
ப
பெயர், ஊர் வெளியிட வேண்டாம் எனக் கேட்டு எழுதியுள்ள வாசகியின் கடிதம்:
வணக்கம். நான், 18 வயது மாணவி, பள்ளியில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று, பட்டயக் கணக்காளர் படிப்புக்காக, தினமும் திருப்பூரிலிருந்து, கோவை சென்று வருகிறேன். என் வகுப்பு நேரம் மதியம், 2:30 முதல் இரவு 7:30 வரை.
ஒரு நாள் இரவு வகுப்பு முடிந்து பேருந்தில் வீடு திரும்பிய போது நடந்த நிகழ்வு இது... மூவர் இருக்கையில் நானும், என் இரு தோழியரும் அமர்ந்திருந்தோம். அந்த இரவில் நல்ல போதையில், ஒரு, 25 வயது மதிக்கத்தக்க நபர் பேருந்தில் ஏறி, என் பின்புறம் அமர்ந்தார். சரியான சில்லரை இல்லாத எங்களுக்கு பயணச்சீட்டு தர மறுத்து, சண்டையிட்ட நடத்துனர், அந்த போதை ஆசாமிக்கு, தயக்கமின்றி பயணச்சீட்டும், சில்லரையும் கொடுத்தார்.
அந்த நபர், இரண்டு முறை என் காலில் உரசினார். போதையில் தெரியாமல் நடந்திருக்கும் என, அமைதியாக விட்டு விட்டேன். என் தோழியின் காலை அவன், உரச, அவள் ஓங்கி ஒரு மிதி மிதித்தாள்.
பின் அந்த நபர், இருக்கைகளுக்கு இடையே உள்ள சிறு சந்து வழியாக, கையை நுழைத்து, தகாத இடத்தில் என்னை சீண்டினார். பொங்கி எழுந்த நான், ஓடும் பேருந்தில் அந்த போதை ஆசாமியை, கண்டபடி திட்டினேன். அந்த நடத்துனரோ, போதை நபரின் பக்கம் அமர்ந்திருந்த என் தந்தை வயது மதிக்கத்தக்க நபரோ மற்றும் பேருந்தில் பயணித்த மற்ற எவருமே, 'ஏன்?' என்று, ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை; அந்த பேருந்தில் எதுவுமே நடக்காதது போன்று இருந்தனர்.
பெண்கள் பாதுகாப்பு பற்றி, ஏன் ஆர்வலர்கள் இவ்வளவு கத்திக் கொண்டிருக்கின்றனர் என்று அந்த கணம் புரிந்தது.
இந்த மாதிரி சம்பவம், எனக்கு ஐந்து முறை நடந்து விட்டது. தற்போது, கோவையிலேயே வீடு எடுத்து தங்கி, படித்து வருகிறேன்; மீண்டும் இப்படி ஒரு அவலத்தில் நான் சிக்கி விடக் கூடாது என்று.
இது யார் தவறு... அந்த இரவில் பயணம் செய்த என் தவறா?
லட்சியத்தை அடைய நேரம் காலம் பாராது உழைக்கும் பெண்களுக்கு, இந்த சமூகம் தரும் மரியாதை, விருது, இந்த அவமானமும், மனவலியும் தானா? என் கசப்பான இந்த அனுபவத்திற்கு, என்ன பதில் தரப் போகிறது இந்த சமூகம்? 18 வயது பூர்த்தி ஆவதற்குள், இப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட யார் காரணம்?
இந்த சமுதாயத்தில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் அவலத்திற்கு யார் காரணம்? இப்படிப்பட்ட சமுதாயத்தில் பிறந்த எல்லா பெண்களும், பெண்ணியம் பேசியே ஆக வேண்டிய சூழல் வர யார் காரணம்?
சமுதாயத்தை நினைத்து வெட்கப்படும் ஒரு தினமலர் வாசகி... என் கேள்விகளை உரக்க கேளுங்கள் அந்துமணியாரே.
வாசக, வாசகியரே, இந்த இளம் பெண்ணுக்கு தகுந்த பதில் கூறுங்களேன்!
எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் என, ஒவ்வொரு வருக்கும், ஒவ்வொரு, 'ஸ்டைல்' இருக்கும்... வாரம் ஒரு தகவலை எழுதிக் குவித்த, தென்கச்சி கோ.சுவாமிநாதன், தன்னுடைய தகவலை, ஒரு நகைச்சுவையுடன் முடிப்பார்.
உதாரணத்திற்கு சில இதோ...
'நான் இப்ப முடி ஆராய்ச்சியிலே இறங்கியிருக்கேன்!'
'இதுவரைக்கும் என்ன கண்டுபிடிச்சீங்க?'
'நிறைய கண்டுபிடிக்கணும். அதுக்கு முன்னாடி, முக்கியமா ஒண்ணை கண்டுபிடிக்க வேண்டியிருக்கு?'
'எதை?'
'மேஜை மேல எடுத்து வச்ச முடியைக் காணலே... அதை கண்டுபிடிக்க தான், காலையிலிருந்து முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்!'
'உடம்பு பெருக்கிறது எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?'
'உண்மை தான்!'
'நேத்தி கூட பாருங்க... ஒருத்தர் வாழைப் பழத்தோல் வழுக்கி, கீழே விழுந்துட்டார். உடனே, என்னைத் தவிர எல்லாரும் சிரிச்சுட்டாங்க!'
'நீங்க ஏன் சிரிக்கலே?'
'விழுந்ததே நான் தானே!'
'பயணம் என்றால், கவனமா இருக்கணும்; நாங்க கொஞ்சம் தப்பு பண்ணிட்டோம்...'
'என்ன செஞ்சீங்க?'
'நானும், என் நண்பனும் வீட்டை விட்டு புறப்படும் போதே, கொஞ்சம்
மது அருந்தினோம்.
போதையிலேயே, ரயில் நிலையம் வந்தது; ரயிலும் வந்தது. அவன் ஏறிப் போயிட்டான். அதான், எனக்கு வருத்தமா இருக்கு!'
'ஏன்?'
'அவன், என்னை வழியனுப்ப வந்தவன்!'
'நான் எப்பவும் எலும்பு உடையற அளவுக்கு நடந்துக்க மாட்டேன் சார்!'
'அப்படின்னா...'
'ஆமாங்க... நேத்திக்கு கூட ஒரே நேரத்துல, பத்து பேர் என்னை
அடிக்க வந்தாங்க... அத்தனை பேரையும் நான் ஒருத்தனே சமாளிச்சேன்!'
'எப்படி?'
'அங்கே நிப்பேனா... ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன்!'
'தம்பி... நான், உனக்கு ஒரு
சின்ன கணக்குத் தர்றேன்; விடை சொல்றியா?'
'ஓ... சொல்றேனே...'
'உனக்கு நான் இரண்டு பென்சில் தர்றேன்; உங்க அப்பா இரண்டு பென்சில் தர்றார். அப்போ, உங்கிட்டே எத்தனை பென்சில் இருக்கும்?'
'ஐந்து பென்சில்!'
'அது எப்படி?'
'என்கிட்ட ஏற்கனவே ஒரு பென்சில் இருக்கே!'
'இந்த உலகத்துல என்னை மாதிரியே ஏழு பேர் இருக்காங்கன்னு சொல்றாங்களே... அது உண்மையா இருக்குமா?'
'ஏன் அப்படி கேட்குறீங்க?'
'மற்ற ஆறு பேராவது, நிம்மதியா இருக்காங்களான்னு தெரிஞ்சுக்க தான்!'
- பெங்களூருவிலிருந்து, ராஜி ராதா
எழுதியதில், படித்தது!