
'பஞ்ச்' பாலாவாகும், தனுஷ்!
அசுரன் படத்தில், தன் வயதை மீறிய, 'மெச்சூரிட்டி'யான அப்பா வேடத்தில் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்திய, தனுஷ், இனிமேல், 'பிளேபாய்' வேடங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளார். அதோடு, தானும் இந்த சமூகத்துக்கு ஏதாவது நல்ல கருத்துக்களை சொல்ல ஆசைப்படும், தனுஷ், தன் மாமனார் ரஜினி பாணியில், 'பஞ்ச்' வசனங்கள் பேசவும் திட்டமிட்டிருக்கிறார். அதனால், தனக்கு அவ்வப்போது தோன்றும் வசனங்களை, உடனே மொபைலில் பேசி, பதிவு செய்து வைத்துக் கொள்கிறார். ஆக, அடுத்தபடியாக தனுஷும், 'பஞ்ச்' பாலாவாகப் போகிறார்.
— சினிமா பொன்னையா
அடுத்த, 'ரவுண்டில்' தமன்னா!
சினிமா மார்க்கெட் ஆட்டம் கண்டு கிடப்பதால், ஆஹா என்ற, ஓ.டி.டி., தளத்தில் நடைபெற உள்ள, 'டாக் ஷோ'வில், தொகுப்பாளினியாகி விட்டார், தமன்னா. சினிமாவை மிஞ்சும் வகையில், படு கவர்ச்சியான கண்ணாடி உடையணிந்து, இந்த, 'ஷோ'வில் கலந்து கொள்ளவிருக்கும், தமன்னாவிற்கு, ஒரு எபிசோடிற்கு, 7 லட்சம் ரூபாய் சம்பளம். இதையடுத்து, 'சினிமா மார்க்கெட் இறங்கினாலும், எனக்கான மவுசு குறையவில்லை...' என்று, தகவலை வெளியிட்டு, தன், 'இமேஜை' காத்து வருகிறார், தமன்னா. ஆனை மேய்கிற காட்டில், ஆட்டுக் குட்டிக்குப் புல் கிடைக்காமல் போகுமா!
— எலீசா
பல்லவிக்கு, 'பிரமோஷன்!'
தனுஷுடன், மாரி - 2 படத்தில், ரவுடி பேபி பாடலுக்கு, பிரமாதமாக நடனமாடி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர், சாய் பல்லவி. 'இவருக்கு இணையாக நம்மால் நடனமாட முடியாதே...' என்று நினைக்கும் அளவுக்கு, சில, 'ஹீரோ'களுக்கு பயத்தையும் காட்டினார். அந்த அளவுக்கு நடனமாடும், சாய் பல்லவியை, தற்போது, அவர் நடிக்கும் தெலுங்கு படத்தில், அவருக்கான பாடலில், நடன மாஸ்டராகவும் பணியாற்ற வைத்துள்ளனர். இதனால், உற்சாகமடைந்த, சாய் பல்லவி, அந்த பாடலுக்கு, மிக வித்தியாசமான நடன அசைவுகளை கொடுத்து, அடுத்த லெவல் நடிகையாகி விடவேண்டும் என்று, 'டான்ஸ் கம்போசிங்'கை துவங்கியிருக்கிறார். ஆடித் தவித்த குரங்கு, மத்தளத்தில் ஏறி இருப்பது போல்!
— எலீசா
ஜப்பானிலும், 'நம்பர் ஒன்'னான, ரஜினி!
ரஜினி நடித்த, முத்து படம், 1995ல், ஜப்பான் நாட்டில் வெளியாகி, 45 கோடி ரூபாய் வசூலித்தது. அதன்பின், அங்கும், அவருக்கென ஒரு ரசிகர் வட்டம் உருவானதால், ரஜினி படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ரஜினி படத்தைத் தொடர்ந்து, வேறு சில இந்திய படங்களும், ஜப்பானில் திரையிடப்பட்டன. அந்த வகையில், திரி இடியட்ஸ் ஹிந்தி படம், 14.9௦ கோடி ரூபாயும், பாகுபலி-2 தெலுங்கு படம், 22.5௦ கோடியும், ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் படம், 14.6௦ கோடியும், பிரபாஸ் நடித்த, சாஹோ தெலுங்கு படம், 10 கோடி ரூபாயும் வசூலித்துள்ளன. ஆனால், எந்த இந்திய படங்களாலும், ரஜினியின், முத்து பட வசூலை, இப்போது வரை எட்டமுடியவில்லை. அந்த வகையில், ஜப்பான் பாக்ஸ் ஆபீசிலும், 'நம்பர் -ஒன்' இந்திய நடிகராகவே இருந்து கொண்டிருக்கிறார், 'சூப்பர் ஸ்டார்' ரஜினி.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* தான் நடிக்கும் சில படங்கள் ஏமாற்றி விடுவதால், இப்போது கதையை கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், 'ஸ்கிரிப்ட் ஒர்க்' நடக்கும்போது களத்தில் குதிக்கிறார், தளபதி. அப்போது, தனக்கு பிடிக்காத காட்சிகளை மாற்ற சொல்லி இயக்குனர்களுக்கு, 'டார்ச்சர்' கொடுக்கிறாராம். இதனால், கதை விவாதத்திற்கு தளபதி வரப்போகிறார் என்றாலே, இயக்குனர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்து விடுகிறதாம்.
* 'டேய் விஜய்... ஏண்டா இப்படி படுத்தற... நம், 'சீப்' வழிகாட்டுதல்படி தானே, இந்த, 'புராஜெக்ட்'டை செஞ்சுக்கிட்டு வர்றோம். நடு நடுவே நீ குறுக்கிட்டு, எதையாவது மாத்த சொல்லி, சொதப்பிட்டு வர்ற... இப்படியே போனா, நாம், 'புராஜெக்ட்'டை சீக்கிரம் முடிக்க மாட்டோம்ன்னு தோணுது...'
- இப்படி இரு நண்பர்கள் பேசிக் கொண்டனர்.
சினி துளிகள்!
* தன் மகன் சஞ்சயை, சினிமாவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று, விஜய் தயாரான நேரத்தில், 'லாக்டவுன்' பிரச்னை வந்து விட்டதால், இன்னும் ஓராண்டுக்கு தள்ளி வைத்து விட்டார்.
அவ்ளோதான்!