sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1)

/

சித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1)

சித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1)

சித்ராலயா கோபுவின்.. மலரும் நினைவுகள்! (1)


PUBLISHED ON : மே 10, 2020

Google News

PUBLISHED ON : மே 10, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு இளம் பெண், படகின் முனையில் அமர்ந்து நீரோட்டத்தை ரசித்தபடி பயணிப்பாள்; அந்த படகை, வலிமையான தேகம் கொண்ட வாலிபன் துடுப்பு போட்டு செலுத்தும் காட்சியுடனான சின்னம், திரையில் தோன்றிய அடுத்த நிமிடம், ரசிகர்கள், நிமிர்ந்து உட்காருவர். கொடுத்த காசுக்கு ஏமாற்றாத ஒரு உன்னத படைப்பை பார்க்கப் போகும் உற்சாகம், அவர்களுக்குள் பொங்கி பிரவகிக்கும்.

தமிழ் திரையுலகில், புதிய அலைகளை தோற்றுவித்த, சித்ராலயா நிறுவனத்தின் சின்னம் தான் அது. 1960 - 70களில், தமிழகத்தை கலக்கிய திரைப்பட நிறுவனம் அது.

தேனிலவு, காதலிக்க நேரமில்லை, நெஞ்சிருக்கும் வரை, உத்தரவின்றி

உள்ளே வா மற்றும் நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற, என்றைக்கும் மறக்க முடியாத பல படங்கள், சித்ராலயா நிறுவனம் தயாரித்தவை தான்.

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என்று, எல்லா பகுதிகளிலும் கொடி கட்டி பறந்தது, சித்ராலயா. இந்த பேனரில் நடித்தவர்கள், ஒரே படத்தில், புகழின் உச்சிக்கு சென்றனர். புகழின் உச்சியில் இருந்த, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி நடிகர்கள், சித்தராலயா பேனரில் நடிக்க போட்டி போட்டனர்.

சித்ராலயா படங்கள் என்றால், ஒன்று, சோகத்தை பிழிந்து கொடுக்கும் குடும்ப கதையாக இருக்கும்; இல்லையென்றால், முக்கோண காதல் கதையாக இருக்கும். இதில், எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், கதைக்குள் விலா நோக வைக்கும் சிரிப்பு நிச்சயம் இருக்கும்.

அந்த நகைச்சுவைக்கு சொந்தக்காரர் தான், சித்ராலயா கோபு.

இயக்குனர், ஸ்ரீதர்; கேமராமேன், வின்சென்ட்; ஸ்டில்ஸ், அருணாசலம்; உதவியாளராக இருந்து இயக்குனராக உருவெடுத்த, சி.வி.ராஜேந்திரன் மற்றும் கோபு ஆகியோர் சேர்ந்து தான், சித்ராலயா நிறுவனத்தை துவக்கினர். ஆனால், இப்போது, கோபு மட்டுமே எஞ்சியிருக்கிறார்.

அன்றைய நகைச்சுவை உணர்வு சிறிதும் குறையாதபடி, தன், 89 வயதிலும் உற்சாகமாக வலம் வருகிறார். 60 படங்களுக்கு, கதை, வசனம் எழுதி உள்ளார், கோபு; 27 படங்களை இயக்கி உள்ளார்.

சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினி, கமல், விக்ரம், பாண்டியராஜன் வரை பல நடிகர்களுடனும், சரோஜா தேவி, பத்மினி, காஞ்சனா, நிர்மலா, ஜெயலலிதா, தேவிகா மற்றும் ரம்யா கிருஷ்ணன் என, பல நடிகைகளுடனும் பணிபுரிந்துள்ளார்.

முப்பது ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி, 'டிவி'யில், கிரிக்கெட் பார்த்து ரசித்து, பேரன் - பேத்தி என, சென்னை, திருவான்மியூரில், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

சென்னையை சேர்ந்த இசைக்கவி ரமணன், தான் நடத்தும், 'காலங்களில் அவன் வசந்தம்' என்ற கண்ணதாசன் புகழ்பாடும் நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக, கோபுவை, இரண்டு நாட்கள் மேடையேற்றி பெருமை சேர்த்தார்.

அந்த இரண்டு நாட்களிலும், சித்ராலயா நிறுவனத்தின் சாதனைகளையும், அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், கல்யாண பரிசு படம் எடுத்த காலத்தின், அதே நகைச்சுவை உணர்வுடன், சிரிக்க சிரிக்க, பகிர்ந்து கொண்டார். அவரது வீட்டிற்கு போய் சில சந்தேகங்களை கேட்ட போது, இன்முகத்துடன் தீர்த்து வைத்தார்.

அவரை பேட்டி கண்டதன் மூலம் கிடைத்த அற்புதமான நகைச்சுவையான அனுபவத்தை, நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் தொடர் இது.

இவர் பணியாற்றிய அந்தக் காலத்து படங்களின் கேமராவுக்கு, முன் - பின் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை, என்.எஸ்.கிருஷ்ணன் மனைவி, டி.ஏ.மதுரம் துவங்கி, பாலையா, தங்கவேலு, சாரங்கபாணி, டி.ஆர். ராமசந்திரன், சந்திரபாபு, நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன்...

நடிகைகளான, எம்.சரோஜா, மனோரமா, சச்சு, ரமாப்ரபா, உட்பட அனைவருக்கும் நகைச்சுவை வசனங்கள் எழுதிய அனுபவங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். சிரித்து மகிழ தயாராவீர்...

செங்கல்பட்டில், பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே, நானும், ஸ்ரீதரும் நண்பர்கள் தான். ஒன்பாதாவது படிக்கும் போது, ஸ்ரீதர், கதை, வசனம் எழுதி, நடிப்பார். நான், நகைச்சுவை வசனம் எழுதி நடிப்பேன். இந்த பந்த பாசம் தான், 70 ஆண்டு கால நட்பாக நீடித்தது.

திருமணமாகி, சென்னையில், ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனத்தில் வேலையில் இருந்தேன். என்னை தேடி வந்த, இயக்குனர் ஸ்ரீதர், 'வேலையை விட்டு விட்டு வா... நான் எடுக்கிற படத்திற்கு, நீ நகைச்சுவை வசனம் எழுதணும்...' என்றார்.

அந்த படம் தான், பட்டி தொட்டியெல்லாம் ஓடி, வெள்ளி விழா கண்ட, கல்யாண பரிசு படம். திரைப்பட வரலாற்றிலேயே, ஒரு படத்தின் நகைச்சுவை வசனங்கள் மட்டும், 'ரெக்கார்டு' செய்து, விற்பனை செய்யப்பட்டதும், அதுதான் முதல் முறை.

அந்த படத்தில், தங்கவேலு, 'மன்னார் அண்ட் கம்பெனி' மானேஜர், எழுத்தாளர், பைரவன் என்று, பல வித, 'கெட்- அப்'களில், 'டூப்' மாஸ்டராக வருவார். அந்த பாத்திரம் வேறு யாருமல்ல, நிஜத்தில், நான் தான் என்றார், கோபு.

அந்த பாத்திரம், எப்படி உருவானது தெரியுமா?

'ஜடகோபால்!'



'கடந்த, 1959ல் வெளியாகி, வெள்ளி விழா கண்டு, எங்கள் அனைவரையும் புகழின் உச்சிக்கு அழைத்து சென்ற    படம், கல்யாண பரிசு. அந்த படம் வந்தபோது, என் இயற்பெயரான, சடகோபனாக தான் இருந்தேன். படத்தின் கதாநாயகியான, கன்னடத்துக்காரரான, சரோஜாதேவி, என் பெயரை உச்சரிக்க சிரமப்பட்டு, 'ஜடகோபால்' என்றே அழைத்தார்.

'அந்த படத்தில் நடித்தபோது பார்த்தது தான். அதன்பின், 50 ஆண்டுகள் கழித்து, என், 80ம் ஆண்டு, சதாபிஷேக விழாவில் தான் அவரை பார்த்தேன்.

அப்போதும், எதையும் மறக்காமல், 'எப்படி இருக்கீங்க, ஜடகோபால்' என்று அழைத்தவர், தானும் சிரித்து, என்னையும் சிரிக்க வைத்தார்...' என்கிறார், கோபு.

தொடரும்

எல். முருகராஜ்






      Dinamalar
      Follow us