
ஊழலை ஒழிக்க முடியுமா?
சமீபத்தில், பத்திரப்பதிவு சம்பந்தமாக, வட்டாட்சியர் அலுவலகம் சென்றேன். அப்பகுதிக்கு உட்பட்ட, கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும், அப்போது அங்கு வந்திருந்தனர்.
தமிழக அரசின் தேர்வாணைய குழுவின் மூலம் தேர்வு எழுதி, புதிதாக அந்த பணிக்கு வந்தவர்களான அவர்கள் பேசியதை கேட்டு, அதிர்ந்தேன்.
எந்த ஏரியாவில், எந்த வேலைக்கு எவ்வளவு லஞ்சம் தருகின்றனர்; அதை வாங்குவதற்காக, பொதுமக்களை எப்படி அலைய விடணும் என பேசியதால், நொந்து போனேன்.
'வருங்கால இந்தியா, இளைஞர்கள் கையில் தான்; ஊழலற்ற நிர்வாகத்தை இளைஞர்களால் தான் தர முடியும்...' என்றெல்லாம் முழங்கிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில், புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள், ஊழலுக்கு அஸ்திவாரம் போடுவது வேதனை அளித்தது.
இனி யாராலும், இந்தியாவை ஊழல் மற்றும் லஞ்சத்திலிருந்து காப்பாற்றவே முடியாது என்றே தோன்றுகிறது.
- எஸ்.கே. ராமசாமி, ஈரோடு.
விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய உதவித் தொகையை, போலி பட்டியல் தயாரித்து சுருட்டியவர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என்பது தெரியாதா, சகோதரரே!
- பொ.ஆ.,
பாத்திரமறிந்து உதவுக...
இரவு, 10:00 மணிக்கு மேல், அழைப்பு மணி சத்தம் கேட்டு, கதவை திறந்து, யாரென்று பார்த்தேன்.
வாசலில் நின்றிருந்த இளைஞன், 'தொந்தரவுக்கு மன்னிக்கணும், சார்... உங்களால எனக்கு ஒரு உதவி வேணும். பக்கத்து ஊரைச் சேர்ந்த நான், வேலை விஷயமா, இந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்தேன்.
'வேலை முடிஞ்சு, திரும்பி போகலாம்ன்னா, வண்டி, 'ரிப்பேர்' ஆயிடுச்சு... ராத்திரியில, 'ஒர்க் ஷாப்'ல்லாம் பூட்டிட்டு போயிட்டாங்க... அதனால, உங்க, வீட்டில் வண்டியை நிறுத்திட்டு, விடிஞ்சதும் வந்து எடுத்துக்கறேன்...' என்று, பணிவாக கேட்டான்.
இளைஞன் மேல், எனக்கு சந்தேகம் வரவே, அவனது பெயரை விசாரித்தேன்.
வண்டியின், 'பெட்ரோல் டேங்க்' மீதிருந்த கவரில், வட்டார போக்குவரத்து அலுவலக தஸ்தாவேஜுகள் இருந்தன. அதை எடுத்து பார்த்தபோது, ஆர்.சி., புத்தகம் வேறு ஒருவர் பெயரில் இருந்தது. அதிலிருந்த புகைப்படத்தில், அவன் இல்லை.
'இது, உன் வண்டி இல்லையே... பிறகு, எப்படி உன் வண்டி என்கிறாய்...' என கேட்டதும், வண்டியை விட்டுவிட்டு, மாயமாய் மறைந்தான்.
பிறகு தான் உண்மை புரிந்தது. அது, திருட்டு வண்டி என்று. விடிந்ததும், காவல் நிலையத்தில் புகார் செய்து, வண்டியை அவர்களிடம் ஒப்படைத்தேன்.
பாத்திரமறிந்து பிச்சையிடுவது போல், உதவியும் பாத்திரமறிந்து செய்தல் நன்று.
- கே. ஜெகதீசன்,
கோவை.
பொது அறிவு மிளிர...
கடந்த ஞாயிறன்று, நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.
டைரியை கையில் வைத்து,
10 சிறுவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு, அவரிடம் பேசினேன்.
'வெறும் பள்ளிப் படிப்பை முடித்த நீ, சிறுவர்களுக்கு பாடம் நடத்துவது எப்படி...' என்று கேட்டேன்.
'பொது அறிவு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். 40 ஆண்டுகளாக, 'தினமலர்' நாளிதழ் வாங்கி, அதன் இணைப்பாக வரும், வாரமலர், சிறுவர்மலர், ஆன்மிக மலர் முதலியவற்றை விடாமல் படித்து வருகிறேன்.
'அதில், எல்லா துறையிலும் உள்ள முக்கிய செய்திகளை குறிப்பு எடுத்து, அதன் மூலம் பாடம் எடுப்பதால், பல சிறுவர்களை தேர்ச்சி பெற வைத்துள்ளேன்...' என்றார்.
அவரை பார்த்த நாள் முதல், நானும், 'தினமலர்' நாளிதழ் வாங்கி, படிக்க ஆரம்பித்துள்ளேன்.
- எம்.டி. கிருஷ்ணன், சென்னை.
அறிவு வளர்ச்சிக்கு உதவும் போட்டிகள்!
காலை, 7:00 மணி வரை துாங்கும் என் பிள்ளைகள் இருவரும், ஞாயிறு அன்று மட்டும், அதிகாலை, 5:00 மணிக்கு விழித்து கொள்வர்.
கடைக்கு போய், 'தினமலர் - வாரமலர்' இதழை வாங்கி வந்து, எட்டு வித்தியாசங்கள், குறுக்கெழுத்து போட்டிக்கான விடைகளை, 'டிக் ஷனரி' மற்றும் மொபைல் வைத்து, தேடி கண்டுபிடித்த பிறகு தான், இதழை என்னிடம் தருவர்.
இதன் மூலம், என் பிள்ளைகளுக்கு, அறிவுத்திறன் வளர்ந்து வருகிறது. மூளைக்கு வேலை மற்றும் பல போட்டிகள் கொடுத்து, இளம் தலைமுறையினருக்கு அறிவு வளர்ச்சியை ஊட்டும், 'தினமலர் - வாரமலர்' இதழை மறக்க மாட்டோம்.
— டி. பதிபூரணம், சென்னை.
கேலி பேச்சுக்கு முற்றுப்புள்ளி!
சாலையோரத்தில், காய்கறி கடை நடத்தி வருகிறேன். செய்தித்தாள் படிப்பதில் ஆர்வம். 15 ஆண்டுகளாக, பல போட்டிகளில் பங்கு பெற்றுள்ளேன். ஆனால், பலனில்லை. மற்றவர்களின் கிண்டலுக்கு ஆளானேன்.
'டிவி'யில், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி முதல், கோடீஸ்வரி வரை அனைத்திலும் விடாமல் முயற்சித்தேன். 'தினமலர் - வாரமலர்' இதழ் என்னை கைவிடவில்லை. 1,000 ரூபாய் பரிசு கிடைத்தது.
என்னை பொறுத்தவரை, 1,000 ரூபாய் பரிசு, பல கோடி ரூபாய்க்கு சமம்.
மொபைல் போன் இல்லாமல் ரொம்ப சிரமப்பட்டேன். 1,000 ரூபாயை, வீண் செலவு செய்யாமல், 'தினமலர்' இதழின் நினைவாக, மொபைல் போன் வாங்கி, அனைவரின் கேலி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.
'தினமலர் - வாரமலர்' இதழ் மூலம் பரிசு வந்தமைக்கு, கோடான கோடி நன்றி. வாடாத மலர், வாரமலர்.
— எம். மகேஸ்வரி,
சென்னை.