
பி.வாசு போட்ட, தடை கல்!
ரஜினியை பொறுத்தவரை, 'சூப்பர் ஹிட்' படங்களின் முதல் பாகத்தை போன்று, இரண்டாம் பாகம் வெற்றி பெறாது என்று நினைப்பவர். அதனால் தான், பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா சொன்னபோது, மறுத்து விட்டார். இருப்பினும், ரஜினியை வைத்து, தர்பார் படத்தை இயக்கிய, ஏ.ஆர்.முருகதாஸ், 'தர்பார் படப்பிடிப்பில் இருந்தபோதே, சந்திரமுகி - 2 படத்தை இயக்க, ரஜினியிடம் கதை சொல்லி விட்டேன். அவர், ஓ.கே., சொன்னால், உடனே, 'ஆக் ஷன்' சொல்லி விடுவேன்...' என்று, கூறி வருகிறார். இதைக் கேள்விப்பட்ட, சந்திரமுகி படத்தை இயக்கிய, பி.வாசுவோ, 'சந்திரமுகி- - 2 படத்தை, வேறு நடிகரை வைத்து இயக்க, கதை சொல்லி விட்டேன். அதனால், அந்த தலைப்பை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன்...' என்று சொல்லி, ஏ.ஆர்.முருகதாசின் முயற்சிக்கு, தடை கல் போட்டு விட்டார்.
— சினிமா பொன்னையா
'ஆக் ஷன்' கதைகளில், அனுஷ்கா!
'நான் தான், தென் மாநிலத்தின் சூப்பர் ஸ்டார் நடிகை...' என்று மார்தட்டி வருகிறார், நயன்தாரா. இந்த நேரத்தில், 'ஹாரர்' படங்களில் இருந்து விலகி, 'ஆக் ஷன்' கோதாவில் இறங்கியிருக்கிறார், அனுஷ்கா. அதோடு, 'விஜயசாந்தி பாணியில், அதிரடி, 'ஆக் ஷன்' கதைகளில் நடித்து, அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்பி, சூப்பர் ஸ்டார் நடிகையாகப் போகிறேன்...' என்று, ஒரு, 'ஸ்டேட்மென்ட்' விடுத்துள்ளார். வகை அறிந்து செய்தால் வாதம் பலிக்கும்!
— எலீசா
அதிர வைத்த, நந்திதா!
அட்டகத்தி நந்திதா, கர்நாடகாவை சேர்ந்தவர். என்றாலும், நடிக்க வந்து சில ஆண்டுகளிலேயே, தமிழ், தெலுங்கு மொழிகளை நன்றாக பயின்று, தனக்குத்தானே, 'டப்பிங்'கும் பேசி வருகிறார். அதோடு, தபங் - 3 படத்தில் நடித்த, ஹிந்தி நடிகை, சோனாக் ஷி சின்ஹாவிற்கு, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என, மூன்று மொழிகளிலும், 'டப்பிங்' பேசினார், நந்திதா.
10 ஆண்டுகளுக்கு மேலாக, தென் மாநில சினிமாவில் நடித்து வந்தபோதும், ஓரிரு வார்த்தைகள் கூட பேச முடியாமல் தவித்து வரும், காஜல்அகர்வால் மற்றும் ஹன்சிகா போன்ற நடிகைகள், நந்திதாவை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். முந்தினோர் பிந்தினோர் ஆவார்; பிந்தினோர் முந்தினோர் ஆவார்.
எலீசா
வில்லனாக மாறிய, 'மெகா ஹீரோ'க்கள்!
சினிமாவில், நீண்ட கால நடிகர்களான, அர்ஜுன் மற்றும் அரவிந்த்சாமி, ஆகிய இருவருக்கும், தற்போது, 'ஹீரோ' வாய்ப்பு குறைந்து விட்டது. அதனால், வில்லன் வேடங்களில் நடிக்க, இருவருமே ஆர்வம் காட்டுகின்றனர். முக்கியமாக, 'நான், 'டீசன்ட்' ஆன வில்லனாக மட்டுமே நடிப்பேன்...' என்று, அதற்கேற்ற வேடங்களை, தேர்வு செய்து, அர்ஜுன் நடிக்க, அரவிந்த்சாமியோ, 'வில்லன் என்று வந்த பிறகு, என்ன பாகுபாடு வேண்டியிருக்கு. 'டீசன்ட்' ஆக மட்டுமின்றி, கொடூரமான வில்லனாகவும் நடிக்க, தயாராக இருக்கிறேன்...' என்று, இறங்கியடித்து வருகிறார்.
— சினிமா பொன்னையா
கருப்புபூனை!
ஏற்கனவே, கேரளத்து பால் நடிகையுடன், 'சீக்ரெட்' நட்பு வளர்த்து, 'கிசுகிசு'வில் சிக்கி, சிதைந்து போனவர் தான், சுள்ளான் நடிகர். ஆனபோதும், அடங்குவதாக தெரியவில்லை, அம்பி. தற்போது, தன்னுடன் காதல் திருவிளையாடல் நடத்திய, அந்த திருமணமான நடிகைக்கு, அம்பு விட்டு வருகிறார். அதில், சில முறை தப்பித்து வந்த நடிகையும், தற்போது, தனக்கொரு அடைக்கலம் தேவை என்பதால், அம்பியின் அரவணைப்பில் அடங்கி விட்டார். இதனால், தன் நட்பு வட்டார இயக்குனர்களுக்கு, அவசர செய்தி அனுப்பி, அம்மணியின் கலைச்சேவைக்கு கைகொடுக்குமாறு, அன்பு உத்தரவு போட்டுள்ளார், சுள்ளான்.
'கூடை பந்து வீராங்கனை, ஸ்ரேயாவுக்கும், பயிற்சியாளர் தனுஷுக்கும் இடையே என்னமோ இருக்குன்னு, காலேஜ் முழுக்க, 'கிசுகிசு' கிளம்பியுள்ளது. காலேஜ் சாம்பியனான அவளது கவனம் சிதறாம, மாநில அளவில் விளையாடி புகழ் பெறணும்ன்னு, கவலையா இருக்கு...' என்றார், பி.டி., மாஸ்டர்.
சினி துளிகள்!
நடிக்கும் வாய்பை மீ்ண்டும் பிடிக்கும் முயற்சியாக, குறைந்த சம்பளத்தில், குத்துப் பாட்டுகளுக்கு, 'டூ -பீஸ்' உடையணிந்து, நடனமாட தயாராக இருப்பதாக, கோலிவுட்டில் ஒரு சூடான செய்தி வெளியிட்டுள்ளார், ஸ்ரேயா.
அவ்ளோதான்!