
குருவருளை விளக்கும், வரலாற்று நிகழ்ச்சி இது:
வீர சிவாஜியின் குரு, ராமதாசர். ராமதாசருக்கு, அம்பாதாஸ் என்று, மற்றொரு சீடரும் உண்டு. நல்ல பழக்க வழக்கங்களும், நன்னடத்தையும் உள்ள அம்பாதாசிற்கு, ஸ்ரீராமரை நேரில் தரிசிக்க வேண்டும் என்று, தணியாத ஆவல் இருந்தது. கடுந்தவம் செய்தும், அவருக்கு, ராமரின் தரிசனம் கிடைக்கவில்லை.
ஸ்ரீராம தரிசனம் கிடைக்கவில்லையே என்ற கவலை இருந்தாலும், குருவிற்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை முழு மனதோடு செய்து வந்தார்; எந்த குறையும் வைக்கவில்லை.
ஒரு சமயம், ராமதாசரும், சீடர்களும் வெளியூர் சென்ற போது, வழியில், ஒரு பெரும் கிணற்றையும் அதன் அருகில் இருந்த பெரிய மரத்தையும் பார்த்தனர். மரத்தின் நிழலில் சற்று நேரம் தங்கலாம் என்று, குரு தீர்மானிக்க, அனைவரும் அங்கு தங்கினர்.
மரத்தின் கிளை ஒன்று, கிணற்றிற்கு மேலே படர்ந்திருந்தது. அதைக்கண்ட குரு, அம்பாதாசை கூப்பிட்டு, 'கோடாலியால் மரக்கிளையை வெட்டு...' என்றார்.
குரு பக்தியிலும், -கைங்கரியத்திலும் தலைசிறந்த அம்பாதாசும், உடனே, கோடாலியுடன் மரத்தில் ஏறினார். அப்போது, 'நுனி கிளையில் உட்கார்ந்து அடி கிளையை வெட்டு...' என்றார், ராமதாசர்.
அதன்படியே, அம்பாதாசும் நுனி கிளையில் உட்கார்ந்து, அடி கிளையை வெட்டத் துவங்கினார். அதைப் பார்த்த மற்ற சீடர்கள் பயந்தனர்.
'நுனி கிளையில் உட்கார்ந்து அடி கிளையை வெட்டினால், இவர், கிணற்றில் அல்லவா விழுவார்...' என்று சொல்லவும் செய்தனர்.
அதற்கேற்றாற் போல் ராமதாசரும், 'நுனி கிளையில் உட்கார்ந்து அடி கிளையை வெட்டுகிறாயே... கிணற்றில் விழுந்தால், என்ன செய்வாய்?' என, கேட்டார்.
'பிறவிப் பெருங்கடலில் இருந்து அடியேனை காப்பாற்றப் போகும் தாங்கள், இந்த கிணற்றில் இருந்து அடியேனை காப்பாற்ற மாட்டீர்களா?' என்று பணிவோடு சொல்லி, வெட்டும் வேலையை தொடர்ந்தார், அம்பாதாஸ்.
கொஞ்சநேரம் ஆனதும், 'சடசட'வென்று கிளை முறிய, முறிந்த கிளையுடன், அம்பாதாஸ் கிணற்றில் விழுந்தார். 'எதிர்பார்த்தாற் போலவே நடந்து விட்டதே...' என்று பதறினர், மற்ற சீடர்கள்.
குருநாதரான ராமதாசரோ, சீடர்களுக்கு ஏதோ வேதாந்த விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். சீடன் கிணற்றில் விழுந்ததை பற்றி, எந்த பதட்டமும் இல்லை அவருக்கு.
அதே சமயம், கிணற்றில் விழுந்த அம்பாதாசுக்கு, தரிசனம் தந்தார், ஸ்ரீராமர். சீடரின் மகிழ்ச்சி, எல்லை கடந்தது. அந்த மகிழ்ச்சியிலேயே, அவர் சிரமப்பட்டு, கிணற்றின் மேல் பகுதிக்கு ஏறி வந்தார்.
வந்தவுடன், குருநாதரின் திருவடிகளில் விழுந்து, 'குருநாதா... தங்கள் அருளால் தான், அடியேனுக்கு, ஸ்ரீராம தரிசனம் கிடைத்தது; நானும் புண்ணியம் செய்தவன் ஆனேன்...' என்றார்.
எந்தெந்த நோய்க்கு எந்தெந்த மருந்தை, எப்படி கொடுக்க வேண்டும் என்பது, அனுபவப்பட்ட மருத்துவர்களுக்குத் தெரியும். அதுபோல, சீடர்களுக்கு எப்படி அருள்புரிவது என்பது, உத்தம குருநாதர்களுக்கு தெரியும்.
குரு பக்தி, குறைகளை தீர்க்கும்!
பி.என்.பரசுராமன்
ஆலய அதிசயங்கள்!
தேனி மாவட்டம், தெப்பம் பட்டியில், வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர், சுயம்பு மூர்த்தி. இந்த கோவில் அருகில் உள்ள மா மரத்தின் அடியிலிருந்து, ஊற்று நீர் பொங்கி வந்தபடி இருக்கும்.