
மின்னல் வேகத்தில் ஒன்றிரண்டு விநாடிகளே காட்சி தந்து, உடனே திரை போட்டு மறைத்து விடும் சிவலிங்கம், கடலுார் மாவட்டம், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் உள்ளது.
பிரகலாதனின் பேரன் மகாபலியின், நற்குணத்தையும், தர்ம நிலையையும் உலகிற்கு எடுத்துக் காட்ட விரும்பினார், விஷ்ணு. எனவே, காஷ்யபருக்கும், அதிதி தேவிக்கும் மகனாக, வாமனன் என்ற பெயரில் அவதரித்தார். 
மகாபலியின் கர்வத்தை அடக்க, 3 அடி மண்ணை தானமாகக் கேட்டார், வாமனன். 1 அடியால் பூமியையும், மற்றொரு அடியால் ஆகாயத்தையும் அளந்து, '3வது அடி எங்கே...' என, கேட்டார். அதற்கு மகாபலி, 'என்னையே அளந்து கொள்ளுங்கள்...' என, வாமனனை பணிந்தார். 
மகாபலியை, என்றும் அழியாத சிரஞ்சீவிகளுள் ஒருவராக்கிய வாமனன், அவனை, பாதாள உலகம் அனுப்பினார். தானம் கொடுத்தவரை, தண்டித்ததால், விஷ்ணுவுக்கு பழி ஏற்பட்டது. இதைப் போக்க, திருமாணிக்குழி வந்து, சிவனை பூஜித்தார். இதனால், சிவனுக்கு, வாமனபுரீஸ்வரர் என, பெயர் வந்தது.
சிவபெருமான், தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும், அஞ்ஞானத்தை நீக்கவும், சதா சர்வ காலமும் பார்வதியுடன் இணைந்து இருப்பதால், இங்கு, அவரை, நேரிடையாக தரிசிக்க இயலாது. கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதாக ஐதீகம் என்பதால், தனி பள்ளியறையும் கிடையாது. 
பூஜை வேளையில், மூலஸ்தானத்திலுள்ள திரைக்கு முதலில் பூஜை செய்வர்; சற்று நேரத்தில் அதை அகற்றுவர். அப்போது, சிவலிங்கத்தை காணலாம். சில நொடிகளில் திரையை மூடி விடுவர். இந்த கருவறையை காவல் புரிய, சிவனின் அம்சமான, 11 ருத்ரர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவரான, 'பீமருத்ரர்' திரைச்சீலை வடிவில் இருப்பதாக ஐதீகம்.
விநாயகர் எதிரே, மூஷிக வாகனம் இருப்பது வழக்கம்; இங்கு, விநாயகரின் அருகில் உள்ளது. துர்க்கையின் பாதத்திற்கு கீழ், எருமை தலை கிடையாது. கையில் உள்ள சக்கரம் திரும்பி உள்ளதுடன், கதாயுதமும் தாங்கியிருப்பது, மற்றொரு விசேஷம். 
சிவனின் எதிரில் உள்ள மண்டபத்தில், நான்கு வேதங்களும், நான்கு துாண்களாக உள்ளன. திரைக்கு பின் அம்மனும், சுவாமியும் இருப்பதால், நந்தி எப்போதும் விழிப்புடன் காவல் புரிகிறார். 
மதுரை, காஞ்சிபுரம், காசி, திருவாரூர், நாகப்பட்டினம் போல, இங்கும், அம்மனின் ஆட்சியே நடக்கிறது. அம்புஜாட்சி எனப்படும் இவளது கைகளில் தாமரை மற்றும் நீலோத்பவ மலர்கள் உள்ளன. 
குழந்தை இல்லாதோர், அமாவாசையன்று, அம்மன் சன்னிதியை, 11 முறை சுற்றி வந்து, வெண்ணெய் நைவேத்யம் செய்து, அதை, 48 நாள் சாப்பிட்டு வந்தால், விரைவில் மகப்பேறு வாய்க்கும் என, நம்புகின்றனர். 
கார்த்திகை மாதம், ரோகிணி நட்சத்திரத்தில், கோவில் எதிரில் உள்ள மலை மீது, மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. பவுர்ணமியன்று, பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
மூன்று பிரகாரம், ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் செல்வ விநாயகர், உதவி விநாயகர், ஆறுமுகர், நாயன்மார், சப்தமாதர் மற்றும் பஞ்சமூர்த்தி சன்னிதிகள் உள்ளன. 
மேலும், யுகலிங்கங்கள், விஷ்ணு லிங்கம், சமயக்குரவர்கள், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர் மற்றும் சூரிய, சந்திரன் சன்னிதிகளும் உள்ளன. 
கடலுார் - சங்கரபுரம் சாலையில், 12 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.
தி.செல்லப்பா

