
வாரமலரே... என் (சு)வாச மலரே!
புத்தகம் அறிவைப் பிளக்கும்
கோடாலி என்று அறிஞர்
ஒருவர் சொன்னதாய் நினைவு!
ஆயிரம் புத்தகங்கள் பத்திரிகை
உலகில் அணிவகுத்து நின்றாலும்
அவற்றை எல்லாம் புறம்தள்ளி
புதியதோர் சரித்திரம் படைத்த
புதினம் வாரமலரே!
விசேஷம் என்ற பெயரில்
வித்தியாசமான ஆன்மிக தலங்களை
நம் வீட்டின் கருவறைக்கே
கொண்டு வரும் அற்புத மலர்!
இது உங்கள் இடம் - என்று
எல்லாருக்கும் அனுபவங்களை
பாடமாக சொல்லித் தரும் வகுப்பறையாக
வாரமலர் தரும், இது உங்கள் இடம்!
கலை உலகில் சீரிய பணியாற்றிய
மகா ஆளுமைகளின் சரித்திரத்தை
முன் உதாரணமாக சொல்லும் மலரும் நினைவுகள்!
வாரமலர் வாடாது இருக்க
ஆணிவேராய் இருந்து
அறிவென்ற நீர் ஊற்றும்
அதிமேதாவி அந்துமணியாரின்
பா.கே.ப., மற்றும் கேள்வி பதில் பகுதி!
சிந்தனையை சீர்படுத்தி சமுதாய
சீர்திருத்த கருத்தை சிறப்புடன்
சொல்லும் சிறுகதைகள்!
உலக விஷயங்களை நம்
உள்ளங்கையில் கொண்டு
வந்து சேர்க்கும் ஜோரான
ஜோல்னாபையன்!
ஞானம் பெற்று ஆனந்தமாய்
நாம் வாழ பக்தி பாதையில் - நம்
சிந்தனையை அழைத்துச் செல்லும்
ஞானானந்தம்!
நடுத்தெரு என்று நக்கலாக பெயர் வைத்து
உலகத்து செய்திகளை திரட்டி நம் கையில்
கொடுக்கும், 'திண்ணை' பகுதி!
அறிவை விரிவாக்கவும், அந்த
அறிவை நுண்ணறிவாக்கவும் வரும்
எட்டு வித்தியாசங்கள், குறுக்கெழுத்துப் போட்டி!
கவலையை விடு வாரமலரை கையிலெடு
தன்னை மறந்து சிரிக்கலாம் என்று
சொல்லும் தமாசு பகுதி!
கலை உலகின் ரகசியங்களை
தெரியாத செய்திகளை தெளிவாக
சொல்லும் துணுக்கு மூட்டை!
வாழ்வியலில் வரும் சந்தேகங்களை
போக்கும் அன்புடன் அந்தரங்கம்!
எத்தனையோ அறிவுப் பக்கங்களை - தாங்கி
ஞாயிறன்று அதிகாலை பூக்கும்
என் (சு)வாச மலரே!
பத்திரிகை என்ற உலகிலே - நீ!
வார்த்தைகளால் கட்டப்பட்ட
வானுயர்ந்த பல்கலைக் கழகம்!
— எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன்,
விருதுநகர்.
வாடா மலர்!
முடிந்தவுடன்
கை கழுவி கடந்து போவதற்கு
சாப்பாட்டு பாத்திரமல்ல - அது
வைத்து காக்க வேண்டிய
வைரக்கல்லுக்கு மேல் வரமானது!
தளர்ந்தவுடன்
தரையில் போட்டு சவுட்டுவதற்கு
களைச்செடிகள் அல்ல - அது
தலையில் சூட்ட வேண்டிய
தங்க கிரீடத்துக்கு மேல் தரமானது!
உலர்ந்தவுடன்
உதறிவிட்டு சிதறிச் செல்வதற்கு
உதிர்ந்த பூக்களல்ல - அது
அடுத்தடுத்து சுவாசிக்க வேண்டிய
அற்புத மலருக்கும் மேல் அதிசயமானது!
ஏதோ ஒரு மூலையில்
நால்வருக்கு மத்தியில் நடந்து முடியும்
விவாத மேடையல்ல - அது
எல்லா வினாக்களுக்கும் விடை தரும்
விசித்திர களஞ்சியத்துக்கும் மேல் வித்தியாசமானது!
அதன் சாதனைகள்
சரித்திரத்தின் பக்கங்களிலல்ல - அது
சந்தோஷத்தை அள்ளிப் பருகும்
வாசகர்களின் உள்ளங்களில்!
அதிசய அற்புதங்களை அவ்வப்போது
அள்ளித்தரும் அட்சய பாத்திரம் - அது
அறிவுப்பசி துாண்டி அகிலமெல்லாம்
ஆணி வேர் விட்டு வந்த ஆலமரம்!
இதன் இலைகள்
இதயத்திற்கு இனிமையின் விருந்தாகும்
அதன் கிளைகள்
அனைவருக்கும் அமிழ்தான மருந்தாகும்!
ஆண்டுக்கு ஒருமுறை
வார்த்தைகள் தாங்கி வரும்
வாழ்த்து அட்டை அல்ல - அது
ஆண்டுகள் கடந்தும் வாகை சூட
வாரா வாரம் வரும் வாரமலர்
நம் வாசத்தையும் வாசல்கள் தோறும்
எடுத்துச் செல்லும் வாடாமலர்!
அது, வான் முட்டி வண்ணங்களாய்
வாசல் தோறும் வலம் வந்து செல்லட்டும்...
அது, தேனுாட்டி வாசகர்களுக்கு
வாரம் தோறும் வரம் தந்து வெல்லட்டும்!
— க. அழகர்சாமி, கொச்சி.