
விபத்தை தவிர்க்க, நம் நலனுக்காகவே எச்சரிக்கை பலகைகள் சாலையில் வைக்கப்பட்டிருக்கும். சற்று நேர பயணத்திற்கே அப்படியென்றால், வாழ்க்கைப் பயணத்திற்கு...
ஒருநாள், கோவிலுார் ஆண்டவர் எனும் மகான் கனவில், கோவிலுாருக்கு அருகிலுள்ள சாளி என்ற ஊரில் எழுந்தருளியிருக்கும், அய்யனார் காட்சி தந்தார்.
'அருகிலுள்ள கோவிலில் இருக்கும், அஞ்சாத பெருமாள் நான். என் முதுகில், இவ்வாறு புற்று வளர்ந்திருப்பது முறையா, பார்...' எனக்கூறி, தன் வடிவத்தை காட்டி, மறைந்தார்.
விழித்தெழுந்த ஆண்டவர், பொறுப்பாளரான நல்லான் என்பவரை அழைத்து, கனவில் கண்ட கோவிலுக்கு போய் பார்த்தார். அங்கே, கோவிலின் பின் சுவரில் வளர்ந்திருந்த புற்று, சுவாமியின் முதுகு வரை நீண்டிருந்தது.
புற்றை உதைத்துத் தள்ளிய ஆண்டவர், 'ஏன் இப்படி?' என, நல்லானிடம் கேட்டார்.
'குருநாதா... ஒப்பந்தம் பேசி, ஒருவரிடம் இந்த வேலைக்கான முழுத்தொகையையும் கொடுத்து விட்டேன். அவர் ஏமாற்றி விட்டார்...' என்று சொல்லி, வருந்தினார்.
ஒப்பந்தக்காரரை அழைத்து கண்டித்தார், ஆண்டவர்.
ஆனால், வேலையை துவங்காமல், ஏமாற்றிக் கொண்டிருந்தார், ஒப்பந்தக்காரர். இந்நிலையில் கருவுற்றிருந்த அவரது மனைவிக்கு உதிரப்போக்கு உண்டானது. மருத்துவம் பார்த்தனர்; பலனில்லை.
திருக்கோவிலுார் ஆண்டவரின், திருவடிகளில் விழுந்து வணங்கி, 'குருநாதா... மன்னித்து விடுங்கள். காப்பாற்றுங்கள்...' என்று வேண்டி, நடந்ததை சொன்னார், ஒப்பந்தக்காரர்.
சிறிதளவு விபூதியை அள்ளி ஒப்பந்தக்காரரிடம் தந்து, 'இதை, உன் வீட்டுக்கூரை மீது போட்டால், மனைவிக்கு நேர்ந்துள்ள இடையூறு நீங்கி, அழகான ஆண் குழந்தையை பெறுவாள். அக்குழந்தைக்கு, 'அஞ்சாத பெருமாள்' என, பெயர் சூட்டு...' என்றார், திருக்கோவிலுார் ஆண்டவர்.
விபூதியை வீட்டுக் கூரையின் மீது போட்டார், ஒப்பந்தக்காரர். அதே விநாடியில், கூரை தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அதை அணைத்து, வீட்டுக்குள் சென்று, மனைவியைப் பார்த்தார். அப்பெண்மணியின் உதிரப்போக்கு நின்று, அவள் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
அலட்சியத்தை கை விட்டு, அதிவிரைவாக அய்யனார் கோவிலை சீர் செய்து முடித்தார், ஒப்பந்தக்காரர். அவர் மனைவிக்கு, சில நாட்களில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குருநாதர் உத்தரவுப்படியே, அஞ்சாத பெருமாள் என, பெயர் சூட்டினார்.
திருக்கோவிலுார் ஆண்டவர் எனும் அம்மகானை தேடி, தெய்வங்களே நேருக்கு நேராக வந்து தரிசனம் தந்த, வரலாறு பல உண்டு. அன்போடு ஆயிரம் முறை சொன்னால் கேட்காத உலகம், தெய்வம் அச்சப்படுத்தத் துவங்கியவுடன், பயந்து, நல்லவிதமாக நடக்கிறது.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்
செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி மற்றும் குபேரன் படங்களை, வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக் கூடாது.

