
ஒற்றைக் காலில் ஒரு தவம்
ஒன்றைக் காலில் நின்று
தவம் செய்யும் நாடு
இந்தியா!
அது -
ஊன்றி நிற்கும் காலையே
உலகம்
'அஹிம்சை' என்று ஆராதிக்கிறது!
சமாதானமும், சக வாழ்வும்
அதன்
இரு கண்களாக இருந்து
கனிவை பொழிந்து
கவுரவம் சேர்க்கிறது!
அதன்
பிரிவு பார்வை
அமர நிலை ஊட்டும்
அறிவுச் சுரங்கம்!
அந்நிய தேசத்தின்
ஒரு பிடி மண்ணுக்கு கூட
ஆசைப்படாத தேசம்
இந்தியா!
பாரதி, தேசத்தையும்
தேசம், பாரதியையும்
பற்றிப் பிணைந்திருக்கும்
பிரம்ம விருட்சங்கள்!
பாரதி படைத்த
ஆத்தி சூடியை
அடி மாறாமல் பின்பற்றுவது
இந்தியா மட்டுமே!
அச்சம் தவிர் துவங்கி
வரிக்கு வரி
வரலாறு படைப்பதால்
அதன் வலிமை
வணங்கத்தக்கதாகிறது!
சீறுவோர் சீறு என்பதில்
தெளிந்த ஞானியாய்
திகழ்வது பாரதம்!
சீண்டும் தேசங்களை
அடக்கி ஒடுக்க
ஒருபோதும் அது
அம்பறாத் துாணியில்
நம்பிக்கை வைப்பதில்லை...
மாறாக,
அஹிம்சையில் நம்பிக்கை வைக்கிறது!
வளர்ச்சியை
வேரறுக்க விரும்புவர்கள்
கை வைப்பது
நம் எல்லையில் அல்ல
நம் கொள்கையில்!
இந்தியா
சாத்வீக பூமி...
அதன் சக்தி அறியாமல்
சண்டைக்கு அழைப்பது
ஆழம் தெரியாமல்
காலை விடும் காரியம்!
இதை -
காலம் காட்டும் முன்
கவனம் தேவை!
வாலிதாசன், நெல்லை.
எனது தேசம்!
* எம் முந்தையர் ரத்தம் சிந்திய
வேள்வியில் விளைந்தது
இந்திய தேசம்!
* எந்த நாட்டிலும்
இல்லா விந்தைகள் ஆயிரம்
இருந்திடும் தேசம்!
* மலையும், காடும்,
ஓடும் நதியும், அலையும் கடலின்
ஒவ்வொரு துளியும்
என் தேசத்தின்
பெருமை பேசும்!
* இந்திய மலைக்கும்
முக்கடல் முனைக்கும்
சுதந்திர காற்று
வீசும்!
* முகங்களில், மொழிகளில்
வேற்றுமை இருக்கலாம்...
மதங்களில் கூட
பலவகை இருக்கலாம்...
மனங்களில் நாங்கள்
இந்தியர்கள்!
* அன்னை பூமியாம்
பாரத நாட்டின் பிள்ளைகள்
என்பதில்
எத்தனை எத்தனை
ஆனந்தம்!
* எல்லைக்குள் ஏதும்
தொல்லைகள் என்றால்
ஒவ்வொரு வீட்டிலும்
ஆள் வரும்!
* வாங்கிய விடுதலை
தாங்கிப் பிடிப்போம்...
வான் முட்டி பறக்கட்டும்
சுதந்திர கொடியை
துாக்கிப் பிடிப்போம்!
* இந்தியன் என்பதில்
பெருமிதம் கொள்வோம்...
எப்போது கேட்டாலும்
தப்பாது சொல்வோம்...
வாழ்க இந்திய
மணித்திரு நாடு!
எம். செல்வகுமார், திருச்சி.