
சிவகார்த்திகேயன், புது, 'கண்டிஷன்!'
பெரியவர்களை விட, சிறியவர்களே தன் படங்களை அதிகமாக விரும்பிப் பார்க்கின்றனர்; எனவே, அவர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபாச காட்சிகளோ, வசனங்களோ இடம்பெறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார், சிவகார்த்திகேயன். இப்படி,பள்ளி மாணவ - மாணவியரை மனதில் கொண்டு, இதுவரை நடித்தவர், இனி, விஜய், அஜீத் பாணியில், கல்லுாரி கதையிலும் இறங்கப் போகிறார். அந்த வகையில், தன் புதிய படமொன்றில், கல்லுாரி மாணவனாக சிவகார்த்திகேயன், கல்லுாரிக்குள் வேரூன்றி இருக்கும், சில சமூக களைகளை பிடுங்கி எறிவது போன்ற கதையில் நடிக்கிறார்.
சினிமா பொன்னையா
'மீடியா'கள் மீது பாயும், ஷ்ரத்தா ஸ்ரீநாத்!
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம், 'திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா...' என்று, யாராவது கேட்டால், செம காண்டாகி விடுகிறார். 'இதே கேள்வியை, நடிகர்களிடம் போய் கேட்பீர்களா?' என்று, எதிர் கேள்வி கேட்டு, 'ஆணாதிக்கம் மிகுந்த இந்த உலகில், ஆணும் பெண்ணும் சமம் என்று நினைக்கும் நான், திருமணத்திற்கு பிறகும் நடிகர்களைப் போலவே தொடர்ந்து நடிப்பேன். அதனால், இனிமேல் என்னிடம் மட்டுமல்ல, எந்த நடிகையரிடமும், திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்று கேட்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்...' என்று, 'மீடியா'களைப் பார்த்து காட்டமாக சொல்கிறார். கேள்விப் பேச்சு, ஊரைச் சுடும்!
எலீசா
ஆச்சர்யப்படுத்திய, சாய்பல்லவி!
'ரவுடி பேபி...' பாடல் மூலம், ஒட்டுமொத்த உலக ரசிகர்களின் இதயங்களையும் வென்றெடுத்துள்ள, சாய் பல்லவி, தமிழை விட தெலுங்கில் தான், 'பிசி!' இந்த நேரத்தில், காமெடி நடிகர், காளி வெங்கட்டிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க, அவரை கேட்டுள்ளனர். 'கதை பிடித்திருந்தால், ஓ.கே., இதுவரை எந்தவொரு படத்தையும், 'ஹீரோ'களுக்காக நான் ஒத்துக்கொண்டதில்லை. கதை பிடித்தால், காமெடியன், வில்லன் யாருடன் வேண்டுமானாலும் நடிக்க நான் தயார்...' என, ஆச்சர்யப்படும் வகையில் சொன்னவர், 'முதலில் கதையை சொல்லுங்கள்; மற்றதை அப்புறம் பேசுவோம்...' என்று, கதையை கேட்க தயாராகி விட்டார்.
— எலீசா
அலறும், சந்தானம்!
'அடுத்தபடியாக, அரசியலுக்கும் ஒரு, 'ரவுண்டு' வரவேண்டும் என்ற ஆசை ஏதேனும் உள்ளதா?' என்று, நடிகர் சந்தானத்திடம் கேட்டனர். அப்போது, 'எம்.பி., 'சீட்' ஏதாச்சும் இருந்தா கொடுங்கள்... பாராளுமன்றத்தை ஒரு கலக்கி கலக்கிடலாம்...' என்று, கிண்டலாக சொல்வதோடு, 'ஏற்கனவே ஒருத்தரை அரசியலுக்கு இழுத்து, 'அட்ரஸ்' இல்லாம ஆக்கிட்டீங்க. அடுத்தாப்ல என்னையும் காலி பண்ண, 'பிளான்' போடுறீங்களா... ஆளை விடுங்க சாமி...' என்று, வடிவேலுவை மனதில் வைத்து, ஓட்டம் பிடிக்கிறார், சந்தானம்.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
முத்தின கத்தரிக்காய் ஆகிவிட்ட மூனுஷா, வம்பு நடிகருடன், நிஜ வாழ்வில் ஜோடி போட்டு விடலாம் என்று, கல் எறிந்து வந்தார். ஆனால், நடிகரின் தந்தை குலம், ஊடால புகுந்து, வூடுகட்டி அடித்து விட்டார். அதாவது, வம்பும், மூனுஷாவும், ஒரு முடிவுக்கு வருவதற்குள், இவர்களின் காதல் ஆட்டத்தை கலைத்து விட்டார். இதனால், வம்பு நடிகரை, எப்படியாவது வளைத்துப்போட திட்டம் தீட்டி வந்த மூனுஷாவின் கணக்கு, தப்புக்கணக்காகியது. மனசொடிந்து போன நடிகை, 'எனக்கு, கல்யாண ராசியே இல்லை...' என்று, அபிமானிகளிடம், புலம்பிக் கொண்டிருக்கிறார்.
'அம்மா... என் பிரண்ட், த்ரிஷா தெரியும் தானே, உனக்கு. அவளுக்கு, நடக்க இருந்த திருமண ஏற்பாடு நின்னு போச்சு!''
'ஐயையோ... ஏன்?'
'என் பிரண்டுக்கு ஏற்கனவே, இரு முறை காதல் தோல்வி ஏற்பட்டுடுச்சு... மூன்றாவதாக, தன்னுடன் வேலை பார்க்கும் சிலம்பநாதனை விரும்பினா. அவனும், காதலில் தோல்வி அடைஞ்சவன் தான். இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது, வில்லன் ஒருவன் குறுக்கிட்டதில், திருமணம் நின்று விட்டது...'
'ஐயோ, பாவம்டி... அவளுக்கும், திருமணத்துக்கும் ஒத்து வராது போலிருக்கே. சரி... அவ அம்மாவை கோவிலில் பார்த்து, ஆறுதல் சொல்லிட்டு வர்றேன்...' என்று கிளம்பினாள், அம்மா.
சினி துளிகள்!
* 'மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வரும், பொன்னியின் செல்வன், என் சினிமா பயணத்தில், ஒரு மைல்கல் படம்...' என்கிறார், த்ரிஷா.
அவ்ளோதான்!

