sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நீ நீயாக இரு!

/

நீ நீயாக இரு!

நீ நீயாக இரு!

நீ நீயாக இரு!


PUBLISHED ON : மே 10, 2020

Google News

PUBLISHED ON : மே 10, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடை மழை பெய்து கொண்டிருந்த, அதிகாலை, 2:00 மணியளவில், பரபரப்பாய் இருந்தது, சென்னை விமான நிலையம்.

இரவை பகலாக்க, ஆயிரக்கணக்கான மின் விளக்குகள் வரிந்து கட்டி ஒளியை வாரி இறைத்துக் கொண்டிருந்தன. போவதும் வருவதுமாய் இருந்த மக்கள் கூட்டம், கோயம்பேடு பேருந்து நிலையத்தையே மிஞ்சும் அளவுக்கு இருந்தது.

சென்னை வந்தடையும், விமானங்களின் பெயர்கள் அவ்வப்போது, 'டிஜிட்டல்' பலகையில், வண்ணங்களில் வந்து சென்றன. நீண்ட நேரம், ஆவலாய் அதையே பார்த்துக் கொண்டிருந்த வசீகரன், திடீரென பரபரப்பானான்.

இன்னும் அரைமணி நேரத்தில், வெளியே வந்து விடுவான், அசோக். பார்க்கிங்கில், டிரைவரை தயாராய் இருக்க, மொபைல் போனில் தகவல் சொல்லி, பயணிகள் வெளியேறும் வாயிலில் காத்திருந்த கூட்டத்தோடு ஐக்கியமானான்.

ஆண்டுகள் பல கடந்து, ஆண் துணையை பிரிந்திருக்கும் பெண்கள்; பிறந்தது முதல் பெற்றோரை பார்த்தறியா குழந்தைகள்; பிரிந்திருக்கும் பிள்ளைகளை காண காத்திருக்கும் முதியோர் என, பல சொந்தங்களின் கண்கள், உறவை காண துடித்துக் கொண்டிருந்தன.

ஒரு மணி நேரமாய் காத்திருந்த, வசீகரன், துாரத்தில் வந்த நண்பன் அசோக்கை பார்த்து ஆவலாய் கையசைத்து, 'சைகை' செய்தான்.

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய வேகத்தில், தயாராய் இருந்த வாகனம், சுமைகளை சுமந்து கொண்டது. சற்று நேரத்தில் புறப்பட்ட, 'கால் டாக்சி' செங்குன்றம் நோக்கி பறந்தது.

அதிகாலை, 4:00 மணி. உறங்கும் ஊரைக் கூவி கூவிக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தன, சேவல்கள். லேசாக வாகனங்களின் இயக்கம் துவங்கியது.

அமைதியாய் இருந்த, அசோக், கட்டடங்களை வெறித்தபடியே பயணித்தான். பின், ஏதோ நினைத்தவனாக, வசீகரன் பக்கம் திரும்பி, ''அம்மா எப்படி இருக்காங்க, வசீ... உன் மனைவியும், மகனும் எப்படி இருக்காங்க?''

''ஆமா, அசோக்... உன் மனைவி, பிள்ளைகள் நல்லா இருக்காங்களா... 'கிரீன் கார்டு' கிடைசிடுச்சாமே... அப்போ, மீண்டும் இந்தியா வருகிற எண்ணமே இல்லையாடா,'' என்றான், வசீகரன்.

''ஆமாடா, வசீ... பிள்ளைகளை, வெளிநாட்டுல படிக்க வைக்கணுங்கறது, மனைவியோட கனவு. அது, இப்போதான் நனவாகப் போகுது. 'கிரீன் கார்டு' கிடைச்சதும், எனக்கும் நம்பிக்கை வந்திருச்சு... இருந்த பரபரப்புல, உங்கிட்ட எதையும் சொல்ல முடியல... சாரிடா, வசீ; ஆமா, உன் பையன் வளர்ந்திருப்பானே... இப்போ என்ன படிக்கிறான்?''

''என் மனைவி வேலை செய்யற, அதே அரசு பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கிறான்.''

''என்னடா சொல்ற... ஒரு புகழ் பெற்ற, 'நியூரோ' டாக்டர் நீ... போயும் போயும் அரசு பள்ளியில் சேர்த்திருக்கேன்னு பெருமையா சொல்றே,'' என்று சிரித்தான்.

''என்னடா சிரிக்கறே.''

''டேய், அசோக்... உன் அம்மாவும், ஒரு அரசுப் பள்ளியில தான் ஆசிரியையா இருந்தாங்க. நீயும், நானும், அரசுப் பள்ளியில தான் படிச்சோம். இப்போ, நாம நல்ல நிலையில் இல்லையா... அத நினைச்சேன், சிரிச்சேன்,'' என்றான், வசீகரன்.

பயணக் களைப்பால், சிறிது கண்ணயர்ந்தவன், ஒரு வேகத் தடையில் வாகனம் ஏறி இறங்கியதும், சடாரென்று, துாக்கமும், கனவும் கலைந்து எழுந்தான், அசோக்.

''டேய்... அம்மா, ஏன் அவசரமா வரச் சொன்னாங்க... அதச் சொல்லவேயில்ல... ஏதாவது பிரச்னையா?''

''ஒண்ணுமில்ல, நீயே நேரில் வந்து தெரிஞ்சிக்கோ.''

ஒரு கணம் பதறி, ''என்னடா ஆச்சு... டேய், உன்னத்தாண்டா... அம்மாவுக்கு என்னாச்சு... நல்லாத்தானே இருந்தாங்க... போன வாரம் கூட, 'வீடியோ கால்'ல பேசினேன்டா... அதுக்குள்ள என்னாச்சு,'' என்றான், அசோக்.

'நீ, 'கிரீன் கார்டு' வாங்கிட்டு... அம்மாவுக்கு, 'ரெட் கார்டு' கொடுத்துட்டியேடா...' என, மனசுக்குள் பேசியபடி, அமைதியாய் இருந்தான், வசீ.

''டேய், வசீ... அம்மாவ பொறுப்பா பாத்துக்கணும்ன்னு, ஒரு உறவுக்கார பெண்ணை வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கேன். மாசம், 20 ஆயிரம் சம்பளம்; ஒரு, 'ஸ்மார்ட் போன்' வாங்கிக் கொடுத்திருக்கேன். தினமும், 'வீடியோ கால்' போடச் சொல்லி பார்ப்பேன்.

''உடம்புக்கு முடியலைன்னா, பக்கத்துல இருக்கற டாக்டர் வந்து பார்த்துட்டுப் போவார். போதாக்குறைக்கு, அம்மாவுக்கு நீ இருக்கே... இதுக்கு மேல என்னடா குறை.''

அம்மாவை தனியே விட்டுச் சென்றதை பற்றி பெரிதும் கவலைப்படாமல் பேசிய, அசோக் மீது, வசீகரனுக்கு ஒரு வெறுப்பு வந்தது. கோபத்தால் நெற்றியை அவ்வப்போது தேய்த்துக் கொண்டிருந்தான்.

இருபது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது, அவன் மனம். பள்ளிப் பருவம் அது. அசோக் சிறுவனாக இருக்கும்போதே, தந்தையை இழந்தவன். துவக்கப்பள்ளி ஆசிரியையான, அவன் தாய் கற்பகம், வீட்டுக்கு வருவோருக்கெல்லாம் உணவளித்து, உதவி பல செய்து அரவணைக்கும் அன்பான மகராசி.

ஊர் பிள்ளைகளுக்கெல்லாம், அசோக்கின் வீடு தான் சரணாலயம். கற்பகம் அம்மாவின் அன்புக்கு ஈடாக எதையும், யாரையும் ஒப்பிடவே முடியாது. வசீ ஒரு, 'நியூரோ' மருத்துவராக, ஒரு விதத்தில், கற்பகம் அம்மா தான் காரணம்.

பழைய நினைவுகளில் மூழ்கி, மவுனமாக இருந்த, வசீகரனை அடிக்கடி பார்த்து, ஏதேதோ கற்பனைகளில் உழன்று கொண்டிருந்தான், அசோக்.

''என்னடா வசீ... அமைதியாவே இருக்கே... என்னாச்சுன்னு தான் சொல்லேன். எனக்கு மனசு சரியில்லடா,'' என்றான்.

''மனசு சரியில்லைன்னு சொல்றது தவறு, அசோக். மனச, நாம சரியா வச்சிக்கலைங்கறது தான் உண்மை. வாழ்க்கைங்கறது, ஒவ்வொரு மணித் துளியையும் நாம எவ்வளவு சந்தோஷமா இருக்கறோம் என்பதைப் பொறுத்தது. அன்றாடம் சிரிப்பையும், சந்தோஷத்தையும் அதிகப்படுத்துனா, வாழ்க்கையின் அளவு நீடிக்கும்,'' என, நண்பனுக்கு நல்லவற்றை பகிர்ந்தபடி இருந்தான், வசீகரன்.

மழை சற்று அடங்கியிருந்தது. கார், ஊர் வாயிலை அடைந்ததும், அசோக் நுகர்ந்த ஈர மண் மணம், அவன் மனசை நிறைத்தது. அம்மாவின் நினைவு அதிகமானதும், ஆர்வமானான்.

வடக்குத் தெற்காக இருந்த அந்த வீடு, உயிரோட்டமில்லாமல் இருந்தது. 30க்கு 60ல், 15 சதுர அடியில், மூன்று ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடு. ஜன்னல்கள் திறந்து பல நாட்களாகிறது என்பதை, அதில் படிந்திருந்த ஒட்டடைகளும், துாசுகளும் காட்டிக் கொடுத்தன.

இன்னும் முழுசா விடியவில்லை. கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள், கற்பகம். முகம் தெளிவாய், உடல் தேறி, எடை கூடியிருந்தது. ஆனால், காதில், மூக்கில், கழுத்தில், கைகளில் நகை எதுவும் இல்லை.

'அம்மா உடம்புக்கு ஒன்றுமில்லை' என, உறுதி செய்து கொண்டான். எழுப்ப மனமின்றி, அருகே அமர்ந்தான், அசோக்.

துணைக்கு இருந்த பெண்ணிடம், ''ஏம்மா... அம்மாவ பொறுப்பா பார்த்துக்க சொன்னா, இதுதான் நீங்க பாத்துக்கற லட்சணமா,'' என, கோபப்பட்டான்.

''நான் என்னங்கய்யா தப்பு செய்துட்டேன். அம்மாவ சரியாத்தானே பாத்துக்கறேன்.''

''ஜன்னலை திறந்து வைக்கக் கூடாது... நல்ல காற்று அவங்க மேல கொஞ்சம் படட்டுமே.''

''காலையும், மாலையும் அடிக்கற வெயில், நேரா வீட்டுக்குள்ள விழுது. அம்மாவுக்கு ஒத்துக்காதுன்னு தான், ஜன்னல் கதைவை சாத்தி வச்சேன்.''

'உறவாகவே இருந்தாலும், கூலிக்கு வேலை செய்யும் பெண்ணிடம், அன்பையும், அக்கறையும் அவ்வளவாய் எதிர்பார்ப்பது முட்டாள் தனம்...' என, முணுமுணுத்தாள், அப்பெண்.

அவன் பார்வை, சட்டென சுவரில் நிலைத்தது. வெளிநாடு புறப்படு முன், அம்மாவோடு இணைந்து எடுத்த அந்த புகைப்படம் சுவரில் இல்லை.

''ஏம்மா... அந்த புகைப்படம் எங்கே... உடைஞ்சு போச்சா,'' என்றான், அப்பெண்ணிடம்.

''இல்லைங்கய்யா... அம்மா தான், பீரோவுல எடுத்து வச்சிட்டாங்க.''

''ஏன், என்னாச்சு?''

''அத பார்க்கும் போதெல்லாம், உங்க நினைவு வருதாம்.''

''ஆமா... அதென்ன சுவர் முழுதும், தாள்கள் ஒட்டிக் கிழிக்கப்பட்டு கறை கறையாய் இருக்கு?''

''அம்மா, வாரந்தோறும், முதியோர் இல்லங்களுக்கும், ஆதவற்றோர் இல்லங்களுக்கும் போய் வருவாங்க. எந்தெந்த நாட்கள்ல எங்க போகணும்ன்னு, எழுதி ஒட்டி வச்சிருவாங்க. அட்டவணையில இருக்கற இல்லத்துக்கு தவறாம போய் வருவாங்க.''

சற்று நேரம் காத்திருந்து, பொறுமையிழந்தான், அசோக். அம்மாவின் காதருகே, உதடுகளை லேசாக அசைத்து ஏதோ சொன்னான். திடீரென கண் விழித்த, கற்பகம், பதில் சொல்லாமல், மலங்க மலங்கப் பார்த்தாள்.

''அம்மா எப்படிம்மா இருக்கே?'' என்றான்.

''வசீ, வரலையா?'' என்றாள்.

''இதோ இருக்கேம்மா.''

''வசீ... அசோக்கிடம் எதையும் சொல்லலையா?''

''இல்லம்மா; வீட்டுக்கு வந்ததும் சொல்லலாம்ன்னு இருந்துட்டேன்.''

''அசோக், சீக்கிரம் குளிச்சிட்டு புறப்படு. வசீ... நீ வண்டிய வரச் சொல்லுப்பா... உடனே, புறப்படணும்.''

அவசரமாய் தயாரான அசோக், அம்மாவைத் தேடினான். கண்ணாடியில் முகம் பார்த்து, திருநீரு பூசிக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில், தயாராய் இருந்த வாகனத்தில், மூவரும் பயணித்தனர். அம்மாவின் கைகளைப் பிடித்தபடி அருகில் அமர்ந்தான், அசோக். மரங்களடர்ந்த மண் பாதையில் பயணித்த வாகனம், சற்று நேரத்தில், ஒரு இடத்தை அடைந்தது.

நுழைவு வாயிலில் கட்டியிருந்த தோரணங்கள், விழாவுக்கான அறிகுறியைக் காட்டியது. இரு புறமும் இருந்த மரங்கள், மெல்லிய ஓசையுடன் தென்றல் காற்றையும், பூக்களின் வாசத்தையும் அள்ளி வீசி, வரவேற்றன.

உள்ளே சென்றதும், வரவேற்பறையில் மேஜை மற்றும் நான்கு நாற்காலிகள். எதிரில் ஒரு பெயர் பலகையில், 'அசோக், நிறுவனர்' என்றிருந்ததை கண்டதும், வியர்த்துக் கொட்டியது அவனுக்கு.

சீருடையில் வந்த பெண்கள், வசீகரனிடம், 'ஐயா... எல்லாம் தயாரா இருக்காங்க...' என்றனர்.

வெளியில் இருந்த ஒரு மரத்தடி நிழலில், வாழ்க்கையின் சுக துக்கங்களையும், வெறுமையையும் அனுபவித்துப் பழகிப்போன, வயதான ஆண்களும் - பெண்களும் அமர்ந்திருந்தனர். கூட்டத்தோடு அமர்ந்து கொண்டாள், கற்பகம்.

வசீகரன், அசோக்கை அறிமுகம் செய்து, ''எல்லாருக்கும் வணக்கம். இவர், அசோக். ஆதரவற்றோர் இல்லத்தின் நிறுவனர். இவர் கொடுத்த நிதியால் தான், இந்த இல்லம் துவங்கப்பட்டுள்ளது. நீங்களெல்லாம், வாழ்க்கையின் முழு அர்த்தத்தை புரிந்து கொண்டவர்கள்.

''இறக்கப் போகிறோமே தவிர, மீண்டும் பிறக்கப் போவதில்லை. இனி, இருக்கப்போகும் காலங்களில் எல்லாவற்றையும் மறந்து, மகிழ்ச்சியா இருக்கணுங்கறது என்னோட ஆசை. அதுக்கு பக்க பலமா, நானும், அசோக்கும் இருப்போம்,'' என, பேசி அமர்ந்தான், வசீகரன்.

அனைவரும் அசோக்கை கைகூப்பி வணங்கி, பின், உணவருந்த சென்றனர்.

கண்கள் கலங்கியபடியே, கற்பகத்தின் அருகே சென்றான், அசோக்.

''அசோக்... உன் வருத்தம் எனக்கு புரியுதுப்பா... இருந்தாலும், எனக்கு வேற வழி தெரியல... தினமும், ஒவ்வொரு முதியோர் இல்லமும் சென்று, நீ அனுப்பும் பணத்தை செலவு செய்வேன். அடிக்கடி அங்க போக, உடம்பு ஒத்துழைக்கல. அதனால தான் இந்த முடிவுக்கு வந்தேன்.

''வசீகரன், எனக்கு உதவியா இருந்தான். நீ அனுப்பிய பணத்தை வச்சு தான் இந்த இடத்தை வாங்கினேன். வசீயும், கொஞ்சம் உதவினான். அதுல உருவானது தான், இந்த முதியோர் இல்லம். இனி, உனக்கு பொறுப்பு கொஞ்சம் அதிகமாயிடுச்சு. நான் இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்,'' என்றாள், கற்பகம்.

கண்களைத் துடைத்தபடி, ''அம்மா... உன்கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கணும்,'' என்றான், அசோக்.

''கேளு.''

''கடைசி வரைக்கும், நான் உங்க மகன்னு யாருகிட்டயும் சொல்லவேயில்லையே.''

''ஏற்கனவே, பிள்ளைங்களால ஒதுக்கப்பட்டு, வெறுத்துப் போய் வந்தவங்க தான், இங்க அதிகம் இருக்காங்க. இதுல, நீ தான் என் மகன்னு தெரிஞ்சா, அவங்கெல்லாம் உன்ன எந்த மாதிரி மனநிலையில பார்ப்பாங்கன்னு எனக்குத் தெரியும். அதனால, அது தெரிய வேணாம். நீ, நிர்வாகியாவே இரு. நான், ஆதரவற்ற முதியோராகவே இருக்கேன்,'' என்றாள் உறுதியாய்.

அதைக் கேட்ட, அசோக்கின் மனம் கனத்தது; வார்த்தை வரவில்லை. ஆனால், கற்பகத்தின் மனம் ஒரு பளுவை இறக்கி வைத்தது போல லேசானது.

பூபதி பெரியசாமி






      Dinamalar
      Follow us