
என் வயது, 40. கணவர் வயது, 44. ஒரே மகன், 10ம் வகுப்பு படிக்கிறான்.
என் கணவர், துணி வியாபாரம் செய்கிறார்.
மும்பையில் இருந்து மொத்தமாக துணிகளை வாங்கி, ஜவுளி கடைகளுக்கு, வினியோகம் செய்து வருகிறார். எனவே, அடிக்கடி வெளியூர் சென்று கொண்டிருப்பார்.
ஒரே மகன் என்பதால், செல்லம் கொடுத்து, அவன் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுப்பேன். நகரில் மிகப்பெரிய பள்ளியில் சேர்த்தோம். எட்டாம் வகுப்பு வரை நன்றாக படித்தான்; அதன்பின், படிப்பில் மந்தமானான்.
மாலையில், நண்பர்களுடன், ஒரு மணி நேரம் விளையாடுவான். அது, வர வர குறைந்து, தனி அறையில் முடங்கினான்.
'ஏன் விளையாட செல்லவில்லை...' என்று கேட்டால், 'வீட்டுப்பாடம் செய்கிறேன், படிக்கிறேன்...' என்று கூறுகிறான். நானும், சின்ன பையன், விட்டு பிடிக்கலாம் என்று பொறுமையாக இருந்தது, தவறாகி விட்டது.
ஒருமுறை, அவன் அறைக்குள் சென்று, 'லேப்-டாப்'பை பார்த்ததும், அதிர்ந்து போனேன். பலான படங்களை, பதிவிறக்கம் செய்து பார்த்து, மனதை கெடுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
அவன், பள்ளி விட்டு வந்ததும், திட்டி, பேசாமல் இருந்தேன். அப்படியாவது திருந்துவான் என்று நினைத்தால், திருந்தவில்லை. எனவே, வலைதள இணைப்பை துண்டித்தேன்.
பிரச்னை இதோடு முடியவில்லை.
தொடர்ந்து தனிமையில் இருந்ததோடு, யாரிடமும் பேசாமல், முரட்டுத்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்தான்.
மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முயன்றபோது, வர மறுத்தான். 'வலுக்கட்டாயமாக அழைத்து சென்றால், தற்கொலை செய்து கொள்வேன்...' என, மிரட்டுகிறான்.
கணவரோ, 'இதெல்லாம் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, கண்டிக்காமல் விட்டு விட்டாயே...' என்று என்னை கோபித்துக் கொள்கிறார்.
அவனை எப்படி திருத்துவது, படிப்பில் கவனம் செலுத்த வைப்பது எப்படி?
நல்வழி காட்டுங்கள்.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
பருவமடைந்த பெண்ணின் முழு உடலை பார்க்க வேண்டும் என, ஒரு ஆணுக்கும்; பருவமடைந்த ஆணின் முழு உடலையும் பார்க்க வேண்டும் என, ஒரு பெண்ணுக்கும், குறுகுறுப்பு இருப்பது இயற்கையே. பெரும்பாலும், 'நீல படம்' பார்க்கும் வாய்ப்பு, விடலை சிறுவர்களுக்கு, அவர்களது, 11 வயதில் கிடைத்து விடுகிறது.
'அந்த' மாதிரியான படம் பார்ப்பது - குடி, புகை மற்றும் போதை பொருள் பழக்கம் போல, ஒரு ஈர்ப்பு தான். இப்படம் பார்க்கும் விடலை சிறுவர்களுக்கு, 'எண்டார்பின் ஹார்மோன்' அதிகம் சுரக்கிறது. மோசமான குடும்ப சூழலும், தவறான குழந்தை வளர்ப்பும் கூட, காரணிகளாக அமைகின்றன.
'நீ ஒரு மோசமான கொலை குற்றவாளி. உன்னை கையும் களவுமாக பிடித்து விட்டேன். உனக்கு துாக்கு தண்டனை தருகிறேன் பார்...' என்ற பாவனையில், மகனை அணுகாதே. 'மகனே... உனக்கு வந்திருப்பது, காய்ச்சல், ஜலதோஷம் போன்ற ஒரு நோய். அன்பாய், கரிசனமாய் அணுகி, உன் பிரச்னையை தீர்ப்பேன்...' என்ற பாவனையில் அணுகு.
தனிமையில் அவனை இருக்க விடாதே. ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டரை மகன் கையாள முடியாவண்ணம், சங்கேத சொல் போட்டு, பூட்டு. அடிக்கடி, சங்கேத சொல்லை மாற்று. ஆணையிடும் விதமாக, குரலை உயர்த்தாமல் தாய்மையுடன் பேசு. அவனது தவறான நண்பர்களை கத்தரி.
பெண் மனநல மருத்துவரை அணுகி, மகனின் பிரச்னையை கூறு. உறவினர் என்ற போர்வையில், மனநல மருத்துவரை வீட்டுக்கு வரவழைத்து, மகனிடம் பேச வை.
உன் மகனை, 'அந்த' மாதிரியான பட அரக்கனிடமிருந்து பாதுகாக்க...
* விபரம் தெரிந்த நாளிலிருந்தே குழந்தைகளை, 'இவை நல்ல படங்கள், இவை கெட்ட படங்கள்' என, பகுத்து பார்த்து, கெட்ட படங்களை புறக்கணிக்கும் மன உறுதியை வளர்க்க வேண்டும். நண்பர்கள், அப்படங்களை அறிமுகப்படுத்தினால், 'இது எனக்கு வேண்டாம்...' என்ற மன உறுதியை, குழந்தைகளுக்கு கொண்டு வரவேண்டும்
* ஏன் இப்படம் பார்க்கிறான், தனிமையில் இருக்கிறானா, ஏதாவது எதிர்மறை எண்ணங்களில் மூழ்கி இருக்கிறானா, அவனது தீய நடத்தைக்கு, நம்மின் நடத்தை காரணமாக இருக்கிறதா என ஆராய்ந்து, மகனிடமிருந்து, 'அந்த' மாதிரியான படம் பார்க்கும் பழக்கத்தை அகற்ற வேண்டும்
* 'இப்படத்தின் வீரியத்தை, கெடுதியை குறைத்து மதிப்பிடக் கூடாது. இப்படத்தில் வரும் பெண்கள், கடத்தப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள், போதை பழக்கத்துக்கு அடிமையாக்கப்பட்டவர்கள். அவர்களை ரசிக்காதே. அவர்களின் நிலை கண்டு பரிதாபப்படு மகனே...' என, கூறுதல் நலம்
* 'அந்த' மாதிரியான படம் பார்ப்பது, மகனின் எதிர்காலத்தை எப்படியெல்லாம் பாழ்படுத்தும் என்பதை, அவனையே சிந்திக்க வைக்க வேண்டும்
* வெளிப்படையான, அதே நேரம் வயதுக்கு தக்க ஆண் - பெண், உடல் ரீதியான தகவல்களை மகனுக்கு நாசூக்காக சொல்லலாம்
* இணையத்தில், 'போர்டிபை' என்ற, நீல படங்களுக்கு எதிரான ஆலோசனை நிகழ்ச்சிகள் உள்ளன. அதை பார்க்க செய்யலாம். எந்த பிரச்னையானாலும் பேசி தீர்த்துக்கொள்ளும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை, வீட்டில் அமல்படுத்து
* 'படித்து வேலைக்கு போனால், அழகிய பெண்ணை திருமணம் செய்து கொள்வாய். அப்போது, சமூகம் அனுமதித்த எல்லாம் திகட்டத் திகட்ட கிடைக்கும். பொறுத்தார் பூமி ஆள்வார் மகனே...' என, மகனின் மனதை ஒருமுகப்படுத்து.
- என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.