தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நூற்றாண்டு நாயகன் - ஜெமினி கணேசன்! (2)

நூற்றாண்டு நாயகன் - ஜெமினி கணேசன்! (2)

நூற்றாண்டு நாயகன் - ஜெமினி கணேசன்! (2)


PUBLISHED ON : மார் 08, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பேச்சில், சிரிப்பில், செயலில், வாழ்வில் மென்மையான போக்கை கடைப் பிடிப்பவர்களை அனைவருக்கும் பிடிக்கும். அப்படி அனைவராலும் கொண்டாடப்பட்ட கலைஞர் தான், ஜெமினி கணேசன். ஜெமினி கணேசன் பற்றி கேட்டால், 'அவர், பெரிய காதல் மன்னனுங்க. காதல் காட்சிகளில் ரொம்ப நல்லா நடிப்பாருங்க. எம்.ஜி.ஆர்., - சிவாஜிகணேசனுக்கு அடுத்து பேசப்பட்ட பெரிய, 'ஹீரோ'ங்க...' என, இப்படித்தான் இருக்கும் சிலரின் கண்ணோட்டம்.

ஆனால், அவர், ஒரு பட்டதாரி; கல்லுாரி பேராசிரியர். குத்துச் சண்டை வீரர், வில் வித்தை, கத்திச் சண்டை, துப்பாக்கி சுடுதல், குதிரையேற்றம் மற்றும் யானை ஏற்றம் என அனைத்தும், முறைப்படி கற்றவர் என்பது, பலருக்கு தெரியாது.

கோலி, கிட்டிப்புள், கிரிக்கெட், டென்னிஸ் மற்றும் கபடி விளையாட்டு வீரர். வேட்டைக்காரர், சினிமா நட்சத்திரங்களின் தேர்வாளர், யோகாசனம் தெரிந்தவர். பண்பட்ட நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என, பல முகம் கொண்டவர். தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கிலம் என, ஏழு மொழிகளை பேசும் கலைஞன். நான் அவனில்லை படத்தில், இவரது பன்மொழி புலமையை அறியலாம்.

புதுக்கோட்டையில், வசதிமிக்க மிகப்பெரிய குடும்பத்தில், ராமசாமி அய்யர் - கங்கம்மாள் தம்பதியின் புதல்வராக, நவ., 17, 1920ல் பிறந்தார். பெற்றோர் அவருக்கு சூட்டிய பெயர், கணபதி சுப்ரமணியன் சர்மா. இதில், கணபதி (கணேசன்) மட்டும், அவரது பெயரில் நிலைத்து விட்டது.

கணேசனின் ஆரம்ப கல்வி, புதுக்கோட்டையில் உள்ள, குலமது பாலையா பிரைமரி ஸ்கூலில் துவங்கியது. படிப்பில் கெட்டிக்கார பிள்ளையாகவே இருந்தார். படிப்போடு விளையாட்டும், குறும்புத்தனமும் ஏராளம் இருந்தது. இவரது, 10வது வயதில், தந்தை இறந்து விட, அம்மாவுடன், சென்னையில் உள்ள அத்தை வீட்டுக்கு வந்து விட்டார்.

சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள, சர் எம்.சி.டி.முத்தையா செட்டியார் பள்ளியில், மூன்றாம் வகுப்பில் சேர்ந்தார். தனது வகுப்பாசிரியர், ரங்க ராமானுஜ அய்யங்கார் மற்றும் எம்.பாஷ்யம் அய்யங்காருடன், நல்ல நட்புடன் இருந்தவர், நடிகர் ஆன பிறகும், நட்பை தொடர்ந்தார்.

மீண்டும் அவரின் படிப்பு இடம் பெயர்ந்தது. மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மாணவர் இல்லத்திலேயே தங்கி, படிப்பை தொடர்ந்தார்.

ராமகிருஷ்ணா மாணவர் இல்லத்தில் தான், நாடகம், நடிப்பு, யோகாசனம், பாட்டு மற்றும் ஆன்மிகம் என்று, பல கலைகள் அவருக்கு அறிமுகமானது. அங்குள்ள மாணவர்கள் சிலருடன் சேர்ந்து, லீலா சுகர் என்ற நாடகம் நடத்தப்பட்டது. அதில், முதல் முறையாக, பாலகிருஷ்ணன் வேடம் ஏற்று, மேடை ஏறினார், கணேசன்.

அந்த வேடத்திற்காக, அவர் உடம்பு முழுக்க நீல சாயம் பூசப்பட்டு, நீலவண்ண கண்ணனாக மாற்றப்பட்டார்; கையில் ஒரு புல்லாங்குழல் கொடுத்தனர்.

நாடகம் துவங்குவதற்கு முன், அதில் நடிப்பவர்கள் எல்லாம் சேர்ந்து, 'குரூப் போட்டோ'வுக்கு, 'போஸ்' கொடுத்தனர். அதேபோல், பாலகிருஷ்ண வேடத்தில், பால கணேசனை அசையாமல் நிற்க சொல்ல, அவரும் அப்படியே நின்றார்.

இதை பார்த்த ஒரு மாமி, 'இந்த கிருஷ்ணன் பொம்மை எவ்வளவு அழகாக இருக்கு பார்த்தியா...' என்று சொல்ல, அதே நேரத்தில், கணேசன் கையை கீழே தொங்க போடுவதை கவனித்த இன்னொரு மாமி, 'அது, பொம்மை இல்லேடி... சின்ன பையன். கிருஷ்ணர் வேஷம் போட்டிருக்கிறான்...' என்றிருக்கிறார்.

கணவனே கண் கண்ட தெய்வம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான, பட்டண்ணாவின் தாத்தா டபிள்யு துரைசாமி அய்யங்கார், பிரபல புத்தக வெளியீட்டாளர். அவருக்கு, பக்தி பாடல்கள் மற்றும் கீர்த்தனைகள் பாடுவது ரொம்ப பிடிக்கும். அதேபோல, குழந்தைகளுக்கு பாடல் சொல்லி கொடுப்பதை பொழுது போக்காக கொண்டவர்.

வாரத்தில் இரண்டு முறை, ராமகிருஷ்ணா இல்லத்துக்கு வந்து, மாணவர்களுக்கு, மாலை நேரத்தில், திருப்பாவை, தியாகராஜ கீர்த்தனைகளை, அழகாக, எளிமையாக கற்றுக் கொடுத்தார்.

'மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளாம், நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்...' என்று, அவர் பாடும்போது, இன்றெல்லாம் கேட்கலாம். அவ்வளவு இனிமையாக இருக்கும்.

அதேபோல், முசிறி சுப்ரமணிய அய்யரும் அவ்வப்போது இல்லம் வந்து, பாட்டு சொல்லி கொடுப்பார்.

கணேசன், நடிகனாக மட்டுமின்றி, முதன் முதலாக பாடகனாக தோன்றி பரிசு பெற்றதும், அதே மாணவர் இல்லத்தில் தான்.

இல்லத்தில் நடந்த பாட்டு போட்டிக்கு, காலஞ்சென்ற இசை மேதை, டைகர் வரதாச்சாரியார் தான், நடுவர். அவர் முன், 'கிருஷ்ணா நீ பேகனே பாரோ...' என்ற பாடலை பாடி, முதல் பரிசை பெற்றார், ஜெமினிகணேசன்.

இல்லத்து மாணவர்களால், 'அண்ணா... அண்ணா...' என்று அன்பாக அழைக்கப்படுபவர், என்.சுப்ரமணியய்யர். மாணவர்களுக்கு, வேதம் மற்றும் பகவத்கீதை முதலியவற்றை நிறுத்தி, நிதானமாக சொல்லிக் கொடுப்பதுடன், யோகாசனங்களும் கற்றுக் கொடுப்பார், அவர். இவர்களால்தான் கணேசனும், இசையில் ஈடுபாடும், புலமையும் பெற்றார்.

ஜெமினி கணேசனின் பட்ட மேற்படிப்பு, தாம்பரத்தில் உள்ள, மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லுாரியில் ஆரம்பமானது. அவர் எங்கு சென்றாலும், நண்பர்கள் வட்டம் கூடிவிடும். அவரது கலகலப்பான பேச்சும், வசீகரமும், அனைவருக்கும் பிடித்திருந்தது. எனவே, நண்பர்கள் வட்டத்தில், 'ஹீரோ' ஆனார்.

அக்கல்லுாரியில் நடந்த, போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றதால், 'ஸ்காலர்ஷிப்' கிடைத்தது. படிப்பில், விளையாட்டில் அவர் கொண்டிருந்த ஆர்வத்தை அவரே சொல்கிறார்:

பாடத்தை விட, விளையாட்டில் எனக்கு ஆர்வம் அதிகம் இருந்தது என்றாலும், வகுப்பில் முதல் மாணவனாக திகழ்ந்தேன். கல்லுாரியில், 'டீம் கேப்டன்' ஆக இருந்தது, மறக்க முடியாதது. என், 'டீமில்' அருமையான கிரிக்கெட் வீரர்கள்

இருந்தனர். அங்கு தான், முறையாக, வேகமாக கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்டேன்.

கல்லுாரியில், நாடகங்கள் நடத்துவது, நடிகர்களை, அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தேர்வு செய்வது வரை, எனக்கு முக்கிய பணிகள் கொடுக்கப்பட்டிருந்தன. பல நாடகங்களில், 'ஹீரோ' ஆக நடிக்கவும் செய்தேன், என்கிறார்.

தொடரும்.

சபீதா ஜோசப்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us