
முருகு. செல்வகுமார், சென்னை: திராவிட கட்சிகளின், 50 ஆண்டுகள் சாதனை என்ன?
இலவசங்களையும், ஓட்டுக்கு, 20 ரூபாய், 'அட்வான்ஸ்' கொடுத்து ஜெயித்ததைத் தவிர, என்ன சாதனை உண்டு? மக்கள் திருந்தாத வரை இவை நடந்து கொண்டு தான் இருக்கும்!
நெல்லை குரலோன், தென்காசி:கொரோனாவுக்கு பின்...
நம் முன்னோர் கற்றுக் கொடுத்த சில நல்லொழுக்கங்கள் பின்பற்றப்படும் என, நம்புகிறேன். ஆனால், 'டாஸ்மாக்' வாடிக்கையாளர்கள், இரண்டு சதவீதம் குறைந்தால், அதுவே அதிகம் என்று நினைக்கிறேன்!
ப. கோபி பச்சமுத்து, கிருஷ்ணகிரி: குடும்பத்தில், அதிகம் விட்டுக் கொடுக்க வேண்டியது, கணவனா, மனைவியா?
இருவருமே சம அளவில் விட்டுக் கொடுக்க வேண்டும். ஆனால், 99 சதவீத ஆண்கள், தம் மனைவி தான் அதிகம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற, மனோநிலையில் அல்லவா உள்ளனர்!
டி. பசுபதி, கோவை: நேரம் போகவில்லை; நேரம் போதவில்லை... என்ன வேறுபாடு?
முதலாமவர் சோம்பேறி; இரண்டாமவர், திட்டமிடல் தெரியாதவர்! ஒரே நேரத்தில், மூன்று, நான்கு வேலைகளை செய்பவரை கண்டிருக்கிறேன்!
ஆர். பாஸ்கர், மதுரை: அந்துமணி, எனக்கு பிடித்த நடிகை நயன்தாரா... தங்களை கவர்ந்த நாயகி யார்?
நடிகைகளின் முகங்கள் மற்றும் அவற்றில் உள்ள மச்சங்கள் மட்டும் தான் தெரியுமே தவிர, அவர்களின் பெயர் தெரியாது. இதில் பலர், மச்சம் போல், மை பொட்டு வைத்துக் கொள்வதாகக் கேள்வி!
* ஜி. விஜயகுமார், சென்னை: சிறையிலிருந்து சசிகலா, வெளியே வந்தால், தமிழக அரசியல் எப்படி இருக்கும்?
ஏற்கனவே, அ.ம.மு.க., ஒரு, 'லெட்டர் பேடு' கட்சியாகத் தான் இருக்கிறது. இதில், சசிகலா வெளியே வந்தால், 'லெட்டர் பேடு' அச்சடிக்கும் செலவும் மிச்சமாகி விடும். தமிழர்கள் இளிச்சவாயர்கள் அல்ல!
எஸ். சுரேஷ்பாபு, பொன்னேரி: நீங்கள் தாடி வளர்ப்பது, 'ஷேவ்' பண்ண சோம்பேறித் தனமா அல்லது பிறருக்கு அறிவாளியாகக் காட்சி படுத்தவா?
இத்தனை ஆண்டுகளாக என் முகத்தை, 'வாரமலர்' இதழில் பார்த்துத் தானே வருகிறீர்கள்... எந்த வாரமாவது தாடியுடன் வந்திருக்கிறேனா?
*கே. திருப்பதி, விக்கிரவாண்டி: யாராவது ஒருவரை, நம் நாட்டிலிருந்து நாடு கடத்தும் உரிமை உங்களுக்கு கிடைத்தது என்றால், யாரை நாடு கடத்துவீர்?
எதற்கு? அங்கே போய் ஜாலியாக வாழ்வதற்கா... 9,000 கோடி ஏமாற்றியவர் போல வாழவா? ஒருவர் மட்டுமல்ல, இங்குள்ள ஊழல் அரசியல்வாதிகள் அனைவரையும், நம்மூரிலேயே, கம்பி எண்ண வைத்து விடுவேன்!