
''இந்த வயசிலேயே திருட்டு புத்தி இருக்கு. இதெல்லாம் உருப்படவா போகுது. 10வது படிக்கிற பையனாச்சேன்னு, 'ஸ்கூல் பீஸ்' கட்ட, 3,000 ரூபாய் மகனிடம் கொடுத்தனுப்பினேன். என்ன தைரியமா, அதை உங்க பிள்ளை திருடியிருக்கான். கேட்டால், மொபைல்போன் வாங்க திருடினானாம்... கேவலமா இருக்கு... நல்லவேளை கையோடு பிடிச்சாச்சு,'' என, கத்தினார், மாணவனின் தந்தை.
அவமானத்தில் தலை குனிந்தார், சண்முகம்.
எதிர் வீடு, பக்கத்து வீடு என, எல்லா ஜனமும் வேடிக்கை பார்த்தது.
''சார், என் பையன் சார்பில் மன்னிப்பு கேட்டுக்கிறேன். சத்தியமாக அவன் இப்படி செய்வான்னு தெரியாது!''
''சரி... கண்டிச்சு வைங்க; நாளைக்கு பெரிய திருடனாக வந்துட போறான். படிக்கிற புள்ளையாச்சேன்னு இதோடு விடறேன்,'' என்றவர், தெருவில் இறங்கி நடக்க, உள்ளே சென்றார் சண்முகம்.
எதிர் வீட்டில் இருந்து நடந்ததை பார்த்தபடி இருந்த, கணேஷ், ஆபீசுக்கு கிளம்ப, காரை, 'ஸ்டார்ட்' செய்தான்.
இரண்டு நாட்களாக வேலைக்கு போகும்போதும், வரும்போதும் தலைகுனிந்தபடியே சென்றார், சண்முகம். தெருவில் எல்லாருக்கும் தெரிந்து விட்டது. மகனை பேய் அடி, நாய் அடி அடித்தாகி விட்டது. இரண்டு நாட்களாக காய்ச்சலில் படுத்திருக்கிறான். வீடே நரகமாகி விட்டது.
'பக்கத்து வீட்டிலும் தான், படிக்கிற பையன் இருக்கிறான். அம்மா, அப்பா சொல்வதைக் கேட்டு, கருத்தாகப் படித்து, எவ்வளவு நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறான். நானும் பெத்திருக்கேனே, இப்படி ஒரு தறுதலையை. இவன் உருப்படவா போகிறான். இதெல்லாம் தலையெழுத்து. பேரைக் கெடுக்க பிள்ளையாக பிறந்திருக்கிறான்...' என, சண்முகத்தின் மனம் வேதனைப்பட்டது.
அன்று வேலைக்கு சென்ற, சண்முகம், வீட்டிற்கு செல்ல மனமின்றி, அருகில் இருந்த சாலையோர பூங்காவில் அமர்ந்தார். மகனை நினைத்து மனம் கவலையில் ஆழ்ந்தது.
''சண்முகம் சார், என்ன, 'பார்க்'கில் உட்கார்ந்துட்டீங்க?''
குரல் கேட்டு திரும்பியவர் எதிரில், எதிர் வீட்டு, கணேஷ். பெரிய கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறான். சொந்த வீடு, கார், மனைவி, மகன்கள் இரண்டு பேர் என, நிறைவான வாழ்க்கை. மனதில் பெருமூச்சு விட்டபடியே அவனை பார்த்தார்.
''நீங்க எங்கே தம்பி வந்தீங்க?''
''உங்களைப் பார்த்து, சில விஷயங்கள் மனசு விட்டு பேசலாம்ன்னு நினைக்கிறேன். பேசலாமா?''
'தெரிந்தவர், போனவர் எல்லாம் உபதேசம் பண்ணியாகி விட்டது. மகனை கண்டிச்சு வைங்க. நாளைக்கு பெரிய திருடனாக வந்துடப் போறான். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்ன்னு சொல்லுவாங்க. அதிக செல்லம் கொடுக்காதீங்க. அவன் நடவடிக்கையை கவனிங்க... இப்படி எத்தனையோ... இவனும் அதைப் போல உபதேசம் செய்ய வந்திருக்கானா...' என, நினைத்து கொண்டார்.
''சண்முகம், ஒரு வாரமாக உங்களை கவனிச்சிட்டு தான் வரேன். ரொம்ப சோர்ந்து போய்ட்டீங்க. உங்க மனைவி, அதுக்கு மேலே ஏதோ நடக்கக் கூடாதது நடந்தது போல, கண்ணீருடன் இருக்காங்க. உங்க மகனும், ஒரு வாரமாக ஸ்கூலுக்கு போகாமல் வீட்டிலேயே இருக்கான். இப்ப என்ன நடந்துச்சுன்னு, உங்க வீட்டையே தலைகீழாக மாத்திட்டீங்க...
''நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. உங்க மகன் மேலே எந்த தப்பும் இல்லை. அவன் திருடணும்ன்னு நினைச்சு பணம் எடுக்கலை. அவன் மனசில், மொபைல்போன் வாங்கணும்ன்னு ஆசை. உங்ககிட்ட கேட்டா, நிச்சயம் வாங்கித் தரமாட்டீங்க. அதற்கான வழி, அந்த பணத்தை எடுக்கிறதுன்னு அவன் செய்த முடிவு தான், இந்த திருட்டு.
''அவனை அடிக்கிறதாலயோ, திருடன்னு சொல்லி அவன் மனசை காயப்படுத்தறதாலயோ எந்த பிரயோசனமும் இல்லை. அவனுக்கு புரிய வைக்கணும். அடுத்தவர் பணத்தை எடுத்து நாம் உபயோகப்படுத்த நினைக்கிறது தப்பான செயல்ன்னு, அவன் மனதில் பதிய செய்யணும்.
''ஆசைப்படறது தப்பில்லை. அதற்கான வழி, நம் தகுதியை உயர்த்திக்கிறது... கவனமாக நல்லா படிச்சு, வேலைக்குப் போகும்போது, நீ நினைச்சதையெல்லாம் சாதிக்க முடியும்ன்னு, அவனுக்கு எடுத்து சொல்லணும். உலக மகா தப்பு செய்துட்ட மாதிரி, எதிர்காலமே இருண்டு போன மாதிரி அவனை நடத்தறது தப்பு...
''அவன் மனதில் தெளிவை வரவழைக்கணும். உங்க பொருளாதார நிலையை விளக்கி, 'அதற்கான காலம் வரும்போது, நிச்சயம் நானே உனக்கு மொபைல்போன் வாங்கித் தரேன்...'னு அவனுக்கு நம்பிக்கை வரும்படி நீங்க தான் சொல்லணும்.
''அதை விட்டுட்டு, குடும்பமே இப்படி இடிந்து போய் உட்கார்ந்திருக்கீங்க. தப்பு செய்யாத மனுஷன் யார் இருக்கா சொல்லுங்க. தவறுகளைத் திருத்திக்கிறது தான் புத்திசாலித்தனம். நான் சொல்றது புரியுதா?'' என்றான், கணேஷ்.
''தம்பி, இதுவரை எனக்கு உபதேசம் செய்தவங்க எல்லாம், ஒரு திருடனை பெத்தவன்கிற பார்வையில் தான் பார்த்தாங்க. நீங்க தான், என் மன ஆதங்கத்தை புரிஞ்சுக்கிட்டு, மனம் தெளிவடைய பேசறீங்க. எனக்கு புரியுது தம்பி. என் மகன் திருடணும்ன்னு நினைச்சு பணத்தை எடுக்கலை. அவன் ஆசையை நிறைவேத்திக்க, அந்த பணத்தை எடுத்துட்டான்.
''நிச்சயம் நீங்க சொன்னபடி அவன்கிட்ட பேசி, தெளிவுபடுத்துவேன். அவன் நல்லவனாக, தன்னம்பிக்கை உள்ளவனாக மாற, நான் துணையிருப்பேன்,'' என, நன்றியுடன் கணேஷ் கையை பிடித்தார், சண்முகம்.
''சின்ன வயசில் கெட்ட சகவாசத்தால், சில பேருடன் சேர்ந்து, 'பைக்'கைத் திருடி விற்று, சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டவன் தான் சார், நானும். மனம் திருந்தி, படிச்சு, இன்னைக்கு நிறைவான வாழ்க்கை வாழறேன். நம்பிக்கை வைங்க சார்...
''தப்பு செய்தவங்க திருந்த வாய்ப்பு கொடுங்க. நிச்சயம், அவன் தவறை திருத்திக்கிட்டு, நாளைக்கு இந்த சமுதாயத்தில் நல்ல தகுதியானவனா வலம் வருவான். அதுக்கு நானே உதாரணம்...
''கிளம்புங்க சார்... வீட்டுக்குப் போவோம். மனைவியையும், மகனையும் உங்க வார்த்தைகளால் ஆறுதல்படுத்தி, மனசிலே நிம்மதியும், சந்தோஷத்தையும் கொண்டு வாங்க. எல்லாம் நல்லவிதமா நடக்கும்,'' என்றான், கணேஷ்.
அவனை நன்றியுடன் பார்த்தார், சண்முகம்.
பரிமளா ராஜேந்திரன்