
சுயசரிதை படத்தில், இளையராஜா!
பிரதமர் மோடி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாறு கதைகள் திரைப்படமாகி வரும் நிலையில், 1,000 படங்களுக்கு மேல் இசையமைத்து, 'கின்னஸ்' சாதனை செய்துள்ள, இளையராஜாவின் வாழ்க்கை கதையும் திரைப்படமாகிறது. இது குறித்து அவர் கூறுகையில், 'என் வாழ்க்கை வரலாறை, சுயசரிதையாக எழுதி வருகிறேன். அதில், என் வேடத்தில் நானே நடிக்கவும் தயாராக இருக்கிறேன். என் வாழ்க்கை வரலாறை, வெறும் மூன்றே நாட்களில் படமாக்கி விடலாம்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
தமன்னாவை கவர்ந்த, நடிகர்!
மும்பை நடிகையான தமன்னா, பல படங்களில் முத்தக் காட்சியில் நடித்து விட்டார். என்றாலும், 'பிரபல ஹிந்தி நடிகரான, ஹிருத்திக் ரோஷனுடன், ஒரு படத்திலாவது, முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என்பது, என் நீண்ட நாள் ஆசை... அதற்கு காரணம், அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதோடு, நான் பள்ளியில் படித்தபோது பார்த்தது மாதிரியே இப்போது வரை இருப்பது தான். அவரது வளர்ச்சியும், இளமையை பாதுகாக்கும் விதமும் என்னை ரொம்பவே கவர்ந்துள்ளது...' என்கிறார்.
— சி.பொ.,
'மெச்சூரிட்டி' ஆன கீர்த்தி சுரேஷ்!
நடிகையர் திலகம் படத்தில், மறைந்த நடிகை சாவித்திரியின் வேடத்தில் நடித்தது, கீர்த்தி சுரேஷுக்கு, திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், அதன்பின், இளவட்ட நடிகையாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால், மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் கதையின் நாயகியாக. நடிக்கும், கீர்த்தி சுரேஷ், இந்தியில் அஜய் தேவ்கானின் மனைவியாக, 40 வயது பெண்ணாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விழுந்து விழுந்து புரண்டாலும், ஒட்டுவது தான் ஒட்டும்!
— எலீசா
ஓவியாவின் இனிப்பு செய்தி!
ஓவியாவிற்கு ஒரு குறிப்பிட்ட ரசிகர் படை இருந்தபோதும், முன்னணி நடிகர்களுடன், 'டூயட்' பாடும் வாய்ப்பு, குதிரைக் கொம்பாக உள்ளது. அதனால், முன்வரிசை நடிகர்களுடன் குத்தாட்டம் ஆடியாவது, தன் ஆசையை நிறைவேற்ற, வாய்ப்புகளுக்கு கல்லெறிந்து வருகிறார். கூடவே, தான் எதிர்பார்க்கிற வாய்ப்புகளை கொடுத்தால், சம்பளத்தில், 50 சதவீதத்தை தள்ளுபடி செய்வதாகவும், தயாரிப்பாளர்களுக்கு, இனிப்பு செய்தி வெளியிட்டுள்ளார். போனால் வராது; பொழுது போனால் நிற்காது!
— எலீசா
வடிவேலு இடத்தை பிடிப்பாரா, யோகிபாபு!
வடிவேலுவின் காமெடி மார்க்கெட் சுத்தமாக சரிந்தபோதும், தப்பித்தவறி யாரேனும் அவரை நடிக்க அழைத்தால், 'இப்போது நடிக்க வேண்டுமென்றாலும், அதே பழைய சம்பளத்தை தரவேண்டும்...' என்று அடம் பிடிக்கிறார். இதனால், ஆடிப்போகும் தயாரிப்பாளர்கள், வடிவேலுவுக்காக வைத்திருந்த கதைகளுக்கு, யோகிபாபுவை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். வடிவேலு விட்டுச்சென்ற இடத்தை நிரப்பி விடவேண்டும் என்று, காமெடியில் மேலும் விஸ்வரூபமெடுக்க தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார், யோகிபாபு.
—சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
* ஒரு பட விழாவில், தாரா நடிகையை மிக மட்டமாக விமர்சித்து பேசிய, 'மாஜி' வில்லனுக்கு, திரையுலகில் எதிர்ப்பு வலுத்துள்ளது. ஏற்கனவே, சண்டக்கோழியுடன் மல்லுக்கு நின்றவர், இவர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடிகருக்கு கண்டனம் தெரிவித்துள்ள, சண்டக்கோழி, மேற்படி வில்லனுக்கு, 'ரெட் கார்டு' போடுவதற்கான சூழலை உருவாக்கி வருவதாக, கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர்.
'டேய் மச்சான்... இந்த ரவி பய, நம்மளாண்ட, 'ராங்' செய்துட்டு, தெனாவட்டா பேசிட்டு திரிஞ்சான்ல... அதே மாதிரி, நம்ம சொர்ணாக்காகிட்டயும் பேசியிருக்காண்டா... சரியா வச்சாங்கடா ஆப்பு...' என்றான், மார்க்கெட் மன்னாரு.
* உச்ச நடிகரின் புதிய படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் நடக்க இருந்தது. ஆனால், இது தேர்தல் நேரம் என்பதோடு, நடிகரை ரொம்பவே எதிர்பார்த்த கட்சியினருக்கு, தன் ஆதரவை தெரிவிக்கவில்லை. இதனால், அவரை ஏதாவது ஒரு விதத்தில் சிக்க வைக்க, கங்கணம் கட்டி திரிகின்றனர், கட்சியினர். அதன் காரணமாக, தன் படத்தின் படப்பிடிப்புக்கு பணம் எடுத்து செல்லும்போது, ஏதாவது சிக்கலில் சிக்க வைத்து விடுவர் என்று உஷாராகிய நடிகர், தேர்தலுக்கு பின் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று, தள்ளி வைத்து விட்டார்.
'தேர்வு எழுதறதுக்கு முன்பே, இந்த கேள்விகள் தான் வரும்ன்னு, 'க்ளூ' கொடுத்தீயே... சூப்பர் தலைவா...' என்று, கல்லுாரி மாணவர் தலைவன் ரஜினியை பாராட்டினான், சக மாணவன்.
சினி துளிகள்!
* தர்மபிரபு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், ராதாரவி.
* சந்திரமுகி, குசேலன் மற்றும் சிவாஜி (ஒரு பாடலுக்கு) படங்களைத் தொடர்ந்து, ரஜினிகாந்தின், 166வது படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், நயன்தாரா.
அவ்ளோதான்!