தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நடிகையின் கதை!

நடிகையின் கதை!

நடிகையின் கதை!


PUBLISHED ON : மார் 08, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலை, 8:00 மணி. விழித்ததும், எழுந்து, கைகளை பின்புறமாய் மடக்கி, எழிலாய் சோம்பல் முறித்தாள், சண்முகப்ரியா; அணிந்திருந்த, 'நைட்டி' அவளுக்கு இன்னும் இளமையை கூட்டியது.

கட்டிலுக்கு பின்புறம் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்து, சட்டென மனம் தளர்ந்தாள்.

பாத்ரூம் சென்று, 'ஷவரை' திருகி, உடலில் சோப்பு தடவியது வரை, அத்தனையிலும் ஒரு செயற்கையான நளினம். ஆனால், நிஜத்தில் அது தான், அவளை போன்ற நடிகைகளின் இயல்பாகவே ஆகிப்போனது.

குளித்து, உடை மாற்றி, முடியை விரித்து, படர விட்டபடி, கண்ணாடி முன் நின்று, இப்படியும் அப்படியுமாய், இடுப்பில் கை வைத்து திரும்பிப் பார்த்தாள்.

ம்ஹும்... 30 ஆண்டுகளுக்கு முன் நடித்த, செந்தாளம் பூக்கள் படத்தில், அவள் உடம்பு இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும் தெரிந்த மாற்றம், கண்ணில் நீரை வரவைத்தது.

'முதல் படத்தில், 13 வயது என்று சொல்லிக் கொண்டாலும், உண்மையான வயது, 18. அன்று பார்த்தால், வெண்ணெயில் செய்த பளிங்கு சிலை போல், எந்த பகுதியிலும் சதை அதிகம் இல்லாமல் வழித்தெடுத்த மாதிரி இருப்பாள். ஆனால், இன்று...'

யோசிக்க விருப்பமில்லாமல், 'லோஷனை' முகத்தில் தடவி, அடர் சிவப்பு நிறத்தை உதட்டில் ஏற்றி, அழகு பார்த்தாள். 'மேக் - அப்' உபயத்தால் சுருங்கியிருந்த கண்களை பெரிதாக்கியபடியே, கீழே வந்தாள்.

மேனேஜர் செல்வராஜ், 'குட்மார்னிங்' வைத்தான். இரண்டு சமையல் பெண்கள், மேல் வேலை செய்யும் சின்ன பெண்ணொருத்தி, டிரைவர், தோட்ட வேலை செய்யும் ஆள், வாட்ச்மேன் என்று, ஆட்களுக்கு பஞ்சமில்லை வீட்டில்.

பேப்பரை எடுத்து பார்த்தாள். நிச்சயமாய் எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வமில்லை. ஆனாலும், நேரத்தை ஓட்டி ஆகவேண்டுமே. பேப்பரின் பக்கங்கள் திரும்ப திரும்ப, அவளின் நினைவுகள் பழைய காலத்தை புரட்டிக் கொண்டிருந்தது.

அழகாய் இருப்பதாய் ஊரே பேச, அதே மமதையில், நொறுங்கிக் கிடந்த குடும்பத்தை காப்பாற்றி விடலாம் என்று, குடும்பத்தோடு, பத்தமடையில் இருந்து சென்னை வந்தாள்.

மூன்று ஆண்டு, கஷ்ட ஜீவனத்திற்கு பின் நடித்த முதல் படம், செந்தாளம் பூக்கள், 'சூப்பர் டூப்பர் ஹிட்!' அதன் பின், 'இன்டஸ்டிரி'யில் முடிசூடா ராணியானாள்.

தென் மாநில, வடமாநில, போஜ்பூரி என்று, கிட்டதட்ட எல்லா மொழிகளிலும் நடித்து விட்டாள். அத்தனையும், 100 நாட்கள் ஓடியது. அவளுடன், ஒரு படத்திலாவது நடித்தே ஆகவேண்டும் என்று அத்தனை, 'டாப் ஸ்டார்'களும் தவம் கிடந்தனர்.

ஒரே நாளில், நான்கு, 'ஷெட்யூலில்' வேலை பார்த்த அனுபவமும் உண்டு. அத்தனை பரபரப்பான வாழ்க்கை. பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியது.

'சண்முக வடிவுங்கிற உன் பேரை, சண்முகப்ரியான்னு மாத்துற ராசியில, பானுப்ரியா, ஸ்ரீப்ரியா மாதிரி, நீயும் பெரிய ஆளா வருவே...' என்று, எந்த முகூர்த்தத்தில், இயக்குனர் நாமகரணம் சூட்டினாரோ, அத்தனை, 'பிசி' ஆனாள், சண்முகப்ரியா.

அம்மா - அப்பா, தங்கத்தில் குளித்து, வைரத்தில் லயித்தனர். தங்கை பரிமளவள்ளிக்கு, டாக்டர் மாப்பிள்ளையை கட்டி வைத்தனர். காலப்போக்கில் அப்பா தவறினார்.

அப்போது, உச்சத்தில் இருந்தாள், சண்முகப்ரியா. பாலிவுட், கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் பலருடன் சேர்த்து, 'கிசுகிசு'க்கப்பட்டாள். 'கிசுகிசு'ப்பு எவ்வளவு வருகிறதோ, அத்தனை உயரத்தில் நடிகை மின்னுகிறாள் என்பது, திரைத்துறையில் எழுதப்படாத மரபு.

அந்த நிமிஷம், அத்தனையும் ரசித்தாள். இந்த உலகத்தில் ஆசிர்வதிக்கப்பட்ட அழகான தேவதை, தான் தானென்று எண்ணினாள்.

காலம் ஓடியது. 10 ஆண்டுகள், கதாநாயகி பயணத்தில் மிகப்பெரிய துாரம். உச்சத்தில் இருக்கும்போதே, உச்சத்திலிருந்த ஆறெழுத்து இயக்குனருடன் திருமணம். ஒரே ஆண்டில் திருமண முறிவு. திரும்ப நடிக்க வந்தபோது, அவளுக்கான இடம் அங்கில்லை.

கொஞ்ச நாட்கள், 'கதாநாயகி வேடம் வந்தால் தான் நடிப்பேன்...' என்று, அடம் செய்தாள். ம்ஹும், யாரும் சீண்டவில்லை.

எப்போதும் பேரன், பேத்திகளுடன் இருப்பது தான், தனக்கு ஆனந்தம் என்று, தங்கை வீட்டிலேயே தங்கினாள், அம்மா. தனிமையையும், வெறுமையையும் வெல்ல இயலாமல் நிறைய குடித்தாள்; உருமாறினாள்.

ஜோடியாக நடித்த நடிகருக்கே அண்ணியாக, அக்காவாக நடிக்க ஆரம்பித்தாள். 'ப்ரியா ப்ரியா...' என்று, அன்று சுற்றிய கதாநாயகர்கள் எல்லாம், இப்போது, 'ஹலோ' சொல்லக் கூட தயங்கினர்.

அலைபேசி அலறியது.

''ஹாய் சண்முகி...'' என்றார் இயக்குனர், லோகிதாஸ்.

''ஹாய் சார்... ஹவ் ஆர் யூ...''

''எங்க இருக்கீங்க?''

''வீட்டுல தான். பட், ஈவினிங் ஐதராபாத் கிளம்பறேன். தெலுங்கில், ஜூனியர் என்.டி.ஆருக்கு மதர் கேரக்டர் பண்றேன்.''

''அப்படியா,'' என்று, இழுத்தார்.

''என்ன விஷயம், லோகி சார்... சொல்லுங்க.''

''இல்ல, கழிப்பறையின் அவசியத்தை சொல்றா மாதிரி நீங்க நடிச்சு குடுக்கணும். 'டாக்குமென்ட்ரி' ஒரு போர்ஷனும், துார்தர்ஷன்ல தினமும் போடுற மாதிரி, 'ஆட்' ஒண்ணும் எடுக்கணும்... ஒருநாள், 'கால்ஷீட்' குடுத்தா போதும்!''

''இன்னைக்கே வரட்டுமா... 'ஷூட்டிங்' எங்கே?'' என்றாள்.

''சம்பள விவகாரம், உங்க மேனேஜர்கிட்ட பேசிக்கறேன்.''

''அய்யோ, லோகி சார்... இதுல பேச எதுவுமில்லை. இதெல்லாம் ஒரு வகையான, சோஷியல் சர்வீஸ்... யூ நோ... நான் எங்க வரணும், அதை மட்டும் சொல்லுங்க.''

லோகிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

'உழைக்க உடலும், மனசும் தயாராக இருக்கிற காலத்திலேயே, சினிமாவில் ஓய்வு வந்து விடுகிறது. ஆயுள் குறைந்த வேலை நாட்களில், அடுத்த நகர்தலுக்கு வழி இல்லாமல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவும் இயலாமல், அவர்கள் படுகிற வேதனை இப்படித்தான் இருக்கும்...' என்று, அவரால் உணர முடிந்தது.

கதாநாயகியாக நடித்த காலத்தில், ஒரு வேளை கூட ஓய்வின்றி ஓடி ஓடி நடித்தது. நீண்ட இடைவெளிக்கு பின், இப்போது, 'ஷூட்டிங்'கில், சண்முகப்ரியா கலந்து கொண்டது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இவளை, டாக்குமென்டரி படத்தில் பார்த்ததும், சீரியலில், வில்லி வேடத்தில் நடிக்க அழைப்பு வந்தது.

டி.ஆர்.பி.,யில் பூஜ்யத்தில் இருந்த, 'டிவி' நிகழ்ச்சிக்கு, 'ஜூரி'யாக போக ஒத்துக் கொண்டாள். சாம்பார் பொடி விளம்பரம், 'நைட்டி' விளம்பரம், 'மெட்டானிட்டி ஹாஸ்பிடல்' விளம்பரங்களில் வந்து போக ஆரம்பித்தாள்.

தினமும், 'மேக் - அப்' போட்டு, காத்திருப்பதற்கான அர்த்தம் கிடைத்தது போல், சந்தோஷமாக இருந்தது. காசே தராவிட்டாலும் ஏதாவது ஒரு, 'ஷூட்டிங் ஸ்பாட்'டில் உட்கார்ந்து கொள்ள மனசு ஆசைப்பட்டது.

அன்று ஞாயிற்றுக்கிழமை -

'வெளியில் போய் விடாதே, வீட்டிற்கு வருகிறோம்...' என்று அம்மா மற்றும் தங்கையிடம் இருந்து தகவல் வந்ததும், சமையல்கார அம்மாவிடம், வஜ்ஜிரம் மீன் வறுவலும், சிக்கன் பிரியாணியும் செய்யச் சொன்னாள்.

அம்மாவும், தங்கையும் வெறும் கையோடு வந்தனர்.

''எனக்கு எதுவும் எடுத்து வரலையாம்மா?'' என்றாள், ஏக்கமுடன்.

தடுமாற்றமாய், ''அது வந்து... உன்கிட்ட என்ன இல்ல, சண்முகி,'' என்றாள், அம்மா.

''என்கிட்ட எல்லாமே இருக்கிறதா நினைக்கிறியாம்மா... வாழ்க்கை இல்ல, நிம்மதி இல்ல, குடும்பம் இல்ல... இதெல்லாம் எனக்கு தேவையே படாதுன்னு நீ நினைச்சுட்டியா.''

''அக்கா, எவ்வளவு பெரிய ஸ்டாரா இருந்த நீ... இப்ப, புகழ் இல்லாத, 'டிவி' நிகழ்ச்சிகளில், சின்ன சின்ன வேஷத்தில் மறுபடி ஏன் நடிக்கற... யானை படுத்தாலும் குதிரை மட்டம்ங்கற மாதிரி ஏன் வாழணும்,'' என, கேட்ட, தங்கையின் முகத்தையே கூர்ந்து பார்த்தாள்.

''நான் என்ன செய்யட்டும், பரிமளா... பழைய நினைவுகள் சுகமா இருக்குங்கிறதுக்காக, காலையில எழுந்து, ராத்திரி படுக்கற வரைக்கும் அதையே நினைச்சு வாழ முடியுமா?''

''எனக்கு புரியலைக்கா... உனக்கு என்ன குறை. பல கோடி சொத்து சேர்த்தாச்சு. அதுல இருந்து குறையாத வருமானம் வர்ற வழிகளையும் செஞ்சாச்சு. நினைச்சதை சாப்பிட்டு, நேரத்துக்கு துாங்கி, உலகத்துல உள்ள மூலை முடுக்கெல்லாம் சுத்தி, கோவில் குளம்ன்னு நீ நிம்மதியா இருக்க வேண்டிய காலம். அதை விட்டுட்டு கழிப்பறை விளம்பரத்துலயும், தயிர் விளம்பரத்திலயும் நடிக்கிறது நல்லாவா இருக்கு...

''போரடிக்குதுன்னு நடிக்கிறேன்னாலும், பாக்குறவங்களுக்கு, நீ பணத்தாசையால நடிக்குற மாதிரி தானே இருக்கு. ஓ.கே., நான் ஒத்துக்கறேன். இப்பவும் கதாநாயகி வாய்ப்புக்காக காத்துட்டு இருக்க முடியாது தான். ஆனா, பெரிய பேனர்ல பெரிய நடிகர்களோட படங்கள்ல, 'சப்போர்டிங் கேரக்டர்' பண்ணாலும் கவுரவமா இருக்கும்,'' என, பரிமளா பேசப் பேச, அமைதியாக இருந்தாள்.

மேலும், ''போன வாரம், நம் சொந்தக்காரரை, திருச்செந்துார் கோவில்ல பார்த்தேன். 'என்ன பரிமளா, உங்க அக்காக்கு அத்தனை காசு மொடையா...'ன்னு கேட்டு சிரிக்கிறாங்க. எனக்கு அவமானமா போச்சு. உன்னை மாத்திக்க, இதை சொல்ல தான் வந்தோம்,'' என்றாள், பரிமளா.

''எங்க போனாலும், என்னை மாதிரி நடிகையரை காட்சி பொருளா தானே பாக்குறாங்க. கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டா, அழுதா, சிரிச்சா, அத்தனையுமே நடிப்பா தான், இந்த உலகத்துக்கு தெரியுது. கோவில்ல போய் இரண்டு மணி நேரம் உட்கார்ந்துட்டு வர்ற சுதந்திரம் கூட எங்களுக்கில்லை...

''ஒரு கட்டத்துக்கு பின், மிதமிஞ்சிய ஓய்வு கூட பெரிய தண்டனை, பரிமளா. அழகான கடந்த காலங்கள், அமைதியான எதிர் காலத்துக்கு எதிரி... ஓய்வு, சுகமா... இல்ல... சுமையா இருக்கு,'' என்றாள் வருத்தமாக.

''இதுக்கு தான் நாங்க அப்பவே சொன்னோம்... கட்டினவன் கூட ஒழுங்கா இருந்து குடும்பம் நடத்தி, புள்ளை குட்டிகளை பெத்துகிட்டு, பொறுப்பா வாழணும்ன்னு,'' என ஆரம்பித்து, சுரத்தே இல்லாமல் முடித்தாள், அம்மா.

''என் திருமண வாழ்க்கை எதனால முறிஞ்சதுன்னு உங்களுக்கு தெரியாது இல்ல... நீங்க இப்படி பேசும் போது, சிரிப்பு வருதும்மா. தான் நினைச்சதை அடைய, அவர், என்னை பயன்படுத்த நினைச்சது உங்களுக்கு தெரியாதா...

''நடிகைதானே, எப்படி வேணா அவளை பயன்படுத்திக்கலாம்ன்னு நினைச்சவன் கூட எப்படி வாழ முடியும். பணம், வசதி இதெல்லாம் எதுக்கு, பரிமளா... எனக்கு, இப்போ இதிலெல்லாம் துளியும் இஷ்டமில்லை... காலையில் எழுந்து சினேகமா சிரிக்க, இன்னொரு முகமில்லாத வாழ்க்கை பெரும் தண்டனையா இருக்கும்மா...

''ஒண்ணு வேணா பண்ணலாம், இந்த திரண்ட சொத்தையும், வசதியையும் அனுபவிக்க யார் இருக்கா... உன்னையும், உன் குழந்தைகளையும் தவிர... நான் எப்பவும் உன்கிட்ட கேட்குற மாதிரியே கேட்குறேன், நீ, உன் குடும்பத்தோட இங்கேயே வந்துடு... எனக்கு அது பெரிய, 'ரிலீபா' இருக்கும்,'' என்றாள், சண்முகப்ரியா.

இதற்கு என்ன பதில் வருமென்று அவள் உணர்ந்தே, நப்பாசையுடன் கேட்டாள்.

''அதெல்லாம் முடியாதுக்கா,'' என்றாள் வெடுக்கென்று.

அக்காவின் தனிமையும், நடிப்பு தொழிலின் மீது விழுந்து கிடக்கும் முத்திரையும், அவள் தன்னுடன் இருந்தால், தன் வாழ்க்கைக்கு நல்லதல்ல என்று நினைத்தாள். ஆனாலும், இந்த நடிகை சம்பாதிச்சு தந்த காசில் தான், அவள் கணவன் ஆஸ்திரேலியா சென்று, எம்.எஸ்., படித்தான்.

''அம்மா, நீயாவது என்கூடயே தங்கிடேன்... பரிமளாக்கு தான் எல்லாரும் இருக்காங்களே... எனக்கு யாருமில்லையே,'' என்றாள்.

''என்னை விட வயசுல சின்னவ நீ... உன்னாலயே தனியா இருக்க முடியல. என்னை யோசிச்சு பாரு... பேரப் புள்ளைகளை பார்க்காம, ஒருநாள் கூட என்னால இருக்க முடியாது. தள்ளாத வயசுல என்னை தண்டிக்காதே, சண்முகி,'' என்றாள், அம்மா.

இரண்டுமே அறிந்த பதில்கள் தான். அதனாலேயே பெரிதாய் மனசு அதிரவில்லை. பார்வையிலும், பாவனையிலும் மறுபடியும் அந்த நளினம் வந்து ஒட்டிக் கொண்டது.

''ஓ.கே., நோ ப்ராபளம்... நீங்க சாப்பிட்டு கிளம்புங்க. சாயந்திரம் ஒரு பார்ட்டிக்கு போகணும்,'' என்றபடியே மாடியேறிச் சென்றாள்.

'நடிக்கும்போதே செத்துப் போக வேண்டும்...' என்று, புகழ்பெற்ற நடிகர்கள் சொன்னதன் அர்த்தம், இப்போது தான் விளங்கியது.

நினைவாகாத கனவுகளோடு வாழ்வதும், ஒரு போதை தான். நிஜத்தில் தட்டுபடாத வாழ்க்கையை நிழலில் தேடி, மீண்டும் அரிதாரம் பூசினாள், சண்முகப்ரியா.

எஸ். மானஸா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us