PUBLISHED ON : மார் 08, 2020

ப
மதுரை மாவட்டத்தில் உள்ள, அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர், எஸ்.ஆர்.சாந்தி; அந்துமணியின் அதி தீவிர வாசகி. அவர் எழுதிய கடிதம்:
மதிப்பிற்குரிய அந்துமணி அவர்களுக்கு,
வணக்கம். மதுரையிலிருந்து உங்களது, 'அதி தீவிர வாசகி' எழுதுகிறேன். பெயர் சொல்லி, அறிமுகப்படுத்திக் கொள்ள தேவையில்லை. கையெழுத்தை பார்த்தே, நான் யார் என்பதை, அடையாளம் கண்டு கொண்டிருப்பீர்கள். அதனால், நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.
நீண்ட, தொடர் முயற்சிகளுக்கு பின், தற்போது தான் தங்களது, 'அந்துமணி பதில்கள்' தொகுப்பு நுால் கிடைத்தது. அந்நுாலை பார்த்தபோது, என்னுள் தோன்றிய சில உணர்வுகள் மற்றும் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
'ஆரம்பமே அமர்க்களம்...' என்பர். 'அந்துமணி பதில்கள்' புத்தகத்தை பார்த்தவுடன், 'அட்டை படமே அட்டகாசம்...' என, மனம் துள்ளியது. உள்ளே, 'குருவின் குரு' (அதாவது, எனது குரு நீங்கள்... உங்கள் குரு, லேனா தமிழ்வாணன்) அணிந்துரையை படித்தபோது, 'அந்துமணி பதில்கள் எனும் விதை முளைத்து, விருட்சமாய் தழைக்கச் செய்த காரணகர்த்தாவே... வாழ்க, நீ எம்மான்...' என, வணங்கத் தோன்றியது.
சுமார், 10 ஆண்டுகளில் வெளிவந்த, கேள்வி - பதில்களில், 1,520 கேள்விகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அதற்குரிய பதில்களை, மிக நேர்த்தியாக, அனைத்து வயதினரும் வாசிக்கும் வகையில், நன்கு இடைவெளி விட்டு, கச்சிதமான வடிவில் எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருப்பது, உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
உள்ளே, ஒவ்வொரு பக்கமாக புரட்ட புரட்ட, வாசகர் பெயர்களையும், ஊரையும் வாசிக்கும்போது, கல்லுாரி மாணவர்கள், 25 - 30 ஆண்டுகளுக்கு பின், சந்தித்து அளவளாவும்போது ஏற்படுமே ஒருவித நெகிழ்ச்சி... அதுபோல, உணர்ச்சி பிழம்புகள் மனதில் பொங்கி எழுந்தது.
அந்த காலத்து நினைவுகள் எல்லாம், 'பசுமை நிறைந்த நினைவுகளே' என, கண்ணில் நிழலாடியது. 1990களில், நான் எழுத துவங்கியிருந்த நேரம் என்பதால், அந்த சமயத்தில், 'அந்துமணி பதில்கள்' பகுதியில், கேள்விக் கணைகளை தொடுத்த பல வாசக நண்பர்களின் ஞாபகம், என் உணர்வுகளை உலுக்கியது. ஏதோ, அந்த ஆண்டிற்கே சென்று விட்டது போன்ற உணர்வு. எத்தனை சந்தோஷமான காலகட்டம் அது.
பல கேள்விகள் அடங்கிய தபால் அட்டைகளை அனுப்பி, இந்த வாரம்,
நம் கேள்வி நிச்சயம் இடம்பெற்று விடும் என்ற நம்பிக்கையிலும், ஆர்வத்திலும், ஞாயிற்றுக் கிழமை காலை எப்போது விடியும், 'தினமலர்' நாளிதழ் கைக்கு எப்போது வரும் என, வாசலில் தவமிருந்த நாட்களும்...
நினைத்தது போலவே, கேள்வி - பதில் பகுதியில் இடம்பெற்றிருந்தால், துள்ளிக் குதித்து, அன்று முழுதும், ஆசை தீர பதில்கள் பக்கத்தையே திரும்பத் திரும்ப பார்த்து, மனம் மகிழ்ந்ததும்... என் கேள்வி இடம்பெறாத போது, 'ஐயோ, இவருடையது வந்திருக்கிறது... அவருடையது வந்திருக்கிறது... என்னுடையது வரவில்லையே...' என, அங்கலாய்த்ததும்...
சில சமயங்களில், 'அந்துமணி பதில்கள்' பகுதியே இடம்பெறாமல், 'எஸ்கேப்' ஆகியிருப்பதை பார்த்து, 'இந்த மனுஷருக்கு பதில் எழுதக் கூட நேரமில்லையா... ச்சே...' என, புலம்பி, அர்ச்சனை பகுதிக்கு திட்டோ திட்டென்று திட்டி, விமர்சன கடிதங்கள் அனுப்பியதும், ஒவ்வொன்றாய் நெஞ்சில் நிழலாடுகிறது.
வாசக நண்பர்கள், திசைமுத்து, மதுரை; லவ்லி பாலகிருஷ்ணன், மதுரை; கல்யாண சுந்தரம், அனுப்பானடி; ராஜசேகரன், மதுரை என, ஒவ்வொரு வாசக நண்பர்களுடன் அளவளாவியதும், நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும், பதில்கள் பகுதியில் அடிக்கடி இடம் பிடிக்கும், எஸ்.மாலதி, முசிறி; ஜெயந்தி, நல்லுார்;
எஸ்.அந்தோணிசாமி, பாண்டிச்சேரி; இ.எஸ்.லலிதா, குடியாத்தம்; பி.எல்.பரமசிவம், மதுரை...
ரேவதிப்ரியன், ஈரோடு; என்.ஆசைத்தம்பி, ஆவடி; வே.செந்தில்குமார், கொங்கணாபுரம்; எஸ்.பி.ராமலிங்கம், பூதப்பாடி;
என்.உஷாதேவி, மதுரை ஆகியோரை, மானசீக நண்பர்களாக பாவித்த நாட்களும் கண் முன்னே விரிகிறது. ('இதெல்லாம் இருக்கட்டும், கருத்து எங்கேம்மா...' என, நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.)
நீங்கள் ஒரு தீர்க்கதரிசி, கொள்கை பிடிப்பாளர், யதார்த்தவாதி, உண்மை விளம்பி, பகுத்தறிவாளர் என, இன்னும் நிறைய்ய்ய அடுக்கிக் கொண்டே போகலாம். அனைத்திற்கும் காரணம், உங்கள் பதில்கள் தான்!
ஒரே கேள்வியை எத்தனை விதமாக மாற்றி, வெவ்வேறு நபர்களுடன், வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புபடுத்திக் கேட்கப்பட்டாலும், உங்களது பதிலில் ஒரே நிலைப்பாடு தான் வெளிப்படுகிறது.
'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பர். அதுபோல, உங்களது பதில்களிலிருந்து சிலவற்றை மட்டும், இங்கே உதாரணமாக காட்டியே தீர வேண்டும்...
'கணவனை இழந்தவர்களுக்கு மறுவாழ்வு தருகிறோம் எனக் கூறும் இளைஞர்கள், அதற்கு பதிலாக, ஊனமுற்ற பெண்களுக்கு, வாழ்வு கொடுத்தால் என்ன...' என்ற கேள்விக்கு, திருமணமாகி, வாழ்விழந்த பெண்களின் நிலையிலிருந்து பதிலளித்த விதம் பாராட்டுக்குரியது.
இதேபோல், மறுமணத்தை ஆதரித்து, எல்லா இடங்களிலும் பதில் எழுதி இருந்தீர்கள். ஆந்திர முன்னாள் முதல்வர்,
என்.டி.ஆரின் மறுமணம் பற்றிய கேள்வியில் கூட, இந்த நிலைப்பாட்டை தளர்த்தாமல், ஆதரித்து பதில் எழுதியிருந்தது, உங்களது முடிவுகள் எப்போதும் தீர்க்கமானதாகவும், எந்த நிலையிலும், யாருக்காகவும், மற்றவர்களுக்கு உட்படாது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
'கற்பழிப்பில் ஈடுபடும் ஆண்களின் ஆண்மையை அகற்ற வேண்டும் என்கிறாரே, நடிகை ரேவதி...' என்ற கேள்விக்கு, 'பயன் தராது. அதற்கு பதில், கயிற்றில் கழுத்தைக் கட்டி ஒரேயடியாக தொங்க விட்டு விடலாம்...' என்ற பதிலும்...
பாலியல் வன்முறைகள் பற்றிய பிற கேள்விகளுக்கு, 'மரண தண்டனை தான் ஒரே தீர்வு...' என்ற திடமான பதில், 'இந்திய தண்டனை சட்டத்தை மாற்றியே தீர வேண்டும்...' என்ற முடிவை, பல ஆண்டுகளாக நீங்கள் வலியுறுத்தி வருவது வெளிப்படுகிறது.
இனியாவது, அரசும், நீதித்துறையும், இதை உணர்ந்து, குற்றவாளிகள் மேல் எவ்வித கருணையும் காட்டாமல், தண்டனை வழங்கி, பெண்களுக்கு நீதியும், பாதுகாப்பும் தருமா என்ற ஆதங்கம், எங்களுக்கு எழுகிறது.
அடுத்ததாக, 'மதிப்பெண்களை மட்டும் வைத்து, மாணவர்களின் திறமையை எடை போட முடியுமா?' என்ற கேள்விக்கு, கூறிய பதில், இன்றைய கல்விமுறையின் குறைபாட்டை, தெள்ளத் தெளிவாய் எடுத்துக் காட்டுகிறது.
பொது தேர்வுகளில், 'பிட்' அடிப்பது குறித்த கேள்விக்கு கொடுத்துள்ள பதிலும், தேர்வு முறையை மாற்றியே ஆகவேண்டும் என்று, அன்றே சொன்ன கருத்து இன்னமும், 'செவிடன் காதில் ஊதிய சங்காக'வே உள்ளதை நினைக்கும்போது, வருத்தமாக உள்ளது.
'சினிமா பார்ப்பதை நிறுத்தி விடலாம் என, முடிவு செய்துள்ளேன்' என்பன போன்ற கேள்விகளுக்கு அளித்திருந்த பதில்கள் மூலம், 'சினிமா, மக்களின் பொன்னான நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் சுரண்டி வீணடிக்கிறது...' என்ற கருத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
வைகோ பற்றிய கேள்விகளுக்கு, நீங்கள் அளித்திருந்த பதில்களை பார்த்தால், அப்பா... வாய்ப்பே இல்லை. இன்றைக்கும் கூட அந்த பதில்கள், 100 சதவீதம் பொருந்தி வருகிறது என்பது தான், 'ஹைலைட்' ஆன விஷயம்.
'பா.ஜ.,வின் எதிர்காலம்?' என்ற கேள்விக்கு, 'ரொம்ப கவனமாக காய்களை நகர்த்தி வருகின்றனர். தேசிய கட்சியாக உருவாகி வரும், 'டிரென்ட்' தெரிகிறது...' என, 20 ஆண்டுகளுக்கு முன்பே அழுத்தம் திருத்தமாக பதிலளித்து இருந்தது, 'மனுஷருக்கு என்னமா மூளை வேலை செய்யுது...' என, ஆச்சரியப்பட வைத்தது.
இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல், ஒரு பதில் அளித்துள்ளீர்களே... அதை நினைத்தால், 'அப்பப்பா... கடவுள், உங்களுக்கு மட்டும் தனி மூளையையும், சிந்திக்கும் ஆற்றலையும் தந்து விட்டாரா...' என, நினைக்கத் தோன்றுகிறது.
கேள்வி இது தான்: 'ஸ்டாலின் அடுத்த முதல்வரா?' பதில்: 'எந்த டுட்டோரியல் காலேஜுக்கு!'
இதைப் போல், இன்னும் பல பதில்களை பற்றி ஒப்பிட்டு அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களுக்கு, இதையெல்லாம் படிக்க நேரமிருக்காது என்பதால், ரத்தினச் சுருக்கமாக இத்துடன் என் கருத்துக்களை முடித்துக் கொள்கிறேன்.
கேள்வி கேட்பது சுலபம்; பதில் சொல்வது கடினம் என, எல்லாருக்கும் தெரியும். ஆனால், பதில் சொல்லும் வித்தையை மிக இலகுவாக செய்யும் உமது மூளைக்கும், விரல்களுக்கும் கோடான கோடி நன்றிகள்! வாழ்க பல்லாண்டு!
விரைவில், பயணக்கட்டுரை தொகுப்பு, பா.கே.ப., தொகுப்பு ஆகியவற்றை எதிர்பார்க்கிறோம்.
