
மார்ச் 8, சர்வதேச மகளிர்தினம்
நர்மதா வெளியீடு, சூரியகுமாரி எழுதிய, 'சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்' நுாலிலிருந்து:
இந்தியாவில்...
* முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி
* முதல் பெண் காங்கிரஸ் பிரசிடென்ட் - அன்னிபெசன்ட்
* முதல் முஸ்லிம் பெண் அரசி - ரஸியா பேகம்
* முதல் பெண் துாதர் - விஜயலட்சுமி பண்டிட்
* முதல் பெண் கவர்னர் - சரோஜினி தேவி நாயுடு
* முதல் பெண் மத்திய மந்திரி - ராஜ்குமாரி அம்ரித்கவுர்
* நோபல் பரிசு பெற்ற முதல் பெண் - அன்னை தெரசா
* முதல் பெண் விமானி - பிரேம் மதுார்
* முதல் பெண் விண்வெளி ஆராய்ச்சியாளர் - கல்பனா சாவ்லா
* எவரெஸ்டை அடைந்த முதல் பெண் - பச்சேந்திரி பால்
* ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் பெண்மணி - ஆர்த்தி சாஹா
* முதல் உலக அழகி - ரீடா பரியா
* முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி - கிரண்பேடி
* முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி - அன்னராஜம் ஜார்ஜ்
* முதல் பெண் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி - லீலா சேத்
* முதல் பெண் சுப்ரீம் கோர்ட் நீதிபதி - பாத்திமா பீவி
* முதல் பெண் வக்கீல் - கார்னிலியா சொராப்ஜி
* முதல் பெண் முதல்வர் (உ.பி.,) -
சுதேசா கிருபளானி
* ராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி - பிம்லா தேவி
ரா.வேங்கடசாமி எழுதிய, 'சரித்திரம் கண்ட ருசிகர சம்பவங்கள்' நுாலிலிருந்து:
ஜோன் ஆப் ஆர்க் எனும் வீராங்கனையை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, மதம் சார்ந்த போராளி.
தன், 17வது வயதில், பிரெஞ்சு படைக்கு தலைமை தாங்கி, இங்கிலாந்தை, ஆர்லியன்ஸ் பகுதியில், 1428ல், தோற்கடித்தாள். அவளது, 13வது வயதிலிருந்தே, ஏதோ ஒரு குரல், 'பிரான்ஸ் நாட்டின் அரியாசனத்தில் அமர வேண்டிய சார்லசுக்கு போய் உதவி செய்.
இது, கடவுளின் கட்டளை...' என்று, அடிக்கடி காதில் ஒலித்தது.
தனக்கு, கடவுள் இவ்வாறு கட்டளை இட்டுள்ளார் என்று, சிறுமி சொன்னால், யார் நம்புவர்... அதற்காக, இவள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா... இங்கிலாந்தை போரில் வென்று, சார்லஸ் மன்னனை அரியணையில் ஏற்ற வேண்டும்.
சார்லஸ் மன்னரை பார்க்கப் போவதாகவும், அதற்காக, ராணுவ பாதுகாப்பு தேவை என்றும், உள்ளூர் படைத்தளபதியிடம் தன்னை அழைத்துப் போகுமாறு, மாமாவிடம் கேட்டுக் கொண்டாள். அவரும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
சார்லஸிடம் ஐந்தே நிமிடங்கள் தான், பேசினாள். பிரெஞ்சு படைகளை, அவளுடன் அனுப்ப, சம்மதித்து விட்டார், சார்லஸ்.
அவள் தலைமை தாங்கி நடத்திய போரில், பிரான்ஸ் வெற்றி பெற்றது. நியூ ஆர்லியன்சில் பெற்ற வெற்றியால் தொடர்ந்து அவள், பல பிரெஞ்சு நகரங்களை எதிரிகளின் பிடியிலிருந்து விடுவித்தாள். இன்னொரு பகுதி பிரிட்டிஷ் படையை, போட்டால் எனுமிடத்தில் தோற்கடித்தாள்.
'அவளிடம் சில அபூர்வ சக்திகள் உள்ளன. கடவுளின் ஆசி இருந்ததால் தான், அவளால் இப்படி திறமையாக போரிட முடிந்தது...' என்ற பேச்சு, மக்களிடையே பரவியது.
ஆனால், இந்த அபூர்வ சக்தி அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டதோ என்னவோ, பிரெஞ்சு நாட்டு படை வீரர்களில் இருந்த துரோகிகள், அவளை பிடித்து, பிரிட்டிஷ் ராணுவத்திடம் ஒப்படைத்தனர். அவள் மீது போடப்பட்ட வழக்குகளில், அவளுக்கு எதிராக, யாருமே சாட்சி சொல்லவில்லை என்பது தான் விசித்திரம்.
ஆனாலும், மே 30, 1431ல், அவள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டாள் என்கிறது சரித்திரம்.
நடுத்தெரு நாராயணன்

