PUBLISHED ON : மே 24, 2020

நண்பன் சோமு அலுவலகத்தில், வேலைக்கு மனு செய்திருந்தான், ஸ்ரீராம். அந்த காலியிடம், தொழிற்சாலையின் உரிமையாளரால், ஒரு பெண்ணுக்கு தரப்பட்டு விட்டதாய் தெரிவித்தபோது, சொல்லிமாளாத எரிச்சலுற்றான்.
வீட்டில் சொந்தமாய் தொலைபேசி வைத்துக்கொள்ளும் அளவுக்கு, ஸ்ரீராமின் அப்பாவுக்கு, பண வசதி இல்லை. இருப்பினும், தொலைபேசி இலாகாவின் இளநிலை பொறியாளராக இருந்து, ஓய்வு பெற்றவர் என்பதால், அவருக்கு, இலவச தொலைபேசி இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
அப்போது, ஸ்ரீராமின் நண்பன் சோமு அழைத்தான்...
'ஏய், ஸ்ரீராம்... என்னடா, மவுனமாயிட்டே... ஒரு, 'ஹெட் க்ளார்க்' விருப்ப ஓய்வில் போறதா இருக்காரு... அதனால, கூடிய சீக்கிரமே, எங்க கம்பெனியில இன்னொரு காலியிடம் வரும்டா... அவர், விருப்ப ஓய்வுக்கு, விண்ணப்பம் அளிக்கும் முன், நான் உனக்கு தகவல் சொல்றேன்... அதுக்கு, நீ விண்ணப்பி... மனசு தளறாதேடா,'' என்றான், சோமு.
''தேங்க்ஸ்டா... வேற கம்பெனியில யாரையாச்சும் தெரிந்தாலும் சொல்லுடா. அடிக்கடி நான் உன்னைத் தொந்தரவு பண்றேண்டா. ரொம்ப மனசு ஒடிஞ்சு போயிருக்கேண்டா. வீட்டில் சும்மா உக்காந்துக்கிட்டு தண்டச் சோறு தின்னுக்கிட்டிருக்கேன்...
''தங்கை, பிளஸ் 2 படிச்சிட்டிருக்கான்னு உனக்குத் தெரியுமில்ல... எனக்கு இன்ஜினியர் ஆகணும்ன்னு கனவு... ஆனா, எங்கப்பா, 'ரிடையர்' ஆயிட்டதால, நான், பிளஸ் 2வோட படிப்பை நிறுத்திட்டேன். அவருக்கு நான் சுமையாய் இருக்கக் கூடாதில்ல?''
''நீ ஏண்டா, 'கம்ப்யூட்டர் லைன்'ல போகக் கூடாது?''
''இல்லடா, இன்ஜினியர் ஆகணும்கிறது தான் என்னோட குறிக்கோள். ஏதாச்சும் சின்ன வேலை கிடைச்சாலும் சேரத் தயாராய் இருக்கேன். அதுக்கு பிறகு, 'ஈவ்னிங் காலேஜ்' எதிலயாச்சும் சேர்ந்து படிப்பைத் தொடருவேன்.''
''நீதான், பிளஸ் 2ல நல்ல மார்க் எடுத்திருக்கியே.''
''அது சரி, அந்த காலியிடத்துக்கு ஒரு பொண்ணு, 'செலக்ட்' ஆகியிருக்குதுன்னு சொன்னியே, அவ, யாருடா... சும்மா ஒரு, 'க்யூரியாசிட்டி'யில கேக்கறேன். ஏன்னா, இப்பல்லாம் விளம்பரம் பண்ணுறதுக்கு முன்பே ஆளை, 'செலக்ட்' பண்ணிடறாங்களே, அதான் கேக்கறேன்.''
''நீ சொல்றது சரி தான். ஆனா, அவ எங்க சேர்மனுக்கு சொந்தமா, இல்ல, அவருக்கு வேண்டியவங்க யாராச்சும், 'ரெகமென்ட்' பண்ணின பொண்ணாங்கிறது எல்லாம் எனக்குத் தெரியாது. அவ, எம்.எஸ்சி.,யில, 'பர்ஸ்ட் கிளாஸ்'டா.''
''இவ்வளவு பெரிய, 'டிகிரி'யை வச்சுக்கிட்டு, அவ ஏண்டா அந்த வேலைக்கு விண்ணப்பிச்சா?''
''யாருக்குத் தெரியும். ஒருவேளை பணத் தேவையோ என்னமோ... ரொம்ப அழகாய் இருக்காடா. அவ, 'எஸ்டாப்ளிஷ்மென்ட் செக்ஷன்'ல சேர்ந்ததில் இருந்து எல்லாப் பசங்களும் அந்த, 'செக்ஷனுக்கு' அடிக்கடி போறாங்கன்னா பார்த்துக்கயேன்.''
''ம்ம்... இப்பல்லாம் பொண்ணுங்களுக்கு தாண்டா வாய்ப்பு அடிக்குது. பெண்ணுங்கன்றதோட அவங்க அழகா வேற இருந்துட்டாங்கன்னா, கேக்கவே வேணாம்.''
''ஆமாமா.''
''பொண்ணுங்க இப்படி போட்டிக்கு வர்றதால தான், ஆம்பளைங்களுக்கு வேலை கிடைக்க மாட்டேங்குது.''
''நான் ஒத்துக்க மாட்டேன், ஸ்ரீராம். வேலை தேடிக்க அவங்கவங்களுக்கு உரிமை இருக்குல்ல... அது, ஆம்பளைங்களோட தனி உரிமை மட்டுமா என்ன... சரிடா, எங்க ஆபீசர் கூப்பிடறார்... நான் அப்புறம் பேசறேன்,'' என்றான், சோமு.
ஸ்ரீராம் இரைந்து பேசியதால், சற்றே தள்ளி உட்கார்ந்து, வீட்டுப்பாடத்தை எழுதிக் கொண்டிருந்த, தங்கை, மல்லிகாவின் செவிகளில் விழுந்தது.
அழகான தோற்றம் கிடையாது, மல்லிகா. சுமாருக்கும் கீழே தான். எனினும், அழகான பெண்களுக்கு தான் வேலை எளிதாய் கிடைப்பதாய் சொன்னதை, அவளால் ரசிக்க முடியவில்லை.
அவன் ஒலி வாங்கியை கிடத்தியதும், ''அப்ப, பொண்ணுங்க வேலைக்கு வர்றதால தான், உங்களுக்கெல்லாம் வேலை கிடைக்கலேன்றியா... அதிலேயும் அழகான பொண்ணுங்களை அதிகமாவே குத்தம் சொல்றியாக்கும்?'' என்றவாறு, அவனை முறைத்தாள், மல்லிகா.
தனக்குப் பின்னால் அவள் அமர்ந்திருந்ததை கவனிக்க தவறிய, ஸ்ரீராம் திகைத்தான். அவனால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.
''என்ன அண்ணா, பேசாம இருக்கே... வேலை செஞ்சு, சம்பாதிச்சு வயித்தைக் கழுவுற உரிமை உங்களுக்கு மட்டுந்தானா?''
''சட்டப்படி அது சரி தான். ஆனா, அவங்களால தான் எங்களுக்கெல்லாம் வேலை கிடைக்க மாட்டேங்குதுன்றதும் உண்மைதானே?''
''போட்டி இருக்கிறதால், உங்க சந்தர்ப்பம் குறையுதுன்றதை நான் ஏத்துக்குறேன். ஆனா, ஆம்பளைங்களை காட்டிலும், பொண்ணுங்க நல்லா மார்க் வாங்கி, 'பாஸ்' பண்றாங்களே... அவங்க மாதிரி நீங்க, உழைச்சு படிக்கக் கூடாதுன்னு யாரு உங்க கையைப் பிடிச்சுத் தடுத்தாங்களாம்?''
ஸ்ரீராமால் பதில் சொல்லவில்லை.
''போட்டிக்கு வர்றதை குத்தம் சொன்னதோட நிறுத்திக்காம, அழகான பொண்ணுங்க மேல அவதுாறு வேற சொல்றே.''
''நான் ஒண்ணும் அவதுாறு சொல்லலே. சில சமயம் அப்படித்தான் நடக்குது.''
''அப்படியே இருந்தாலும், அது யாரோட தப்பு... அழகா பொறந்தது அவளோட தப்பா, இல்ல, அவ அழகுல மயங்கி, அவளுக்கு வேலை குடுக்கிற ஆம்பளையோட தப்பா?''
பதில் சொல்ல இயலாமல், வாயை மூடிக்கொண்டான், ஸ்ரீராம்.
அதன் பின், வாக்குவாதத்தை தொடராமல், அங்கிருந்து அகன்றாள், மல்லிகா.
நாட்கள் நகர்ந்தன. பள்ளியிலேயே முதலிடம் பெற்று தேறினாள், மல்லிகா. அவள் தேர்ச்சி பெற்றிருந்த கணினி படிப்பின் காரணத்தால், எடுத்த எடுப்பிலேயே, ஒரு பெரிய நிறுவனத்தில், ஐந்திலக்க சம்பளத்தில் உடனே ஒரு வேலையும் கிடைத்தது.
''அண்ணா... இனிமே, நீ வேலைக்கு, 'அப்ளிகேஷன்' போட்டுக்கிட்டு இருக்காதே... இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்ந்து, மேற்கொண்டு படிச்சு, 'டிகிரி' வாங்கு. அதுதானே உன்னோட கனவு,'' என்று கூறியதும், அவன் கண்கள் கலங்கின.
''ஐம் சாரி, மல்லிகா... ரொம்ப தேங்க்ஸ்,'' என்றான், குரல் தடுமாறி.
''சேச்சே... என்னோட இடத்துல நீ இருந்தா, எதை செஞ்சிருப்பியோ, அதைத்தான் நான் இப்ப செய்யறேன்... எதுக்கு நன்றில்லாம் சொல்லிட்டிருக்க... 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' எடுத்திருந்தா, நீயும் என்னை மாதிரி நிறைய மார்க் வாங்கியிருப்பே.''
''அன்னைக்கு நான் சொன்னேனே, 'பொண்ணுங்களால தான் ஆம்பளைங்களுக்கு வேலை கிடைக்கல்லே'ன்னு, அதுக்காக என்னை மன்னிச்சுடு, மல்லிகா. இப்ப உனக்கு பெரிய வேலை கிடைச்சிருக்கிறதால, நீ எனக்கும் உதவி பண்றே, நம் குடும்பத்துக்கும் உதவியாயிருக்கப் போறே.''
''இப்ப என்ன அதுக்கு, கண்ணை துடைச்சுக்க, அண்ணா.''
எனினும், அழகான பெண்கள் வேலையை தட்டிப் பறிப்பதாய், அன்று தான் சொன்ன அதிகப்படியான குற்றச்சாட்டை பற்றி, அவன் வாயே திறக்கவில்லை; அழகில்லாத மல்லிகாவை அது புண்படுத்தக்கூடும் என்பதால்!
ஜோதிர்லதா கிரிஜா

