PUBLISHED ON : மார் 08, 2020

பி.வி. ரவிக்குமார், சென்னை: அலுவலகத்துக்கு, 'டீ' வாங்கிக் கொடுத்த அனுபவங்களை எழுதுகிறீரே... ரேஷன் கடையில், 'க்யூ'வில் நின்றவை பற்றியும் எழுதுங்களேன்...
அலுவலகத்தின், 'எல் - 2'வில், 'மெஸ்' இருக்கும்போது, ரேஷன் கடையில் ஏன் நிற்கப் போகிறேன்!
பி.சி. ரகு, பள்ளிச்சேரி, விழுப்புரம்: நேர்மையாக இருந்தால், வாழ்வில் முன்னேறவே முடியாதா?
ஏன்... காந்தி, காமராஜர், கக்கன் மற்றும் அண்ணாதுரை போன்றோர் நம்மிடையே தானே இருந்தனர்!
* எஸ். சாந்தி சிவசங்கர், கடலுார்: ஓட்டு போடுவது மட்டும் தான், மக்களின் ஜனநாயக உரிமையா?
ஆம்... அது மட்டும் தான்! ஆனால், இவர்கள், ஓட்டுப் போடுவது, காசு வாங்கிக் கொண்டு, அராஜகத்தை உருவாக்குவோருக்கு அல்லவா... மக்களின் போக்கு இப்படி இருந்தால், ஜனநாயகம் எப்படி உருப்படும்...
எஸ். பிரேமாவதி, சென்னை: இன்றைய உலகில், நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்பவர் யார்?
வங்கிகளை ஏமாற்றி, 9,000 கோடி ரூபாயில் ஆரம்பித்து, பல லட்சம் கோடிகளை வாயில் போட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி வாழ்பவர்கள் தான்!
எஸ். இளங்கோ, அவிநாசி: கஞ்சா விற்றால் சிறை தண்டனை... ஆனால், மதுபானம் விற்று, அரசே ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறதே... ஏன் இந்த முரண்பாடு?
அரசு கடன், 4.57 லட்சம் கோடி ரூபாய் ஆகிவிட்டது; ஒரு தனி நபரின் கடன், இதன் மூலம், 58 ஆயிரம் ரூபாய் ஆகிவிட்டது. கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அரசுக்கு வருமானம், மது மூலம் தான் கொஞ்சமாகக் கிடைக்கிறது. இதில், கஞ்சாவை அனுமதித்தால், அரசின் கடன் சுமையை நினைத்துப் பாருங்கள்; அதனால் தான், 'டாஸ்மாக்!'
* காசிதாசன், வந்தவாசி: ஒருவனுக்கு, புத்தி எப்போது கெட்டுப் போகிறது?
தொழிலில், அனுபவமிக்க கூட்டாளிகளை விட, தான் அறிவாளி என நினைக்கும்போது, அவனுக்கு புத்தி கெட்டுப் போகிறது; கூட்டு உடைந்து போகிறது! புத்தி கெட்டவன் அதோடு, 'குளோஸ்!'
