PUBLISHED ON : ஏப் 07, 2019

அடுத்த நாள், சுற்றுலா ஏற்பாட்டின்படி, பயணத் திட்டம் ஏதுமில்லை; ஓய்வு. ஆனால், எங்கள் செலவில், 'டாக்சி' வைத்து, ஓட்டலிலிருந்து, அதிசய பூந்தோட்டம் காண சென்றோம்.
5 கோடி பூக்களாலும், 25 கோடி தாவரங்களாலும், உலகிலேயே மிகப்பெரிய இயற்கை பூந்தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது.
இது அமைந்திருப்பது, பாலைவனத்தில் என்றால், ஆச்சரியப்படுவீர்கள். இங்கு பூக்களும், புற்களும் செதுக்கப்பட்டு, விமானம், பேருந்து, பூனை, 'வால்ட் டிஸ்னி' மற்றும் வாத்து போன்று ஏராளமான உருவங்கள் கண்ணையும், கருத்தையும் ஈர்க்கும் வண்ணம் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
துபாயிலிருந்து, 125 கி.மீ., துாரத்தில் உள்ளது, அபுதாபி. போகும் வழியெங்கும், புற்களும், மணலும் தான்; சில இடங்களில், கடல் காணப்பட்டது. நீண்ட துார பயணத்திற்கு பின், 'பெராரி' என்ற, 'தீம் பார்க்'குக்கு சென்றோம். அங்கு மிகப்பெரிய, வணிக வளாகம் உள்ளது. உலகின் முதல், 'பெராரி பிராண்டட் தீம் பார்க்' இது தானாம்.
இதன் கூரை, சிவப்பு கோடுகளுடன் காணப்படுகிறது. இதன் உள்ளே, சாதனை நிறைந்த, 37 'த்ரில்' சவாரிகள் உள்ளன. ஒரு நபருக்கு கட்டணம், 6,200 ரூபாய்.
அடுத்ததாக, அபுதாபி சிட்டி டூர்.
பெரிய பெரிய கட்டடங்கள் காட்சியளித்தன. துபாய் அளவுக்கு இல்லையென்றாலும், இங்கும், உயரமான கட்டடங்கள் உள்ளன. உலக வர்த்தக மைய கட்டடம், அதையொட்டி, 'நேஷனல் ஆயில் அட்நாக்' என்கிற எண்ணெய் கம்பெனிகள் முழுவதற்குமான அலுவலகங்கள் அடங்கிய மிகப்பெரிய கட்டடம் என, ஒவ்வொன்றாக பஸ்சிலிருந்தபடியே பார்த்து மகிழ்ந்தோம்.
அடுத்து, அபுதாபியின் புகழ்மிக்க மசூதியை பார்க்க கிளம்பினோம். இரவு, 7:30 மணிக்கு, மசூதியை அடைந்தது, பஸ். அந்த இரவில், 'தக தக'வென மின்னியது; வெண்ணிற உருண்டையாய் காட்சியளித்தது, மசூதி. உள்ளே, பெண்கள் ஒரு புறம், ஆண்கள் மறுபுறமாக சோதித்து அனுப்பினர்.
இந்த மசூதி, 1996ல் துவங்கி, 2007ல் கட்டி முடிக்கப்பட்டதாம். உலகின் மூன்றாவது பெரிய மசூதி. இது. உலகின் மிகப்பெரிய கம்பளமும், 'சாண்ட்லியர்' விளக்குகள் மூன்றும், இங்கு தான் உள்ளன.
மசூதியில் புகைப்படங்கள் எடுக்க தடையேதும் இல்லை. மிகப்பெரிய துாண்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. 82 வெண்மை நிற, 'டூம்'களின் பிறைகள் முழுவதும், 24 கேரட் தங்கத்தால் ஆனவையாம்.
பயணத்தின் கடைசி நாளன்று, 'மாலை, 5:00 மணிக்கு, ஓட்டலுக்கு கார் அனுப்பி, விமான நிலையத்தில் அழைத்து போய் விடுவது மட்டுமே இன்றைய பணி, வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை...' என்றார், சுற்றுலா ஏற்பாட்டாளர்.
எனவே, துபாயில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான, 'கோல்டு சவுக்' மற்றும் 'ஸ்பைஸ் சவுக்' இரண்டையும் பார்க்க, 'டாக்சி' பிடித்து, அந்த பகுதிக்கு சென்றோம்.
இங்கு, நகை கடைகள் ஏராளம். 21 - 24 கேரட் வரை, தங்க நகைகள் பல வடிவமைப்புகளில், அழகான வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. சாலையில் நடந்து சென்றபடியே நகைகளை பார்வையிட முடிகிறது; அவ்வளவு வெளிப்படையாய் இருக்கிறது.
ஒரு கடையில், கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருட்கள் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டு, விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டோம். மற்றொரு கடையில், பொம்மை ஒன்றின் ஆடையை, தங்கத்தால் செய்து வைத்திருந்தனர்.
அதன்பின், அதையொட்டி உள்ள, 'ஸ்பைஸ் சவுக்'கில் நிறைய பேரீச்சை பழங்கள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவைகளோடு, குங்கும பூ மணக்க அவற்றையும் கண்டு களித்தோம். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்த பின், ஓட்டலுக்கு நடந்தே வந்தோம்.
ஓட்டல் அறையை, காலையிலேயே காலி செய்து,பெட்டிகளை, 'க்ளாக் ரூமில்' போட்டு சென்றதால், உடனடியாக அவைகளை, காரில் ஏற்றி, மாலை, 6:10 மணிக்கு விமான நிலையத்தை அடைந்தோம்.
சோதனை முடிந்து, விமானத்தில் ஏறி அமர்ந்தோம். சிறிது நேரத்துக்கு பின், உணவு தந்தனர். அதிகாலை, 2:30 மணியளவில், சென்னை விமான நிலையம் வந்தடைந்தோம்.
எவ்வளவு தான், நாம் பிற நாட்டினரை பார்த்து வியந்தாலும், அங்கிருந்து திரும்பியவுடன், 'நம் நாடு போல வருமா...' என்ற பெருமை தான், நமக்கு வருகிறது. தாய் நாட்டு பாசம் மற்றும் நம் உணவுகளே இதற்கான காரணமாய் இருக்கலாம்.
- முற்றும் -
கே. என். ராமகிருஷ்ணன்