sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஏவி.எம்., சகாப்தம் (17)

/

ஏவி.எம்., சகாப்தம் (17)

ஏவி.எம்., சகாப்தம் (17)

ஏவி.எம்., சகாப்தம் (17)


PUBLISHED ON : மார் 31, 2019

Google News

PUBLISHED ON : மார் 31, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னை படப்பிடிப்பின்போது, ஒவ்வொரு காட்சியிலும் தான் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று, மிகவும் கவனம் செலுத்தியவர், பானுமதி.

அதேபோல், தான் பாடும் பாடல் வரிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை, கவிஞரிடமும், எந்தெந்த இடத்தில், எந்தெந்த வாத்தியத்தின் இசையை சேர்க்க வேண்டும் என்பதை இசையமைப்பாளரிடமும் சொன்னார்.

அதன்படி பாடி, அப்பாடலை பதிவு செய்வதில் பங்கு கொண்டார்.

மூன்று முறை இப்பாடலை, 'ரிக்கார்டிங்' செய்தோம். இதில், மூன்றாவதாக எடுத்ததே, எங்கள் எல்லாருக்கும் திருப்தியாகி, சரி சொன்னோம். இரண்டாவதில், வாத்திய இசை சில இடங்களில் சரியாக இல்லை.

ஆனால், 'இரண்டாவதாக, எடுத்தது தான், நன்றாக இருக்கிறது. அதில் தான், நான் நன்றாக பாடியுள்ளேன். அதனால், அதையே பயன்படுத்துங்கள்...' என்று சொல்லி போய் விட்டார், பானுமதி.

ஆனால், அவருக்கு தெரியாமல், நாங்கள், மூன்றாவதாக எடுத்ததையே, படப்பிடிப்பிற்கு எடுத்து வந்தோம்.

பாடலை கேட்ட பானுமதி, 'இது... நான், ஒப்புதல் கொடுத்த பாடல் இல்லை...' என்றார்.

'இல்லை அம்மா... இது, நீங்கள், சொன்ன பாடல் தான்...' என்று எவ்வளவோ சொல்லியும், அவர் கேட்கவில்லை.

'வேண்டுமென்றால் தியேட்டருக்கு வாருங்கள்... நான், ஒப்புதல் செய்த பாடலை, உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்...' என்று, தியேட்டருக்கு நடக்க ஆரம்பித்து விட்டார், பானுமதி.

எல்லாரும் அவர் பின்னே சென்றோம். பானுமதிக்கு முன்னே ஓடிய இன்ஜினியர் சம்பத்திடம், 'பானுமதி அம்மா, 'ரிக்கார்டிங்' செய்த பாடலை கேட்க வருகிறார்...' என்று சொல்லவே, அங்கு, 'ரிக்கார்டிங்'கில் இருந்த சுதர்சனமும், சம்பத்திடம் பாடலை போட்டுக் காட்ட சொன்னார்.

தான், ஒப்புதல் செய்த இரண்டாவது பதிவை உறுதி செய்து, 'இதை வைத்து படம் எடுத்தால் தான், நான் நடிப்பேன்...' என்று உறுதியாக சொல்லி விட்டார், பானுமதி.

இப்படி, அவரின் அதீத பங்களிப்பு, சில நேரங்களில் எங்களுக்கு தொந்தரவாகவும் இருந்திருக்கிறது.

மனதை உருக்கும் நெகிழ்ச்சி மிகுந்த காட்சிகள் நிறைந்த இந்த படத்தில், சந்திரபாபுவின் நகைச்சுவை நடிப்பு, படத்தின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. ஒரு காட்சியில், அவர் மீது, எலி பாய்ந்து ஓடுவது போல நடிக்க வேண்டும் என்று சொன்னவுடன், பயந்து விட்டார், சந்திரபாபு.

பின், நாங்கள் அனைவரும் சேர்ந்து, 'உணர்வுப்பூர்வமான இப்படத்தில், இதுபோன்ற நகைச்சுவை காட்சிகள் இருந்தால் தான், சிறப்பாக இருக்கும். எலியால் உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது. அதன் பயிற்சியாளர் இருக்கிறார்... பயப்பட வேண்டாம்...' என்று தைரியம் கொடுத்த பின், நடிக்க சம்மதித்தார்.

விலங்குகளின் பயிற்சியாளர் எலியை சந்திரபாபு மேலே போடுவார். அது, அவர் மீது பாய்ந்து ஓடுவதைக்கண்டு அலறுவார், சந்திரபாபு. படத்திற்காக இப்படி பல வகைகளிலும் முழு ஒத்துழைப்பு தந்து, நகைச்சுவை விருந்து படைத்தார், சந்திரபாபு.

நடிகர் - நடிகையர் எல்லாருமே, அவரவர் கதாபாத்திரங்களில் ஒன்றி முழு மனதோடு நடித்ததால், அன்னை படம் மாபெரும் வெற்றி கண்டு,

ஏவி.எம்.,மின் வெற்றிப்பட வரிசையில் சேர்ந்து கொண்டது. இதே நடிகர் - நடிகையர் நடிக்க, படத்தை தெலுங்கில் தயாரித்தோம். தெலுங்கிலும் அமோக வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தை இந்தியில் தயாரிக்க நினைத்தோம். பானுமதி, சவுகார் ஜானகிக்கு பதில், இந்தி நடிகையரை வைத்து படம் எடுத்தால் தான் ஓடும். ஏற்கனவே, சண்டிராணி போன்ற இரண்டு, மூன்று படங்களில், பானுமதி நடித்து, அவை வெற்றி பெறவில்லை என்றனர்.

பானுமதி, சவுகார் ஜானகியை போல் நடிக்க, இந்தியில் யாரும் இல்லையே என்பது எங்களுக்கு தெரியும். இருப்பினும், இந்தி நடிகர்களை வைத்தே இப்படத்தை, லாட்லா என்ற பெயரில், தயாரித்து வெளியிட்டோம். ரசிகர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை அறிய, படம் வெளியான தியேட்டர்களுக்கு சென்று, முதல் காட்சியை பார்த்து வந்தவர்களிடம், 'படம் எப்படி இருக்கிறது...' என்று கேட்டோம்.

'என்ன படம் இது... இது, லாட்லா இல்ல... டால்டா...' என்று, கேலி செய்தனர்.

தமிழ் நடிகையரை போல், கதை அம்சத்தை வெளிக்கொண்டு வந்து, மக்களின் மனதில் பதிய வைக்கும் அளவுக்கு, இந்தி நடிகையரின் திறமையான பங்களிப்பு இல்லாமல் போனதால், படம் தோல்வி அடைந்தது.

அன்னை படத்தை, இந்தியில் எடுக்கும்போது, பானுமதி மற்றும் சவுகார் ஜானகி போல் நடிப்பதற்கு அங்கு யாரும் இல்லை என்று தெரிந்தும், விஷப்பரீட்சையில் இறங்கி, கைமேல் பலனை கண்டோம்.

வங்க மொழியில், பொது என்ற பெயரில் நடந்த நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது தான், நானும் ஒரு பெண் படத்தின் கதை. ஸ்ரீசைலேஷ் டே என்பவர் தான், அந்த நாடகத்தின் ஆசிரியர்.

அப்பாவின் நெருங்கிய நண்பரான, கோல்கட்டாவை சேர்ந்த, வி.ஏ.பி.அய்யர் என்பவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, 'வங்க மொழியில், பொது என்னும் நாடகம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. நல்ல கதை...' என, தெரிவித்திருக்கிறார்.

இந்த விஷயத்தை எங்களிடம் சொன்ன அப்பா, 'அந்த நாடகத்தை போய் பார்த்து வாருங்கள்...' என்று, என் சகோதரரையும், இயக்குனர், திருலோகசந்தரையும் அனுப்பினார்.

கோல்கட்டாவுக்கு சென்று, நாடகத்தை பார்த்தவர்கள், பிடித்திருந்ததால், அந்த கதையின் உரிமையை வாங்கி, சென்னை வந்தனர்.

மகனுக்கு அழகான பெண்ணை திருமணம் செய்து வைக்க தந்தை ஆசைப்படுகிறார். ஆனால், மகனோ, அவர் விருப்பத்திற்கு மாறாக, கருப்பான பெண்ணை திருமணம் செய்து விடுகிறான்.

கருப்பு மருமகளை, மாமனாருக்கு பிடிக்கவில்லை. அவளை, கடுமையான வார்த்தைகளால் கொடுமைப்படுத்துகிறார். இதற்கு தீர்வு, படத்தின் இறுதியில் தெரியும்.

இந்த கதையை கேட்டு, இதுபற்றி எங்களிடம் விவாதித்த அப்பா, 'கதை நன்றாக இருக்கிறது. இருந்தாலும், இதை இப்படியே நாம் படம் எடுக்க முடியாது. கதையில் கொஞ்சம் அழுத்தம் தேவை. அதனால், இக்கதையை ஆதாரமாக வைத்து, தமிழுக்கு தகுந்தபடி சில மாற்றம் செய்து, படம் பண்ணுங்கள்...' என்றார்.

அதோடு, 'இயக்குனர்கள், கிருஷ்ணன் - பஞ்சுவை, கதையை தயார் செய்யச் சொல்லுங்கள்... அவர்கள் நல்ல முறையில் செய்து கொடுப்பர்...' என்றும் கூறினார்.

‑— தொடரும்.

ஏவி.எம்.குமரன்






      Dinamalar
      Follow us