
ஷங்கரின், பான் இந்தியா படம்!
பாகுபலி படத்திற்கு பின், சரித்திர படங்கள் மீதான மோகம் அதிகரித்து விட்டது. தற்போது, மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வரும் நிலையில், அடுத்தபடியாக, பாகுபலி படத்தை மிஞ்சிய, மெகா சரித்திர படத்தை எடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார், பிரமாண்ட இயக்குனர், ஷங்கர். 'கன்னட நடிகரும், கேஜிஎப் பட, 'ஹீரோ'வான யஷ் மற்றும் பல இந்திய நடிகர்களை அப்படத்தில் இணைக்கப் போகிறேன். இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் அப்படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார்.
சினிமா பொன்னையா
ஷெரீன் கொடுத்த, மறைமுக, 'அட்டாக்!'
துள்ளுவதோ இளமை பட நாயகி, ஷெரீன், பிக்பாஸ் சீசன் - 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின், மீண்டும் சினிமாவில், 'ரீ - என்ட்ரி' கொடுக்க நினைத்தார். ஆனால், வாய்ப்பு கேட்ட அத்தனை இயக்குனர்களுமே, அவரை, முத்தின கத்திரிக்காயாகவே பார்த்தனர். அதையடுத்து, தற்போது, பாவாடை - தாவணி, 'கெட் - அப்'பில் எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு, 'இந்த புகைப்படத்தை நல்லா உத்து பார்த்து சொல்லுங்க... எனக்கு, வயசான மாதிரியா இருக்கு... இப்பவும் அப்படி சொன்னீங்கன்னா, உங்க கண்ணுல தான் ஏதோ கோளாறு இருக்கும் சார்... சீக்கிரமே போய் ஒரு நல்ல டாக்டரா பாருங்க...' என்று, தன்னை வயதான நடிகை என்று நிராகரித்தவர்களுக்கு, மறைமுக, 'அட்டாக்' கொடுத்துள்ளார், ஷெரீன். அவள் பிடித்த முயலுக்கு மூன்றே கால்!
— எலீசா
திம்ஸ் கட்டையான, கீர்த்தி சுரேஷ்!
உடம்பை குறைக்கிறேன் என்று சொல்லி, தன் அழகையே தொலைத்து நின்ற, கீர்த்தி சுரேஷை, இரண்டாம்தட்டு, 'ஹீரோ'களே ஓரம் கட்டினர். அந்த அளவுக்கு முகம் சுளிக்க வைத்தார். இதனால், அதிர்ந்துபோன நடிகை, 'வெயிட்'டான உடல் கட்டு தான், தனக்கு அழகு என்பதை புரிந்து, சில மாதங்களிலேயே, மீண்டும், 'கொழுக் மொழுக்'கென மாறி விட்டார். அதைப் பார்த்து, 'அழகு ஆறாய் ஓடுகிறது...' என்று, சில அபிமான, 'ஹீரோ'கள், கீர்த்திக்கு, 'மெசேஜ்' அனுப்பினர். அதையடுத்து, 'இனிமேல், தவறி கூட, 'ஸ்லிம்'மாக மாட்டேன். கடைசி வரை திம்ஸ் கட்டையாகவே வலம் வருவேன்...' என்று, மார் தட்டல், தொடை தட்டலுக்கு தயாராகி விட்டார். அறியாத ஊருக்கு புரியாத வழி காட்டினாற்போல!
— எலீசா
'ரொமான்ஸ்'க்கு, கத்திரி போடும், யோகிபாபு!
கதையின் நாயகனாக யோகிபாபு நடித்த படங்கள், கணிசமான வெற்றியை கொடுத்ததால், தொடர்ந்து, அவரைத் தேடி, அதுபோன்ற வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதனால், கதாநாயகன் - -காமெடி என, 'டபுள் ட்ரேக்'கில் பயணிக்கிறார். தன்னை கதாநாயகனாக நடிக்க, கதை சொல்ல வருபவர்களிடம், 'சண்டை போட்டு நடிக்கக் கூட, நான் தயார். ஆனால், தப்பித்தவறி, 'டூயட்' காட்சி வைத்து விடாதீர். என்னால், நடிகையரை கட்டிப்பிடித்து, 'ரொமான்ஸ்' மட்டும் ஒருநாளும் பண்ண முடியாது. அது நமக்கு, 'செட்' ஆகாது...' என்று, கதை கேட்கும்போதே, 'ரொமான்ஸ்' காட்சிகளுக்கு, கத்திரி போட்டு விடுகிறார்.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
தளபதி நடிகரின் வீட்டில், அடிக்கடி வருமான வரித்துறையினர், 'ரெய்டு' நடத்துவதால், வருமானத்தின் ஒரு பகுதியை, சிங்கள தீவில், அவர் சொத்து சேர்த்து வருவதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த சொத்துக்களுக்கு, அவரது மாமனார் தான், 'பினாமி' என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அந்த சொத்துக்களை, இப்போது, அந்த நாட்டில் உள்ள சில விஷமிகள் உரிமை கொண்டாடுவதால், தளபதியின் சொத்துக்களுக்கு சேதாரம் ஏற்பட்டுள்ளது. அதனால், விரைவில், சிங்களத்தீவிற்கு சென்று, தனக்கு வேண்டப்பட்டவர்களை வைத்து, விஷமிகளுக்கு சரியான பாடம் கற்பிக்க, திட்டமிட்டிருக்கிறார், தளபதி.
'இங்க, நிம்மதியா தொழில் செய்ய விட மாட்டாங்க போலிருக்கு. போலீஸ் முதல் அரசியல்வாதி வரை, கப்பம் கட்ட வேண்டியிருக்கு. அவங்கள மறந்துட்டா, உடனே வீட்டுக்கு ஆள் அனுப்பி, 'டார்ச்சர்' கொடுக்கறாங்க.
'இந்த தொல்லையே வேண்டாம்ன்னு தலைமறைவா வேறு ஊருக்குப் போய், சொத்து சேர்க்கலாம்ன்னு பார்த்தா, அங்க ஒரு கூட்டம், 'ஆட்டய' போட பார்க்கறாங்க. எல்லாவற்றையும் ஒழித்துக் கட்டிட்டு, தினக் கூலியா போயிடலாம்ன்னு பார்க்கிறேன்பா...' என்று, அலுத்துக் கொண்டார், தொழிலதிபரான, விஜய்.
சினி துளிகள்!
* வீட்டில் ஓய்வாக இருக்கும் போது, தன் மகன் சஞ்சயுடன், 'வீடியோ கேம்' விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார், விஜய்.
அவ்ளோதான்!