
எம்.விக்னேஷ், மதுரை: அந்துமணியின், உடன் பிறவா சகோதரிகளுக்கு மட்டும் தான், 'வாரமலர்' இதழ் மூலமாக, வெளிநாட்டு பயணம் அமைத்துக் கொடுப்பீர்களா? உடன் பிறவா சகோதரர்கள் என்ன பாவம் செய்தோம்? ஆண் பாவமும் பொல்லாதது, மணியாரே...
வாய்ப்பு வரும்; பொறுத்து இருங்கள்; ஆண்கள், பாவம் செய்கின்றனர் என, நீங்களே சொல்லலாமா? 82 வயதுடைய, ஆண் வாசகரையும், அவர் மனைவியையும், விரைவில், வெளிநாடு சுற்றுலாவுக்கு, 'வாரமலர்' இதழ் அனுப்பி வைக்க இருக்கிறது. ஆனால், அவரால் பயணக் கட்டுரை எழுத முடியுமா என்பது தான் தெரியவில்லை!
* எ.சகுந்தலா, தென்காசி: அதிக லாபம் எதில் கிடைக்கும்?
சந்தேகமே இல்லாமல், அன்பில் தான்! நீங்கள், அடுத்தவர் மீது அன்பு செலுத்தினால், அவர்கள் நம் மீது, நம்மை விட அதிக அன்பு செலுத்துவரே! இந்த அன்பு, உங்களுக்கு அதிக லாபம் தானே!
எம்.ராம்குமார், சென்னை:'ஆன்லைனில்' செய்தி படிப்பதால், பத்திரிகைகளின் விற்பனை குறைந்துள்ளதா?
ஆம்! ஆனால், நம் நாட்டில் இல்லை; அமெரிக்காவில்! 'ஆடிட் பிரோ ஆப் சர்குலேஷன்' என்ற, விற்பனையை கண்காணிக்கும் இந்திய அமைப்பின் கணக்கின்படி, நம் நாட்டின் மொழி, இங்கிருந்தே வெளியாகும் ஆங்கில நாளிதழ்களின் விற்பனை அதிகரித்து வருவதாகவே கூறுகிறது!
* வி.வாசுதேவன், கோவை: தமிழகத்தில், 'தாமரை' மலர்ந்தே தீரும் என்கிறாரே, பா.ஜ., தலைவி, தமிழிசை...
கண்டிப்பாக... ஏதாவது பெரிய குளத்தின் கரையில் அவரை அமரச் சொல்லுங்கள்... விடிகாலையில் அதை பார்ப்பார்!
எம்.கணேசன், காஞ்சிபுரம்: பலவற்றையும், நான் இழந்து விட்டேன்... அவற்றை திரும்ப பெற முடியுமா?
இந்த உலகில் முடியாதது ஒன்றும் இல்லை; முயன்றால் முடியும்... ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும், எவராலும், எந்த கொம்பனாலும் திரும்ப பெற முடியாது... அது தான், காலம் - நேரம்... ஒரு போதும் அதை வீணடிக்கக் கூடாது!
* எம். மதியழகன், லால்குடி, திருச்சி:ஆங்கிலேயர் ஆட்சியில் தான், நமக்கு மூளையை தந்தனர் என்கிறாரே, என் கொள்ளுத் தாத்தா...
கொள்ளுத் தாத்தா என்கிறீர்கள்... எப்படியும், 90 வயதைத் தாண்டி இருக்கலாம்... மறதி நோய் வந்திருக்கும்! ஆங்கிலேயர், இங்கு வருவதற்கு முன் வாழ்ந்த, வள்ளுவர், கம்பர், சேக்கிழார் மற்றும் மாணிக்க வாசகர் போன்றோரை நினைவுபடுத்துங்கள், அவருக்கு!
ச.கணேசன், தஞ்சாவூர்:மின் அஞ்சலில், உங்களுக்கு கேள்விகள் அனுப்புகிறேன்; பதில் தருவதில்லை... அஞ்சல் அட்டையில் தான், எழுத வேண்டுமா; ஒரே நேரத்தில், எத்தனை கேள்விகள் எழுதலாம்?
எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம்... அது, மின் அஞ்சலோ, அஞ்சல் அட்டையோ... ஒன்று விடாமல் எல்லாவற்றையும் படித்து விடுவேன்; ஆனால், 'ஏன் பதில் எழுதவில்லை...' என்று, மீண்டும் மீண்டும் கேட்கக் கூடாது!

