விலைக்கு விற்று, குறைவான பணத்தை அவங்களுக்கு கொடுத்து, மீதியை ஏமாத்தியிருக்கீங்க,'' என்றாள்.

''அப்படி தான் வச்சுக்கோ... என்ன கெட்டு போச்சு... அவங்களுக்கு தேவைப்படும்போது, கொடுக்கலாம்ன்னு பத்திரப்படுத்தி வச்சேன்... அதற்கு அவசியம் இல்லாமல் கண்ணை மூடிட்டாங்க... எப்படி இருந்தாலும், இது எனக்கு உரிமையுள்ள பணம்,'' என்றான்.

''வேணும்ன்னு கேட்டிருந்தால், அவங்களே கொடுத்திருப்பாங்க... ஆனால், அவங்களுக்கு தெரியாம எடுத்திருக்கீங்க... இது, திருட்டு... துரோகம்... இதில், ஒரு பைசா கூட நமக்கு வேணாம்... போங்க... போய், அக்கா பேர்ல அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ தானம் பண்ணிட்டு வாங்க... உங்க பாவ மூட்டையை, எந்த ஆறு, குளத்திலாவது வீசிட்டு வாங்க,'' என்று விரட்டினாள், விமலா.

''உனக்கு வேணாம்ன்னா விடு... நான் அனுபவிச்சுட்டு போறேன்... வருஷக்கணக்கா பாடுபட்டாலும், இத்தனை தொகை பார்க்க முடியுமா... வேறொருத்தியா இருந்திருந்தா, என் சாமர்த்தியத்தை பாராட்டி இருப்பாள்... இந்த பணத்தில் நாலு நகை, ரெண்டு பட்டுப் புடவைன்னு கேட்டு வாங்கியிருப்பாள்...

''கொஞ்ச காலம் வாழ்ந்தாலும், நாக்குக்கு சுவையா சாப்பிட்டு, நாலு இடம் சுத்தி பார்த்துட்டு செத்து போகலாம்ன்னு சொல்வாள். என் அருமையும் தெரியலை... பணத்தின் அருமையும் தெரியலை...

''போ... கடைசி வரை கஞ்சியும், துவையலும் தான் கதி... சாதா புடவையும், நசுங்கி போன பித்தளை நகையுமாய் இருக்கணும்ன்னு தலையில் எழுதியிருந்தா, யார் என்ன செய்ய முடியும்,'' என்று, பெட்டியில் பணத்தை பூட்டி, சாவியை, ஓரிடத்தில் பத்திரமாக மறைத்து வைத்தான்.

''இந்த பணம், வீட்டில் இருந்தால்... குழந்தைகளோடு வீட்டை விட்டு போயிடுவேன்,'' என்றாள்.

''ப்ளாக் மெயில் பண்றியா,'' என்றான்.

''இல்லைங்க... வேண்டிக்கறேன்... இத்தனை நாளும் நீங்க எடுத்து வந்த சொற்ப பணத்தில், கூழோ, கஞ்சியோ குடிச்சு வாழ்ந்தாலும், மனதுக்கு நிம்மதியா இருந்தது... உங்க உழைப்பில் வந்த பணம் என்ற கர்வம் இருந்தது... இப்போ, ஏமாத்தி வச்சிருக்கற பணத்தில், விருந்தே சமைத்தாலும் இறங்குமா... தொண்டை அடைக்காதா... 'திடீர்ன்னு, எப்படிம்மா நமக்கு இந்த வசதி வந்தது...'ன்னு, பிள்ளைகள் கேட்காதா...

''கட்டிகிட்ட பாவத்துக்கு, நான் வாய் மூடி மறைக்கலாம்... ஆனால், செய்த காரியம், என்றாவது ஒருநாள் கிளம்பி மேலே வரும்... 'அக்கா பணத்தை சுருட்டி தான், சுக வாழ்க்கை வாழறா...'ன்னு ஊர் சொல்லாதா... 'உங்க அப்பா ஒண்ணும் சம்பாதிக்கலை... அது, உங்க அத்தை பணம்... இவர் பதுக்கிட்டார்...'ன்னு குழந்தைங்ககிட்ட யாராவது சொல்ல மாட்டாங்களா... 'அப்படியாப்பா...'ன்னு அவர்கள் கேட்டால், 'ஆமாம்...'ன்னு உங்களால் சொல்ல முடியுமா...

''அதை விடுங்க... இந்த பணத்தை வச்சு எத்தனை நாள் வாழ்ந்துடுவீங்க... ஐந்து வருஷம், 10 வருஷம்... அதன்பின் என்ன செய்வீங்க... ஏமாத்தின பணத்துல, உடம்பை வளர்த்துட்ட பிறகு, உழைச்சு பிழைக்க மனசு வருமா... மறுபடியும் யாராவது ஏமாறுவாங்களான்னு தானே புத்தி அலையும்...

''வேலை தேட நினைத்தாலும், உங்க யோக்கியதை காற்றில் பரவி, யாரும் வேலை தரமாட்டாங்க... மதிப்பிழந்து, மரியாதை கெட்டு அலையணுமா... உங்களால், மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியுமா... சொல்லுங்க,'' என்றாள், விமலா.

''நீ எப்ப வீட்டை விட்டு போகப் போற,'' என்றான், சம்பந்தன்.

''இவ்வளவு சொல்லியும், நீங்க கொஞ்சம் கூட யோசிக்க தயாரா இல்லைல்ல... கொடுமை,'' என்று, தலையில் அடித்துக் கொண்டாள்.

''ஓட்டலில், வாய்க்கு ருசியா சாப்பிட போறேன்,'' என்று சொல்லி போனான்.

இருந்த உணவை குழந்தைகளுக்கு கொடுத்து, பட்டினியும், கண்ணீருமாய், துாங்கினாள், விமலா.

விடிந்தது.

விமலாவை தட்டி எழுப்பி, ''இந்தா பெட்டி சாவி... 11 லட்ச ரூபாயை எடுத்து போய், நீ சொன்னபடி, அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ, அக்கா பெயரில் கொடுத்துடு... நான் வேலைக்கு போறேன்,'' என்றான், சம்பந்தன்.

கணவனின் திடீர் மன மாற்றத்துக்கான காரணம் புரியாமல் விழித்தாள், விமலா.

எனினும், அன்றே மகளுடன் போய், ஒரு முதியோர் இல்லத்தில், பார்வதி பெயரில் பணத்தை கொடுத்து திரும்பினாள்.

''என்னாச்சுங்க... எப்படி இந்த மாற்றம் வந்தது... நம்பவே முடியலைங்க... ஆனால், மனசுக்கு நிம்மதியா இருக்கு,'' என்றாள், விமலா.

''எனக்கும் தான்,'' என்றான்.

''என் மனதில், எப்படி அந்த பணப் பேய் நுழைந்ததுன்னு தெரியலை... அது, அதிரடியா உள்ளே உட்கார்ந்துடுச்சு... அக்கா சொத்தை ஏமாத்தறமேன்னு தோணும்போது, அந்த பேய், 'சாகப் போற அக்காவுக்கு எதுக்கு இத்தனை பணம்... இரக்கம் என்ற பெயரில், அக்கம்பக்கம் இருக்கும் நோயாளிகளுக்கு, பங்கு பிரிச்சு கொடுத்தாலும் கொடுத்துடுவாள்... ஏமாறுகிற பெண்மணி... விடு... பணத்தை பத்திரப்படுத்து...'ன்னு சொல்லிச்சு...

''நிறைய ஆசை காட்டியது... 'என் மனைவியை சமாதானம் பண்ண முடியாதே...'ன்னு சொன்னேன்... 'புடவைக்கும், நகைக்கும் மயங்காத பெண், உலகத்திலேயே இல்லை. உன் மனைவி ஒண்ணும் விதிவிலக்கில்லை. அவளை அழைச்சு போய் நாலு நகை, பட்டுப் புடவைன்னு வாங்கிக் கொடு... உன் வழிக்கு வந்துடுவா...'ன்னு சொல்லிச்சு...

''எனக்கு இருந்த குழப்பம் விலகி, தைரியம் வந்தது... பைக் வாங்கணும், தொழில் ஆரம்பிக்கணும்ன்னு எல்லாம் ஆசைப்பட்டேன்... ஆனால், அதெல்லாம் அந்த இளைஞனை பார்க்கும் வரைக்கும்... அவனை பார்த்ததும், என் மனசை மூடியிருந்த சுயநல பேய் விட்டு தெறித்து ஓடிப்போச்சு... மனதில் புது வெளிச்சம் வந்தது விமலா,'' என்றான்.

''யார் அது,'' என்றாள்.

''ஓட்டலில் சாப்பிட போனேனா... அங்கே எனக்கு முன் ஒருவன் சாப்பிட உட்கார்ந்தான். நல்ல பசி போல, அள்ளி அள்ளி சாப்பிட்டாலும், அடிக்கடி சங்கடமாக நெளிவதும், இடுப்பில் கையூன்றுவதுமாக இருந்தான். 'என்ன பிரச்னை...'ன்னு கேட்டேன். முதலில், 'ஒண்ணுமில்லை...'ன்னான்.

''நான் வற்புறுத்தவே, அக்காவுக்கு இரண்டு சிறுநீரகமும் செயல்படாம போக, தன் சிறுநீரகத்தில் ஒன்றை கொடுத்து அக்கா உயிர் பிழைத்ததாகவும், ஆறு மாதத்திற்கு பின், தற்போது, நீண்ட நேரம் பயணம் செய்தால், லேசான அவஸ்தை இருப்பதால், மருத்துவரை பார்க்க போவதாக கூறினான்...

''எனக்கு, 'பளார்'ன்னு கன்னத்தில் அறைஞ்ச மாதிரி இருந்தது. நீ சொல்லி புரியாத ஒண்ணு, அவன் சொல்லி, புரிய வச்சுட்டான்... சிறுநீரகத்தை கொடுத்து, சகோதரியை, சாவிலிருந்து காப்பாற்றிய, அந்த இளைஞன் எங்கே... சாகக் கிடந்த அக்காவிடமிருந்து பணத்தை ஏமாத்தின, நான் எங்கே...

''கேவலமாக இருந்தது... 'அக்கா... மன்னிச்சுரு...'ன்னு கதறிட்டேன்... ஆயிரம் அழுதாலும், அக்கா வரப் போவதில்லை... என் பாவமும், என்னை விட்டு போகப் போவதில்லை... அந்த பணத்தை தீண்டாமல் இருக்கணும்ன்னு முடிவு செய்தேன்,'' என்றான்.

''தவறை உணர்ந்துட்டீங்க... பரிகாரமும் பண்ணியாச்சு... அக்காவின் ஆத்மா, நிச்சயம் உங்களை மன்னிக்கும்... கவலைப்படாதீங்க,'' என்று சமாதானம் சொன்னாள், விமலா.

அன்று, அவன் வேலை செய்து, சம்பாதித்து வந்த, 300 ரூபாயை வாங்கி, திருப்தியாக, அரிசி வாங்க, கடைக்கு சென்றாள்.

படுதலம் சுகுமாரன்






      Dinamalar
      Follow us