
பெண்ணால், எதுவும் முடியும்!
எங்கள் எதிர் வீட்டில், ஒரு இளம் தம்பதியர், மூன்று ஆண்டுக்கு முன், வாடகைக்கு குடி வந்தனர். கணவருக்கு, தனியார் நிறுவனம் ஒன்றில், குறைந்த ஊதியத்தில் பணி. அவரின் ஊதியம், வாடகைக்கும், வாழ்க்கை நடத்தவுமே சரியாகி விடும். சேமிப்பு என, சிறு தொகையை கூட ஒதுக்க இயலாத சூழல்.
கணவர், பணிக்கு புறப்பட்டு போன பின், அவர் மனைவி, தையல் வகுப்பிற்கு செல்வார். ஆறே மாதத்தில் தொழில் கற்று, தன் தொழில் நேர்த்தியால், அடுத்த ஆறே மாதத்தில், சுற்று வட்டாரத்தில் பிரபலமானார்.
விருப்பமுள்ள பெண்களுக்கு, தையல் கற்றுத் தந்து, தன்னுடனேயே வைத்துக் கொண்டு, கடையை விரிவுபடுத்தினார்.
அடுத்து, அழகு கலை பயிற்சிக்கு சென்றவர், பிற பெண்களுக்கு அதை கற்றுத் தர துவங்கினார். பயிற்சி தருவதுடன், தனியாக தையல் கடையும், அழகு நிலையமும் துவங்க விரும்புவோருக்கு, உடன் இருந்து வழிகாட்டியும், வங்கி கடன் பெறவும், உறுதுணையாக இருக்கிறார்.
தன் கணவரை விட, பல மடங்கு சம்பாதிக்கும் நிலையை அடைந்து, சொந்த வீடு கட்டி குடியேறி விட்டார். ஒரு தையல் மிஷினோடு வாழ்க்கையை துவக்கியவர், இன்று, பல தையல் மிஷின்களோடு, பல பெண்களுக்கு, வாழ்வு தரும் முதலாளி ஆகி விட்டார்.
கற்ற கைத் தொழிலால், தான் மட்டும் முன்னேறாமல், தன்னை போன்ற சக பெண்களும், வறுமை நீங்கி, வாழ்வில் உயர்வடைய செயல்படும் அவரை, எல்லாரும் பாராட்டுகின்றனர்.
கே. லட்சுமி, விழுப்புரம்.
வக்கிரங்கள் வேண்டாமே!
சமீபத்தில், சென்னையிலிருந்து - திருநெல்வேலிக்கு ரயிலில் பயணம் செய்தேன். இரவில், கழிப்பறை செல்ல எழுந்து வந்தபோது, 'மிடில் பர்த்'தில் படுத்திருந்த ஒரு இளைஞன், தன் மொபைலில், 'வீடியோ' பார்த்துக் கொண்டிருந்தான்.
அது என்ன என்று கவனிக்கும் ஆர்வம் இல்லாத நிலையிலும், தற்செயலாக அந்த, 'வீடியோ'வில் உள்ள காட்சிகள் என் பார்வையில் பட, அதிர்ந்து போனேன்.
மிகவும் ஆபாசமான, அருவருப்பான காட்சிகள் நிறைந்த ஒரு பலான, 'வீடியோ!' அதை பார்த்ததும், எனக்கு கோபம் வந்தது.
'இப்படி ஒரு படத்தை பார்க்கிறவன், அதே, 'கம்பார்ட்மென்டில்' தன்னோடு பயணிக்கும் பெண்களை எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பான்...' என, என் மனது எண்ணியது.
'டேய்... என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய்...' என்று கேட்டு, அவனை கடிந்து கொண்டேன்.
'சாரி மேடம்... சாரி மேடம்...' என்று கெஞ்சினான், அவன்.
அவனை கடுமையாக எச்சரித்து, அங்கிருந்து நகர்ந்தேன்.
இதுபோன்ற ஜென்மங்கள், தானாய் திருந்தினால் தான் உண்டு.
ஜொள்ளர்களே... இதுபோன்ற வக்கிரம் தேவையா!
இ. மாதவி, கோவில்பட்டி.
தேவையான அறிவிப்புகள்!
சமீபத்தில், எங்கள் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கு சென்றிருந்தேன். அங்கு, 'எச்சில் தொட்டு, ரூபாய் நோட்டை எண்ணாதீர்; எச்சில் தடவி, தபால் தலையை ஒட்டாதீர்...' என்று, அறிவிப்புகள் ஒட்டப்பட்டிருப்பதை கவனித்தேன்.
இதுகுறித்து, அந்த தபால் நிலையத்தில் பணிபுரியும் தோழியிடம் விசாரித்தேன்.
'பெரும்பாலானோர், இன்னமும் எச்சில் தொட்டு பணத்தை எண்ணும் பழக்கம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். மேலும், தபால் தலை ஒட்டுவதற்கு, பசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், அதை உபயோகிக்காமல், நாக்கில் உள்ள எச்சிலை தடவியே ஒட்டுகின்றனர்.
'பெரும்பாலான நோய்கள், நம் எச்சில் மூலமாகவே பரவுகிறது எனும்போது, நாம் அஜாக்கிரதையாக நடந்து கொள்வது மாபெரும் தவறு. எனவே தான், எங்கள் தபால் நிலைய அதிகாரி, இப்படி ஒரு அறிவிப்பை ஒட்டச் செய்ததோடு, அது நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுவதை கடுமையாக கண்காணிக்க, எங்களுக்கு உத்தரவும் இட்டிருக்கிறார்.
'அதோடு நில்லாமல், பணம் எண்ணுவதற்கு வசதியாக, நீரில் நனைத்த பஞ்சையும், தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்படி பசையையும் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்...' என்றார், தோழி.
ஒவ்வொரு அரசு ஊழியரும், பொதுமக்களின் நலனில் அக்கறையோடு பணியாற்றினால், ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவக்கூடிய தொற்று நோய்களை, நாட்டை விட்டே விரட்டி விடலாம் என்பது உறுதி.
எஸ். அலமேலு, கள்ளக்குறிச்சி.