
'சின்ன சின்ன செய்திகள்' நுாலிலிருந்து: இந்தியாவிலுள்ள தலைசிறந்த ஓட்டப் பந்தய வீரர்களில் முதன்மையானவர், மில்கா சிங். 1960ல், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள இத்தாலி நாட்டின் தலைநகர் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், மயிரிழையில் பதக்கத்தை நழுவ விட்டவர்.
அவருக்கு, 'பறக்கும் சீக்கியர்' என்ற பட்ட பெயர் உண்டு.
'பறக்கும் சீக்கியர்' என்ற பெயர் வந்தது பற்றி சுவையான செய்தி உள்ளது: ஒரு சமயம், நமது அண்டை நாடான, பாகிஸ்தானில் நடந்த, தடகள போட்டிக்கு, மில்கா சிங் அழைக்கப்பட்டார். போட்டியில் பங்கேற்க அவருக்கு துளியும் விருப்பமில்லை. நமது நாட்டில் இருந்து, பாகிஸ்தான் பிரிந்த போது நடந்த கலவரத்தில், மில்கா சிங்கின் பெற்றோர் கொல்லப்பட்டதே, அதற்கு காரணம்.
இருப்பினும், அரசின் விளையாட்டு துறை வற்புறுத்தியதால், போட்டியில் பங்கேற்க, பாகிஸ்தான் சென்றார். அச்சமயம், பாகிஸ்தானில், அப்துல் கலீக் என்ற ஓட்டப்பந்தய வீரர் இருந்தார். அப்துல் கலீக்கின் வேகத்திற்கு முன், மில்கா சிங்கால் தாக்குப்பிடிக்க முடியாது என்று உறுதியாக நம்பினர், பாகிஸ்தானியர்.
ஓட்டப் பந்தயத்தை காண, பாகிஸ்தானின் அப்போதைய அதிபரான, ஜெனரல், அயூப்கான் வந்திருந்தார்.
போட்டி ஆரம்பமானது. துப்பாக்கியிலிருந்து வெடி சத்தம் கேட்டவுடன், அம்பு போல பாய்ந்தார், மில்கா சிங். இவரை, பாகிஸ்தான் வீரர், அப்துல் கலீக்கால், நெருங்க முடியவில்லை.
முதலில் வெற்றி இலக்கை அடைந்த, மில்கா சிங்கை பார்த்து, அசந்து போயினர், பாக்., மக்கள்.
வெற்றி கோப்பையை, மில்கா சிங்கிடம் கொடுத்த, அதிபர் அயூப்கான், 'நீ ஓடுவாய் என்று நினைத்தேன். ஆனால், மைதானத்தில், ஒரு பறவையை போல பறந்தாய். உனக்கு ஒரு பெயர் சூட்ட விரும்புகிறேன். இன்றிலிருந்து உன்னை எல்லாரும், 'ப்ளையிங் சீக்' - 'பறக்கும் சீக்கியர்' என்று அழைக்கட்டும்...' என்றார்.
பாக்., அதிபர், அயூப்கான் எந்த நேரத்தில் இந்த பெயரை சூட்டினாரோ, மில்கா சிங்கை, 'பறக்கும் சீக்கியர்' என்றே அழைக்க ஆம்பித்தனர்.
டாக்டர் மெ.ஞானசேகர் எழுதிய, 'சான்றோர் சாதனைகள்' எனும் நுாலிலிருந்து: ஒரு சமயம், விடுமுறைக்காக, கார் தொழிலில் கொடி கட்டி பறந்த, ஹென்றி போர்டு, ஐரோப்பிய நாடான அயர்லாந்து நாட்டின் தலைநகர், டப்ளின் நகருக்கு சென்றிருந்தார்.
அந்நகரை சேர்ந்த ஓர் அனாதை விடுதியின் பிரதிநிதி, போர்டை சந்தித்து, தாங்கள் கட்ட போகும் ஒரு புதிய கட்டடத்திற்கு நிதி கேட்டார். உடனடியாக, அவரிடம், '2,000 டாலர்...' என்று, காசோலையில் எழுதி கொடுத்தார், போர்டு.
மறுநாள் காலையில், டப்ளின் நகரில் வெளிவரும், ஒரு பெரிய பத்திரிகையில், அனாதை இல்லம் கட்டுவதற்கு, போர்டு, 20 ஆயிரம் டாலர் கொடுத்ததாக செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த தவறுக்கு, மன்னிப்பு கேட்க, போர்டு தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று, அவரை சந்தித்து விளக்கம் தந்ததோடு, தவறுக்கு, மன்னிப்பும் கேட்டார், அனாதை விடுதி பிரதிநிதி.
'அதனால் ஒன்றுமில்லை... இதோ, மீதி, 18 ஆயிரம் டாலருக்கான காசோலை...' என்று வேறொரு காசோலையை கொடுத்தார், போர்டு.
அதோடு, புதிய கட்டடத்தின் நுழைவாயிலில், ஒரு கல்லில் பின்வருமாறு கட்டாயம் எழுதி, பதிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். 'நான் இங்கு அன்னியனாக வந்தேன். நீங்கள் என்னை உள்ளே சேர்த்துக் கொண்டீர்கள்...' என்பதே, அவ்வாசகம்.
'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்!' எனும் நுாலிலிருந்து: ஒருமுறை, அறிஞர் பெர்னாட்ஷா, பழைய புத்தக கடையொன்றில் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தார். அங்கே, அவர் எழுதிய நுால் ஒன்று, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
அந்த புத்தகத்தை பிரித்து பார்த்தார். அதில், நண்பரின் பெயரை எழுதி, அன்பளிப்பு என்று குறிப்பிட்டு கையெழுத்திட்டிருந்தார், பெர்னாட்ஷா. ஆனால், நண்பரோ, அதன் மதிப்பையும், அதில் புதைந்துள்ள அன்பின் ஆழத்தையும் அறியாதவராய், பழைய புத்தக கடையில் போட்டிருக்கிறார்.
அந்த புத்தகத்தை விலைக்கு வாங்கி, மீண்டும் அந்த நண்பரை சந்தித்து, 'புதுப்பிக்கப்பட்ட நட்புடன்' என்று எழுதி பரிசளித்தார், பெர்னாட்ஷா.
அதன் பிறகே, அந்த புத்தகத்தை, மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார், அந்த நண்பர்.
நடுத்தெரு நாராயணன்