
விஜயிடம், 'பஞ்ச்' கேட்கும், ரசிகர்கள்!
ரஜினி படங்களில் இடம்பெறும், 'பஞ்ச்' வசனங்களைப் போலவே, விஜய் படங்களின், 'பஞ்ச்' வசனங்களும் பிரபலமாகி வந்துள்ளது. ஆனபோதும், சமீபத்தில் சில படங்களில், 'பஞ்ச்' வசனங்களை குறைத்து விட்டார், விஜய். இதையடுத்து, அவரது ரசிகர்கள், 'படத்திற்கு, நான்கு, 'பஞ்ச்' வசனங்களாவது, 'நறுக்'கென்று இருந்தால், படம் பார்க்கும் எங்களுக்கு, 'கெத்'தாக இருக்கும்...' என்று வேண்டுகோள் வைத்ததை அடுத்து, தற்போது நடித்து வரும், மாஸ்டர் படத்தில், சுடச்சுட, 'பஞ்ச்' வசனங்கள் தயார் செய்யுமாறு இயக்குனர் குழுவினருக்கு, உத்தரவு பிறப்பித்துள்ளார்.
— சினிமா பொன்னையா
நிர்வாணமாக நடித்த, ஐஸ்வர்யா தத்தா!
ஆடை படத்தில், அமலாபால் நிர்வாணமாக நடித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், தற்போது, பல படங்களில் நடித்துள்ள, 'பிக்பாஸ்' பிரபலமான, ஐஸ்வர்யா தத்தாவும், ஒரு படத்தில், நிர்வாண காட்சி ஒன்றில் நடித்துள்ளார். அதோடு, 'டூ பீஸ் உடையில் நடிக்க தயங்கிய நான், நிர்வாணமாக நடித்திருக்கிறேன் என்றால், அந்த துணிச்சலை எனக்கு தந்தவர், அமலாபால் தான். அதனால், இந்த விஷயத்தில் எனக்கு மட்டுமின்றி, பல இளவட்ட நடிகையருக்கும், அமலாபால் தான், ரோல் மாடல்...' என்கிறார், ஐஸ்வர்யா தத்தா. தான் கெட்டது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி!
— எலீசா
'டப்' கொடுக்க வந்த, மீனா!
ரஜினியின், 168வது படத்தில், மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்துள்ள, மீனா, நடுத்தர வயது பெண்ணாக நடிக்கிறார். ஆனபோதும், சில காட்சிகளில், 'மாடர்ன் கெட் - அப்'பில் இளவட்ட பெண்ணாகவும் நடித்து வருகிறார். இதில், அவர், திருமணத்திற்கு முன் பார்த்த அதே இளமையான மீனாவாக இருக்கிறார். அதைப்பார்த்து, 'இளவட்ட நடிகையருக்கு சரியான போட்டியாக இருப்பார் போலிருக்கே...' என்று, 'மாஜி ஹீரோயின்'கள், ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர். திகைப்பூண்டு மிதித்துத் திக்குக் கெட்டாற் போல!
— எலீசா
விஜய், 'அட்வைஸ்!'
விஜயுடன், மாஸ்டர் படத்தில் நடித்து வருபவர், மாளவிகா மோகனன். அடுத்தபடியாக புதிய பட வேட்டையில் ஈடுபட்டிருப்பவர், ஒரு ஆபாச, 'போட்டோ ஷூட்' நடத்தி, அந்த, 'ஆல்பத்'தை கோலிவுட்டில் வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்த, விஜய், 'சினிமாவில், பட்டும் படாமலும் தான் நடிக்க வேண்டும். ஓரிரு படங்களிலேயே, 'ஓவர் டோஸ்' கொடுத்தால், இரண்டே படத்தில், 'பீல்டு அவுட்' ஆகி விடுவாய்...' என்று, 'அட்வைஸ்' கொடுத்துள்ளார். இதனால், சுற்றலில் விட்ட, 'ஆல்பத்'தை, 'ரிட்டன்' வாங்கிய நடிகை, அடுத்த சில தினங்களிலேயே, ஒரு குடும்பப்பாங்கான, 'ஆல்பத்'தை வெளியிட்டு, கமர்ஷியல் இயக்குனர்களுக்கு, பெரிய, 'ஷாக்' கொடுத்து விட்டார். ஆர் குத்தினாலும், அரிசி ஆனால் சரி!
—எலீசா
அஜீத் பாணிக்கு மாறிய, விக்ரம்!
படத்துக்குப் படம், தன்னை இளமையாக காண்பித்து வந்த, விக்ரம், சினிமா விழாக்களுக்கும், இளமையாகத்தான் வருவார். தற்போது, மகன் துருவ் விக்ரம், 'ஹீரோ' ஆக நடிக்கத் துவங்கி விட்டதால், இளமையான வேடங்களில் இருந்து மாறி, அஜீத் பாணியில், 'சால்ட் அண்ட் பெப்பர் கெட் - அப்'பில் நடித்து வருகிறார். யாராவது, 'டூயட்' பாடும், 'ஹீரோ' ஆக நடிக்க அழைத்தால், 'மகன், 'ரொமான்டிக் ஹீரோ' ஆக நடித்து வரும்போது, நானும், அப்படி நடித்தால், நன்றாக இருக்காது...' என்று சொல்லி, மறுக்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை
உலக நடிகருடன், 10 ஆண்டுகளாக திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்தார், அந்த நான்கெழுத்து நடிகை. பிறகு, அவருடன் ஏற்பட்ட மோதலில் பிரிந்து சென்றவர், இப்போது, அரசியல் ரீதியாக எதிர்க்க தயாராகி விட்டார். அதன் காரணமாக, தாமரை கட்சியில் ஐக்கியமாகியுள்ள, நடிகை, தேர்தல் காலகட்டத்தில், உலக நடிகரை, கடுமையாக விமர்சிக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். இதையடுத்து, தன்னுடன் குடும்பம் நடத்திய நடிகையே, அரசியல் எதிரியாகி இருப்பதால், குழம்பிப் போயிருக்கிறார், உலக நடிகர்.
'பாருங்க அக்கா... நேற்று வரை மாதர் சங்கத்துல என் கூடவே இருந்துட்டு, இப்ப எதிர் அணியில சேர்ந்ததும் இல்லாம, என்னை எதிர்க்கவும் செய்யறா இந்த கவுதமி பொண்ணு... இது நியாயமான்னு நீங்களே கேளுங்க அக்கா...' என்று புலம்பினாள், மாதர் சங்க உறுப்பினர் ஒருத்தி.
சினி துளிகள்!
* நடிகை கவுதமிக்கு, பா.ஜ.,வில், ஒரு பதவி கொடுக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
* மாநாடு, படத்தில், அப்துல் காலிக் என்ற முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், சிம்பு.
அவ்ளோதான்!