
தெலுங்கில் கொடி ஏற்றும், தனுஷ்!
மிகச்சிறிய வயதில், துள்ளுவதோ இளமை படத்தில், 'ஹீரோ'வாக அறிமுகமாகி, குறுகிய காலத்தில், தேசிய விருதும் பெற்றவர், நடிகர் தனுஷ். இந்நிலையில், ஹிந்தியில், ராஞ்ஜனா மற்றும் ஷமிதாப் ஆகிய படங்களில் நடித்தார். அடுத்து, அட்ராங்கி ரே -என்ற ஹிந்தி படத்தில் நடிக்கப் போகிறார். அந்த வகையில், 'பாலிவுட்'டில், தனுஷுக்கென்று ஒரு ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது.
அடுத்தபடியாக, தெலுங்கிலும் காலுான்ற நேரம் பார்த்து வந்த, தனுஷ், தமிழில் தான் நடித்த, மாரி படத்தை, 'ரீ - மேக்' செய்து, நடிக்க போகிறார். ஆக, கூடிய சீக்கிரமே தமிழ், ஹிந்தியை தொடர்ந்து, தெலுங்கு சினிமாவிலும், தனுஷின் கொடி, பறக்கப் போகிறது.
—சினிமா பொன்னையா
ரசிகர்களை சூடேற்றும், மாளவிகா!
தமிழ் சினிமாவுக்கு, 'லேட்டஸ்ட்' இறக்குமதி, விஜயின், மாஸ்டர் படத்தில் நடித்துள்ள, மாளவிகா மோகனன் தான். படம் திரைக்கு வருவதற்கு முன்பே, விஜய் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், தன் இடையழகு தெரியும் புகைப்படங்களை வெளியிட்டு, ஆர்ப்பாட்டத்தை துவங்கி விட்டார், அம்மணி. 'சோஷியல் மீடியா'வில், நடிகையின் புகைப்படங்களுக்கு, தோரணங்கள் கட்டி கொண்டாடி வருகின்றனர், இளவட்டங்கள். ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை!
— எலீசா
மகிமாவுக்கு, வந்த பிரச்னை!
சாட்டை மற்றும் குற்றம் - 23 என, பல படங்களில் நடித்துள்ள, மலையாள நடிகை, மகிமா நம்பியார், சமீப காலமாக, 'இன்சோம்னியா' -என்ற, துாக்கமின்மை நோயால் அவதிப்பட்டு வருகிறார். அதையடுத்து, இந்த நோயில் இருந்து விடுபட, ஆறு விதமான யோகாசன பயிற்சியை, யோகா மாஸ்டர் அவருக்கு சொல்லிக் கொடுத்தார். அதை தினமும் செய்து வரும், மகிமா நம்பியார், தான் அந்த யோகாசனங்களை செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். எத்தை சொன்னானோ பரிகாரி; அதைக் கேட்பான் நோயாளி!
— எலீசா
அண்ணியான, மீனா!
ரஜினியுடன், எஜமான், முத்து மற்றும் வீரா படங்களில் நடித்தபோது, அவரின் ரசிகர்கள், மீனாவை, அண்ணி என்று, அன்போடு அழைத்தனர். இப்போது, மீண்டும், அண்ணாத்த படத்தில், ரஜினியுடன் நடிப்பதை அடுத்தும், மீனாவை எங்கு பார்த்தாலும், அண்ணி என்றே அழைக்கின்றனர், ரஜினி ரசிகர்கள்.
இதை, பெருமையாக நினைக்கும் மீனா, தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, இந்த தகவலை அடுத்தடுத்து, ரஜினியிடம் கதை சொல்லி, 'கால்ஷீட்'டுக்காக காத்துக் கொண்டிருக்கும் இயக்குனர்களுக்கு தெரியப்படுத்தி, உரிமையோடு பட வாய்ப்பு கேட்கத் துவங்கி இருக்கிறார். எந்த மடத்துக்கு எந்த ஆண்டி சதம்!
— எலீசா
கிளுகிளுப்பு நடிகராகும், விஜய் ஆண்டனி!
இதுவரை, விஜய் ஆண்டனிக்கான கதைகளை, மனைவியும், அவரது தங்கையும் தான் கேட்டு, ஓ.கே., செய்து வந்தனர். அப்படி கதை கேட்கும்போது, கதாநாயகியருடன் நெருக்கமான காட்சிகள் இருந்தால், அவற்றுக்கு கத்தரி போட்டு வந்தனர். அதனால், இப்போது, தனக்கான கதைகளை, தானே கேட்டு முடிவெடுக்கிறார், விஜய் ஆண்டனி. அதோடு, தன் மனைவி தவிர்த்து வந்த, 'ரொமான்டிக்' காட்சிகளை, தற்போது, கூடுதலாக கதையில் கொண்டு வந்து, கிளுகிளுப்பான நடிகராக மாறிக் கொண்டிருக்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
தெலுங்கில், 'மெகா ஸ்டார்' படத்தில் இருந்து மூனுஷா விலகியதும், அந்த வாய்ப்பை கைப்பற்ற முண்டியடித்தார், அகர்வால் நடிகை. அதே சமயம், தமிழில் நம்பர் 1 நடிகையும், 'மெகா ஸ்டாருடன்' தனக்கு இருக்கிற செல்வாக்கை பயன்படுத்தி, அந்த வேடத்தை கைப்பற்ற, கோதாவில் குதித்தார். இதனால், அதிர்ந்துபோன அகர்வால் நடிகை, கடைசி முயற்சியாக, அந்த படத்தை தயாரிக்கும், 'மெகா ஸ்டாரின்' வாரிசு, தனக்கு உயிர் நண்பர் என்பதால், அவரது சிபாரிசில், வாய்ப்பை கைப்பற்றி விட்டார். ஆக, அகர்வாலுடன் மோதி தோற்ற, நம்பர் 1 நடிகை, 'நேரம் வரும்போது, அவருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்...' என்று கங்கணம் கட்டி திரிகிறார்.
'காஜலும், தாராவும் தோழிகளாக இருந்தாலும், அவங்க செய்ற அலம்பல் தாங்கல... காஜல் எந்த கல்லுாரியில் சேர விரும்புகிறாளோ, அதே கல்லுாரியில் தாராவும் சேர, 'அப்ளிகேஷன்' போடுகிறாள். பள்ளியில் படிக்கும்போது தான் போட்டி போட்டனர் என்றால், கல்லுாரியில் சேருவதில் கூடவா, எலியும் - பூனையுமா நிற்கணும். கடைசியில், கல்லுாரி நிர்வாகி மகனின் சிபாரிசு பெற்று, அக்கல்லுாரியில் சேர்ந்து விட்டாள், காஜல். தாராவுக்கு இடம் கிடைக்கல... இப்படியே போட்டி போட்டுக் கொண்டிருந்தா, படிப்புல கோட்டை விட்டுடுவாங்களோன்னு பயமா இருக்கு...' என்று கவலைப்பட்டாள், அம்மா.
சினி துளிகள்!
சைர நரசிம்ம ரெட்டி படத்திற்கு பிறகு, தெலுங்கு சினிமாவில், கூடுதல் கவனம் செலுத்துகிறார், நயன்தாரா.
அவ்ளோதான்!

