
வணக்கத்துக்குரிய தந்தை!
அரசு மற்றும் வங்கி பணி தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் நிலையத்தை நடத்தி வரும், நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, அங்கு வந்த நபர், தன்னை அறிமுகப்படுத்தி, 'அரசு பணிகளில் வேலை வாய்ப்பு மற்றும் திருநங்கையருக்கு, அரசு பணிகளில் சலுகை, இட ஒதுக்கீடு, தனியாக படித்து பட்டம் பெற முடியுமா...' எனக் கேட்டார்.
'தாராளமாக பட்டம் பெறலாம். கடந்த சில ஆண்டுகளாக, திருநங்கையர் வாழ்வில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி, தேர்வுகளிலும், வேலை வாய்ப்புகளிலும், கடந்த ஆண்டிலிருந்து குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டை அளித்து வருகிறது, அரசு.
'மேலும், சில பல்கலைக் கழகங்களில், திருநங்கையருக்கு, கல்லுாரி படிப்பை, ஊக்கத் தொகையுடன் இலவசமாக வழங்குகிறது. மற்றவர்களை போல், அவர்களும் படித்து, பட்டம் பெறலாம். தமிழகத்தில், போலீஸ், வக்கீல் என்று பல துறைகளில், திருநங்கையர், சாதிக்க துவங்கி விட்டனர்...' என்று விளக்கமளித்தார்.
'யாருக்காக இதையெல்லாம் கேட்டீர்...' என்றார், நண்பர்.
'என் மகனுக்கு தான். சமீபத்தில் தான், அவன், திருநங்கை என்பதை அறிந்தேன். அதற்காக, மனதளவில் அவன் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி, எங்களையும் வருத்தப்படுத்தினான். நம்பிக்கையளித்து, தொடர்ந்து படிக்க வைத்து, அவனை அரசு பணியில் அமர்த்த ஆசை. நீங்கள் அதற்கு உதவுவீர்களா...'என்று கேட்டார்.
உதவுவதாக உறுதியளித்தார், நண்பர்.
பெற்றோரே... மகனோ, மகளோ, திருநங்கை என, தெரிய வந்தால், வீட்டை விட்டு விரட்டாதீர்... அவர்களும், மனிதர்கள் தான்... அவர்களாலும் சாதிக்க முடியும் என, நினைத்தால், சமூகத்தில் அவர்களும், கவுரவமாக வாழ்வர்.
- தி.உத்தண்டராமன், சிவகாசி.
இரவு நேர உதவி... எச்சரிக்கை!
திருமண விழாவிற்காக, நண்பரும், நானும் காரில் சென்னை சென்று கொண்டிருந்தோம். விக்கிரவாண்டி, சுங்கசாவடியை கடக்கும்போது, அதிகாலை, 2:00 மணி ஆகியிருந்தது.
துாக்கத்தை விரட்ட, டீ குடிக்கலாம் என, சாலையோர கடையில் காரை நிறுத்தினார், நண்பர். அப்போது, எங்களை நெருங்கிய, இரு இளைஞர்கள், 'பைக் பழுதாகி விட்டது. மொபைல் போனில், இருப்பு தொகை இல்லை. வீட்டுக்கு தகவல் கூறி, மெக்கானிக்கை வரச்சொல்ல, மொபைல் போன் தருகிறீர்களா...' எனக் கேட்டனர்.
அவர்களிடம், மொபைல் போனை கொடுத்தார், நண்பர். வாங்கியதும், பேசுவது போல, பைக் பக்கம் சென்றவர்கள், விருட்டென வண்டியை கிளப்பி, வேகமாக சென்றனர். நாங்கள் காரில் பின் தொடர்ந்து, அவர்களது பைக்கை மடக்கி, மொபைல் போனை மீட்டோம்.
அப்போது, அவ்வழியாக வந்த, நெடுஞ்சாலை ரோந்து போலீசிடம், விஷயத்தை சொன்னோம். விசாரித்ததில், இருவருக்கும், இதே வேலை தான்; ஓட்டி வந்த பைக்கும், திருடி வந்தது, தெரிய வந்தது.
இரக்கப்பட்டு உதவி செய்ததற்கு, எங்களுக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்தனர். அவர்கள் இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்து, வேதனையோடு அங்கிருந்து கிளம்பினோம்.
வாசகர்களே... இரவு நேரத்தில், காரிலோ - பைக்கிலோ பயணம் செய்யும் போது, அறிமுகம் இல்லாதோர், உதவி கேட்டால், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
— அ.ப.சங்கர், கடலுார்.
உறவு முறைகளை சொல்லிக் கொடுங்கள்!
சமீபத்தில், அமெரிக்காவிலிருந்து நண்பரின் மகன், குடும்பத்துடன், தந்தையை பார்க்க வந்திருந்தார். அண்ணன், தம்பிகளுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார், நண்பர்.
அமெரிக்காவிலிருந்து வந்திருந்த பேரக் குழந்தைகள், பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா என்று, தமிழில் உறவு முறைகளை சொல்லி அழைத்தது, வியப்பாக இருந்தது.
இதுபற்றி நண்பர் மகனிடம் கேட்டதற்கு, 'அமெரிக்காவில் இருப்பதை பெருமையாக கூறினாலும், தாய் நாட்டை விட்டு போன நாங்கள் எல்லாரும், அங்கே அகதிகள் தானே... அது மட்டுமில்ல, அமெரிக்காவுல கூட்டுக் குடும்பங்கிற பேச்சுக்கே இடமில்லை...
'அஞ்சு வயசு ஆனவுடனேயே குழந்தைகளை பிரிச்சு, தனி அறையில் துாங்க வைக்கிறாங்க... 'மம்மி, டாடி, ஆன்ட்டி மற்றும் அங்கிள்'ங்கிற சின்ன வட்டத்துக்குள்ளேயே, அவங்க உறவு முறை எல்லாமே இருக்குது. சித்தப்பா, பெரியப்பா, மாமா, மச்சினன் என்பதெல்லாம், அவங்களுக்கு எட்டாத விஷயம்.
'நம்ம கூட்டுக் குடும்ப வாழ்க்கையை பார்த்து, அவர்கள் பிரமிச்சு போறாங்க... குழந்தைகளுக்கு, நம் கலாசாரத்தையும், பண்பாட்டையும், உறவு முறைகளையும் சொல்லி கொடுப்பதில் என்ன தவறு?
'அதனால் தான், வீட்டுல இருக்கிற ஒவ்வொருத்தரை பற்றியும், அவங்க நமக்கு என்ன உறவு, அவங்களை எப்படி கூப்பிடணும் என்றெல்லாம் சொல்லி குடுத்திருக்கோம்...' என்றார்.
வெளிநாட்டு மோகத்தில், தொட்டதற்கெல்லாம் நம் நாட்டை குறை சொல்லி கொண்டிருக்கும் நம் ஆட்கள், இதை படித்த பிறகாவது திருந்துவரா?
— எஸ்.கே.ராமசாமி, சென்னை.

