
ப
ஆசிரியரின் அறையில், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை தேதி வாரியாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன். வழு வழு தாளில், பெரிய பெரிய படங்கள் வெளியாகியிருந்த ஆங்கில நாளிதழ் ஒன்றை, பிரித்து பார்த்தேன்.
ஒரு பக்கத்தில், ஓட்டு பெட்டி படமும், சின்ன சின்ன தலைப்புகளில் ஏதேதோ தகவல்கள் இடம்பெற்றிருந்தன. தேர்தல் சம்பந்தமான செய்தி இருக்கும் என்று தோன்றவே, எழுத்து கூட்டி படிக்கலானேன். புரியாத இடத்தில், உதவி ஆசிரியை ஒருவரை, 'தாஜா' செய்து, விளக்கமளிக்க கூறினேன்.
இந்தியாவில், தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து, பல்வேறு வேடிக்கைகள் அரங்கேறி வருவதை பார்க்கிறோம்.
உலக அளவில், வெவ்வேறு நாடுகளின் தேர்தல் நடைமுறைகள் மற்றும் அது சம்பந்தமான சில சுவையான தகவல்கள் இவை :
அமெரிக்காவில், எப்போதுமே செவ்வாய் கிழமைகளில் தான் தேர்தல் நடக்கும். இதற்கு காரணம், பைபிளின்படி, ஞாயிற்றுக்கிழமை, கிறிஸ்தவர்களுக்கு ஓய்வு நாள். புதன் கிழமை, விவசாயிகளின் மார்க்கெட் நாள்; அன்று, ஓட்டு போட வரமாட்டார்கள்.
வியாழக்கிழமை, 'சின்சியர்'ஆக வேலை பார்ப்பர். வெள்ளிக்கிழமை, வார இறுதி வேலை நாள். ஜாலியாக இருக்கிறபடியால், ஓட்டு போட வரமாட்டார்கள். ஆக, செவ்வாய் தான் தேர்தலுக்கு உகந்த நாள் என, அன்று தேர்தல் நாளை வைத்துள்ளனர்.
கனடாவில், திங்கட்கிழமைகளில் தான் தேர்தல் நடக்கும்.
இங்கிலாந்து நாட்டில், வியாழக்கிழமைகளில் தான் தேர்தல் நடத்துவர். காரணம், அன்று மார்க்கெட் தினம். பொருட்களை வாங்குவதற்காக, மக்கள் வெளியே வருவர். அப்படியே ஓட்டு போட்டு போய் விடுவராம்...
தென் ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவில், தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும், தனித்தனியாக ஓட்டு பெட்டி இருக்கும். மக்கள் யாருக்கு ஓட்டு போட விரும்புகின்றனரோ, அவர் சின்னத்துக்குரிய ஓட்டு பெட்டியில், சலவை கல்லை போடுவர்.
ஓட்டு பெட்டியில், ஒருமுறை கல்லை போட்டதும், 'பெல்' அடிக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட சலவை கற்களை போட்டால், காட்டிக் கொடுத்து விடும். இனி வரும் தேர்தல்களின்போது, சலவை கல்லுக்கு பதில், ஓட்டு சீட்டை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
உலகின், 22 நாடுகளில், ஓட்டு போடவில்லை என்றால், அபராதம் உண்டு. ஆஸ்திரேலியாவில், ஓட்டு போடவில்லை என்றால், 20 டாலர், (ஒரு டாலர், 49 ரூபாய்) அபராதம் விதிப்பர். அதை கட்டவில்லை என்றால், அபராத தொகை கூடியபடி இருக்கும்.
கடந்த, 1927ல், மேற்கு ஆப்ரிக்க நாடான, லைபீரியாவில், சார்லஸ் டிபி.சிங் என்பவர், தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்றார். இவர் பெற்ற ஓட்டுகள், 2.34 லட்சம். எதிர்க்கட்சி வேட்பாளருக்கு, 9,000 ஓட்டுகள் விழுந்தன. ஆனால், அப்போது அந்நாட்டில், 15 ஆயிரம் பேர் மட்டுமே ஓட்டுரிமையைப் பெற்றிருந்தனர்.
என்ன நடந்தது என்றால், கள்ள ஓட்டுகள் பதிவானதால் ஏற்பட்ட குளறுபடி இது!
ஐரோப்பிய நாடான, ஆஸ்திரியா, மத்திய அமெரிக்க நாடான, நிகாரகுவா மற்றும் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில், 16 வயதுடையோருக்கு ஓட்டுரிமை உண்டு.
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா மற்றும் ஆப்ரிக்க நாடான, சூடானில், 17 வயதானால், ஓட்டுரிமை உண்டு.
ரஷ்யாவின் எல்லையில் உள்ள, எஸ்டோனியா நாட்டில், 2005லிருந்தே, 'ஆன்-லைனில்' ஓட்டு போடும் வசதி வந்து விட்டது. இதற்கு, 'டிஜிட்டல் வோட்டர் ஐ.டி., மற்றும் இ - கையெழுத்து' தேவை. புதிதாக ஓட்டு போடுவோருக்கு, 'பயோ மெட்ரிக்' முறையும் உண்டு.
அமெரிக்காவில், வெளிநாட்டில் வசிப்பவர் மற்றும் ராணுவ வீரர்கள், 'இ - மெயில்' மூலம் ஓட்டு போடும் நடைமுறை உள்ளது.
கடந்த 1758ல், ஜார்ஜ் வாஷிங்டன், அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். பிரசாரத்தின்போது, மக்களுக்கு, ஒரு மது பாட்டில் வாங்கிக் கொடுத்து, ஓட்டு கேட்டார்.
கடந்த, 1988ல், தென் அமெரிக்க நாடான, மெக்சிகோவில் நடந்த பொது தேர்தலில், மின்னணு ஓட்டு பெட்டி பயன்படுத்தப்பட்டது. ஓட்டு எண்ணிக்கையின் போது, முதலில், எதிர்க்கட்சி ஜெயிப்பதாக தகவல் வந்தது. அத்துடன், ஓட்டு எண்ணும் இயந்திரங்கள், 'ஜாம்' ஆகி விட்டன. பிறகு, அவை சரிசெய்யப்பட்டு, மீண்டும் ஓட்டு எண்ணப்பட்டதில், ஆளுங்கட்சி முன்னணிக்கு வந்தது.
தென் ஆப்பிரிக்க நாடான, ஈகுவடாரில், பிகோசா என்ற ஊரில், 1967ல் நடந்த மேயர் தேர்தலில், ஓட்டு போட வந்தவர்களில், யாருக்கு உங்கள் ஓட்டு என, ஒரு காகிதத்தில் பெயரை எழுதி, ஓட்டு பெட்டியில் போட கூறினர். இவர்களில் பெரும்பாலானோர், 'புல்வபைஸ்' என்று எழுதியிருந்தனர். தேர்தலுக்காக, விளம்பரங்களை தயாரித்து வெளியிட்ட நிறுவனத்தின் பெயர் அது.
இப்படி பல வேடிக்கை சமாசாரங்கள் இருக்க, இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், விலங்குகளை, கவுன்சிலராக, மேயராக தேர்ந்தெடுத்த கூத்தும் நடந்துள்ளன. அவை:
நியூசிலாந்து நாட்டில் உள்ள, பில்லி கும்பூட் என்ற இடத்தில் நடந்த தேர்தலில், ஒரு ஆடு, 1999ல், நகர தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
அமெரிக்காவின், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஒரு நகரம், சுனோ. இங்கு,1981ல் நடந்த மேயர் தேர்தலில், நகர மேயராக, ஒரு கருப்பு, 'லேப்ரடார்' வகை நாயை தேர்ந்தெடுத்தனர்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில், சாபாலோ நகரின் கவுன்சிலர் தேர்தலில், ஒரு காண்டாமிருகம் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகில் உள்ள சிறிய நகரமான, வெர்மவுன்டில் நடந்த மேயர் தேர்தலில், 'லிங்கன்' என்ற பெயருடைய ஆடு, மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டது.
அப்பாடா... நம்மூரில், இன்னும் இதுபோன்ற நிலை வரவில்லை.
தேர்தல் என்றாலே, சுவாரஸ்யத்துக்கு குறைவு இருக்காது போலிருக்கு!

