PUBLISHED ON : மார் 08, 2020

யோகிபாபுவிற்கு வந்த ஆசை!
'நான் காமெடி பண்ணும் காட்சிகளை பார்த்து, ரசிகர்கள் கை தட்டி ரசிப்பது மட்டும் எனக்கு போதாது...' என்று சொல்லும், யோகிபாபு, 'நான் நடிக்கும் கதாபாத்திரங்கள், ரசிகர்களின் மனதில் தாக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். அதனால், வருங்காலங்களில், ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமின்றி, சிந்திக்க மற்றும் கண் கலங்க வைப்பது என்றெல்லாம், நடிப்பில் பல பரிமாணங்களை படிப்படியாக வெளிப்படுத்தப் போகிறேன்...' என்கிறார்.
சினிமா பொன்னையா
ராஷ்மிகாவுக்கு முத்தம் கொடுத்த, ரசிகர்!
கன்னட நடிகையான, ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில், 'நம்பர் -ஒன்' நடிகையாகி விட்டார். அதனால், அவர் எங்கு சென்றாலும், ரசிகர்கள் கூட்டம் முற்றுகையிடுகிறது. சமீபத்தில், ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற போது, கூட்டத்தில் ஒரு ரசிகர், அவரது கன்னத்தில், 'பச்சக்' என்று முத்தம் கொடுத்து, ஓட்டம் பிடித்து விட்டார். அதைப் பார்த்து மற்றவர்கள் அதிர்ச்சியான போதும், 'ரசிகர்கள் என்றாலே, ஒரே அன்பு தொல்லை தான், சரி விடுங்க...' என்று, கன்னத்தை துடைத்தபடி, 'கூலாகி' இருக்கிறார். கண்ணால் கண்டதை எள்ளுக்காய் பிறந்தது போல் சொல்ல வேண்டும்!
— எலீசா
காஜலை பழி வாங்கிய, ராசிகண்ணா!
தமிழில் தனக்கு வர இருந்த சில படங்களை, காஜல்அகர்வால் தட்டிப்பறித்து விட்டதால், அவர் மீது, கொலவெறியில் இருந்து வந்தார், ராசிகண்ணா. விளைவு, கோலிவுட்டில் படமில்லாமல், டோலிவுட்டிற்கு சென்றவர், காஜல்அகர்வால் பேச்சு நடத்தி வந்த இரண்டு படங்களை, லாவகமாக தட்டிப்பறித்து, அவரின் டோலிவுட் மார்க்கெட்டையே மண்ணை கவ்வ வைத்து விட்டார். இதனால், கொதித்துப்போன, காஜல்அகர்வால், தனக்கு கோபம் வரும்போதெல்லாம், ராசிகண்ணாவுக்கு போன் செய்து, திட்டித் தீர்க்கிறார். கரையான் புற்று எடுக்க, பாம்பு குடி புகுகிறது போல்!
எலீசா
'டப்' கொடுக்க வந்த, கார்த்திக்!
சினிமாவில், 'ஹீரோ' வாய்ப்புகள் குறைந்த பின், அரசியலில் ஒரு, 'ரவுண்டு' வரலாம் என்று களமிறங்கிய, நவரச நாயகன் கார்த்திக்கிற்கு, அரசியல் கை கொடுக்கவில்லை. அதனால், மிஸ்டர் சந்திரமவுலி படத்திற்கு பின், தீ இவன் என்ற படம் மூலம் மீண்டும், 'ஹீரோ' ஆகியிருக்கிறார். அதோடு, தன், 'கெட் - அப்'பை, இளமையைாக மாற்றியுள்ளவர், 'என் மகன், கவுதம் கார்த்திக் போன்ற இளவட்ட, 'ஹீரோ'க்களுக்கு, 'டப்' கொடுக்கப் போகிறேன்...' என்றும், 'சொடக்' போடுகிறார்.
சினிமா பொன்னையா
அதர்வாவை புலம்ப வைத்த, 'கேர்ள் பிரண்டு!'
ஜனனி அய்யர், பிரியா பவானி சங்கர் என, சில நடிகையருடன் கிசுகிசுக்கப்பட்ட, அதர்வா, மீண்டும், தன்னுடன் நடித்த, மேகா ஆகாஷ் உள்ளிட்ட, சில புது வரவு நடிகையருடன் நட்பு வளர்த்து வருகிறார். அதோடு, 'பெண்களுக்கு, ஆண் நண்பர்கள் இருப்பது போன்று, ஆண்களுக்கு, பெண் நண்பிகள் இருக்க வேண்டும். அது தான் இளம் வயதில் ஜாலி. ஆனால், 'கிசுகிசு'க்களுக்கு பயந்து, பெண் நண்பிகளுடன் அரட்டையடிக்க தடை போடுவது, என்ன வாழ்க்கை... ரொம்ப, 'போர்' ஆக உள்ளது...' என்று,'பீல்' பண்ணுகிறார்.
— சி.பொ.,
கறுப்புப்பூனை!
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த, பிரியமான நடிகை, வேகமாக வளர்ந்து விட்டதை அடுத்து, தற்போது, தெய்வ மகளாக நேயர்களை கவர்ந்த, இன்னொரு சீரியல் நடிகையும், சினிமாவில், 'என்ட்ரி' கொடுத்துள்ளார். ஆனால், இந்த நடிகைக்கு, திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளதாம். ஆனபோதும், அதை மறைத்து, இன்னமும், 'டீன் - ஏஜ்' பெண் தான் என்று, 'புரூடா' விட்டு வருகிறார். அதோடு, கணவரும், குழந்தையும், சென்னையில் இருந்தால், உண்மை வெளிச்சத்துக்கு வந்து, தன், 'ஹீரோயினி இமேஜ்' போய் விடும் என்பதால், அவர்களை, சொந்த ஊருக்கு அனுப்பி விட்டார்.
'டீ வாணி... ப்ரியா பவானி, உன்னை விட சின்ன பொண்ணு, 'ஜெயன்ட் வீலில்' வேகமா சுற்ற முடியும். அவ ராட்டினத்தில் சுத்துறாள்ன்னு நீயும் பாய்ந்து ஓடினா, என்னாகும். வயசுக்கேற்ற விளையாட்டை விளையாடணும்டி...' என்று அறிவுறுத்தினாள், அம்மா.
சினிதுளிகள்!
* 'இதுவரை, சிரிக்க வைத்து, ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்த நான், தனுஷ் படத்தில், ஒரு அழுத்தமான, 'சென்டிமென்ட்' வேடத்தில் நடிக்கப் போகிறேன்...' என்கிறார், கவுண்டமணி.
* ஓ மை கடவுளே படத்தை அடுத்து, மூன்று படங்களில் நடித்து வருகிறார், வாணி போஜன்.
அவ்ளோதான்!
