
விஜயிடம், விஜய்சேதுபதி போட்ட ஒப்பந்தம்!
கனடா நாட்டில், 'பிலிம் மேக்கிங்' படிப்பு படித்து வரும், நடிகர் விஜயின் மகன், சஞ்சய் நடிக்கும் முதல் படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது, உப்பெனா என்ற தெலுங்கு படத்தின், தமிழ், 'ரீ - மேக்'கில், அவரை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார், நடிகர் விஜய்சேதுபதி. விஜயுடன், மாஸ்டர் படத்தில், வில்லனாக நடித்துள்ள விஜய்சேதுபதி, அந்த படத்தில் நடிக்கும்போதே, 'உங்கள் மகன், சஞ்சயை, நான் நடித்து, தயாரிக்கும் படத்தில் தான் அறிமுகம் செய்வேன்...' என்று, ஒப்பந்தம் போட்டு விட்டார்.
— சினிமா பொன்னையா
கணவரை, பாத்திரம் கழுவ வைத்த, ஸ்ரேயா!
சிவாஜி கேர்ள், ஸ்ரேயா, திருமணத்திற்கு பின், டென்னிஸ் வீரரான, கணவர் ஆண்ட்ரேவுடன், ஸ்பெயின் தலைநகர், பார்சிலோனாவில் குடியேறினார். படங்களில் நடிப்பதற்கு மட்டும், இந்தியா வந்து செல்லும் அவர், 'வீட்டில் இருக்கும்போது, சமையல் வேலைகளை நானே செயவேன்; என் கணவர், பாத்திரங்களை கழுவி கொடுப்பார்...' என்று, அதை ஒரு, 'வீடியோ'வாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
மேலும், தன்னுடன் நடித்த, ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்ட சில திருமணமான, 'ஹீரோக்'களுக்கு, அந்த, 'வீடியோ'வை அனுப்பி, 'என் கணவருடன், பாத்திரம் கழுவும் சவாலுக்கு தயாரா...' என்றும், போட்டிக்கு அழைத்துள்ளார், ஸ்ரேயா. அதையடுத்து மேற்படி, 'ஹீரோ'க்கள், அவருக்கு எந்த பதிலும் கொடுக்காமல், 'கப்சிப்' ஆகி விட்டனர். அடித்தது ஆட்டம்; பிடித்தது பெண்டு!
— எலீசா
திருமண சர்ச்சையை, காதல் சர்ச்சையாக்கிய, கீர்த்தி சுரேஷ்!
கடந்த சில வாரங்களாக, திருமண சர்ச்சையில் சிக்கி வருகிறார், கீர்த்தி சுரேஷ். அதையடுத்து அவரை நோக்கி கேள்விகள் பறந்தபோது, அதை மறுத்தவர், 'நான், சினிமாவில் நடிக்கத் துவங்கிய நேரத்தில், ஒரு இளம், 'ஹீரோ' என்னை காதலிப்பதாக சொன்னார். சினிமா கேரியர் முக்கியம் என்பதால், நான் அதற்கு உடன்படவில்லை...' என்று, வேறு விதமாக பதில் கொடுத்தார்; அந்த, 'ஹீரோ' யார் என்பதை, சொல்ல மறுத்து விட்டார்.
இதனால், 'அவரது திருமண சர்ச்சை மறைந்து, கீர்த்தியிடம் காதல் சொன்ன அந்த, 'ஹீரோ' யாராக இருக்கும்...' என்று, ஊடகங்கள் அசை போடத் துவங்கி விட்டன. அப்படி சொல்லுங்கள் வழக்கை; அவன் கையில் கொடுங்கள் உழக்கை!
— எலீசா
பிட்டு பட நடிகைகளையே, கதற விட்ட, பாயல் ராஜ்புட்!
சமீப காலமாக, நடிகர் -- நடிகையர், தங்களுக்கு ஏற்படும் விபரீத ஆசைகளையெல்லாம், 'வீடியோ'வாக வெளியிட்டு, தன்னைப் போலவே, மற்றவர்களையும் செய்யத் துாண்டும் வகையில், சவால் விட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை, பாயல் ராஜ்புட், தினசரி பேப்பரை, ஆடை போன்று, தன் உடம்பில், கீழாடை, மேலாடையாக அணிந்து, ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, 'இப்படி உங்களால், 'போஸ்' கொடுக்க முடியுமா...' என்று, பிட்டு பட நடிகைகளுக்கு, ஒரு அதிர்ச்சி சவால் விட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
இயக்குனர்களை கொந்தளிக்க வைத்த, ஹன்சிகா!
'இனிமேல், உடம்பை காண்பிக்க மாட்டேன், தெறமை காட்டப் போகிறேன்...' என்று, ஹன்சிகா, 'பில்ட் - அப்' கொடுத்தார். இதனால், அவரை, சினிமாவை விட்டே கழட்டி விட முடிவெடுத்தனர், இயக்குனர்கள். அதிர்ந்து போன நடிகை, சில கமர்ஷியல் இயக்குனர்களை தொடர்பு கொண்டு, 'சும்மா ஒரு பேச்சுக்கு தான் அப்படி சொன்னேன்; எல்லை தாண்டிய கவர்ச்சி கலாசாரத்திற்கும், நான் தயாராகவே இருக்கிறேன்...' என்று, அவர்களிடம் சத்தியம் செய்தார்.
அதோடு, வெறும் வாய் பேச்சு வேலைக்கு ஆகாது என்று, நீச்சல் குளங்களில், 'பிகினி' உடையில், தான் நீந்திக் குளிக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு, 'நீங்கள் எதிர்பார்க்கும் ஹன்சிகாவாகத் தான், நான் இப்போதும் இருக்கிறேன்...' என்பதை நிரூபித்துள்ளார், நடிகை. ஆடிக்கு அடைபட்டவளே, அமாவாசைக்கு வெளிப்பட்டவளே!
— எலீசா
கறுப்பு பூனை!
தமிழ் சினிமாவில், பிரமாண்ட இயக்குனர் தான், அதிகப்படியான கூலி வாங்குவதாக நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், காஞ்சனா நடிகரோ, அந்த படத்தை பாலிவுட்டில் இயக்க, 50 கோடி வாங்கி இருப்பதாக, பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால், இவரது வளர்ச்சியை, அனைவருமே பிரமிப்பாக பார்க்க துவங்கி விட்டனர். இதை பயன்படுத்தி, 'கோலிவுட்டின் பிரமாண்டமே நான் தான்...' என்று, தனக்குத் தானே சொல்லி, 'பில்ட் - அப்' கொடுத்து திரிகிறார், காஞ்சனா நடிகர்.
'நம்ம பேட்டையில, 'டான்ஸ், டிராமா'ன்னு அலைஞ்சுட்டு இருப்பானே, லாரன்சு; அவனுக்கு, 'டிவி' தொடரில் நடிக்க, வாய்ப்பு கிடைத்தாலும் கிடைத்தது. அவன் அலம்பல் தாங்க முடியலடா மச்சி...' என்று, தன் நண்பரிடம் புலம்பினார், பேட்டவாசி ஒருவர்.
சினி துளிகள்!
* பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிக்கும், சந்திரமுகி - 2 படத்தில், நாயகியாக நடிக்க முன்வரிசை நடிகையர் பலர், பலத்த போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.
* 'விஜயுடன் நடித்துள்ள, மாஸ்டர் படம், என் மீதுள்ள அசைவ நடிகை, 'இமேஜை' கண்டிப்பாக மாற்றும்...' என்கிறார், ஆண்ட்ரியா.
அவ்ளோதான்!