
அன்புள்ள அம்மா —
நானொரு இஸ்லாமிய பெண். வயது, 32. ஐந்து ஆண்டுகளுக்கு முன், எம்.பி.பி.எஸ்., படித்து முடித்ததும், எனக்கு மாப்பிள்ளை பார்த்தனர். தனியார் கல்லுாரியில் மின் பொறியியல் விரிவுரையாளராக பணிபுரிந்தார்.
மாப்பிள்ளைக்கு, அம்மா இல்லை. மூத்த இரு சகோதரிகளும் திருமணமாகி, அவரவர் குடும்பத்துடன் வெளியூர்களில் வசிக்கின்றனர். மாப்பிள்ளையின் அப்பாவுக்கு, 75 வயது இருக்கும். சிவில் வக்கீலாக, 'பிராக்டிஸ்' செய்தவர்.
திருமணத்திற்கு பின், நான் வேலைக்கு செல்லக் கூடாது; மேற்படிப்பும் படிக்கக் கூடாது என, மாப்பிள்ளை வீட்டார் நிபந்தனை விதித்தனர். என் அழுகையை பொருட்படுத்தவில்லை; பெற்றோர் ஒத்துக் கொண்டனர்.
திருமணத்தன்று, ஏதோ ஒரு காரணத்துக்காக, கோபித்து போய் விட்டார், மாமனார். அரை மணி நேர குழப்பத்துக்கு பின், திருமணம் நடந்தது.
மாமியார் கொடுமை இருக்காது என்ற ஒரே காரணத்துக்காக தான், திருமணத்துக்கு ஒத்துக் கொண்டனர், பெற்றோர். ஆனால், மாமனார் ஒருவரே நுாறு மாமியாருக்கு சமம் என்பதை, திருமணம் நடந்த சில நாட்களில் தெரிந்து கொண்டேன்.
திருமணத்திற்கு பின், எங்கள் வீட்டில் தான் தங்கியிருந்தார், மாமனார்.
'பின்னாளில் எதாவது ஒரு நேரத்துல, மேல படிக்கவோ அல்லது வேலைக்கு போகவோ, உனக்கு ஆசை வந்துடக் கூடாது...' எனக் கூறி, கல்வி சான்றிதழ்கள் முழுவதையும் எரித்து விட்டார், மாமனார்.
அடிக்கடி தன் மகனிடம், 'உனக்கு பொண்டாட்டி இருக்கா. ஜாலியா இருக்க. என்னை பாரு, தவிட்டுக்குருவி மாதிரி தனிமையில தவிச்சிக்கிட்டு நிக்றேன்...' என, புலம்புவார்.
நள்ளிரவில் நாங்கள் படுத்திருக்கும் அறை கதவை தட்டுவார். திறந்தால், மீசையை முறுக்கியபடி நிற்பார். 'சந்தோஷமா இருக்கீங்களா?' என, ஒரு மாதிரி வக்கிரமாக வினவுவார்.
தினமும் வாய்க்கு ருசியாக, அவருக்கு சமைத்து போட வேண்டும். மாத செலவுக்கு, அவருக்கு, 20 ஆயிரம் கொடுத்து விடவேண்டும்.
கணவர் வேலைக்கு போன பின், வீட்டில் உட்கார்ந்து, என்னை வெறித்து வெறித்து பார்ப்பார்; 'உன்கிட்ட என்ன இருக்குதுன்னு, என் மகன் மயங்கிக் கிடக்கிறான்...' என்பார்.
ஒருநாள், 'இந்தா பொண்ணு, என் பையன்கிட்ட சொல்லி, எனக்கு ஒரு பொண்ணு பார்க்க சொல்லு... பொண்ணு உன்னை மாதிரி இருந்தா தேவலை...' என்றார்.
மாமனாரின் துர் நடத்தைகளையும், பெண் பார்க்க சொல்லி கேட்டதையும் கணவனிடம் கூறினேன்.
'எங்கப்பன் கோபக்காரன்; அவன்கிட்ட போய் நான் எதுவும் கேக்க மாட்டேன். முடிஞ்சா உன் சொந்தத்துல எதாவது பொண்ணு இருந்தா சொல்லு, கட்டி வைப்பம். எனக்கு, தம்பி - தங்கச்சி பாப்பா பொறக்கட்டும்...' என்கிறார்.
திடீரென்று எதாவது ஒரு ஊருக்கு போய், ஆட்டோவில் ஊர் திரும்புவார், மாமனார்.
'ஆட்டோ வாடகை, 4,000 - 5,000 ரூபாய் ஆச்சு; உடனே கொடுத்தனுப்பு...' என, அடம் பிடிப்பார்.
'பஸ்சில் வரலாமில்லையா...' என கேட்டால், 'உன் அப்பன் வீட்டு காசையா கொடுக்கிற... என் பையன் காசுதானே கொடு...' என, அவசரப்படுத்துவார்.
வேலைக்காரியின் கையை பிடித்து இழுத்து, அவளிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.
'அடி மருமகளே... என் பேரனை கொண்டா...' என கேட்பார்.
அவனை கொஞ்சுவதற்கு பதில், 'என்ன குரங்கு மாதிரி புள்ளை பெத்திருக்க. வால் தான் இல்ல... எனக்கு தெரியாம மிருகக்காட்சி சாலையிலிருந்து, நம் வீட்டுக்கு எதாவது குரங்கு வந்துட்டு போகுதா...' என, அசிங்கமாக கிண்டல் செய்வார்.
குடிப்பழக்கமும் உண்டு. குடித்து வந்தால், வீட்டில் இருக்கும் சாமான்களை எல்லாம் போட்டு உடைப்பார். என்னையும், கணவரையும் ஆபாசமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்வார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், மாமனாரால், 500 ஆண்டு சித்திரவதையை அனுபவித்து விட்டேன்.
கடந்த ஒரு வாரமாக, 'உனக்கு, ஒரு மாதம் அவகாசம் தரேன். அதுக்குள்ள எனக்கு ஒரு பொண்ணை பாத்து கட்டி வை. இல்லேன்னா, உன்னை பாலியல் பலாத்காரம் செய்துடுவேன். என்னை யாரும் ஒண்ணும் பண்ண முடியாது...' என, மிரட்டுகிறார்.
என் பெற்றோரிடம் கூறினால், 'அங்க, இங்க புகார் பண்ணாதே. தப்பிதமான எண்ணத்துடன் நெருங்கினால், உன் மாமனாரை, 'கரன்ட் ஷாக்' கொடுத்து கொன்று விடு...' என்கின்றனர்.
நரக வேதனையில் உழல்கிறேன். நீங்கள் தான் ஒரு தீர்வு சொல்ல வேண்டும், அம்மா.
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
இனிப்பு சாப்பிடுபவனை ஏக்கத்துடன் பார்ப்பான், சர்க்கரை நோயாளி. சில நோயாளிகள், மனதுக்குள்ளேயே குமைவர்.
சிலர், 'நான், இனிப்பு சாப்பிடாதப்ப, நீ மட்டும் வாரி கொட்டிக் கொள்கிறாயே நியாயமா...' என, ஓங்கி குரல் கொடுப்பர். சிலரோ, தட்டிப் பறித்துச் சாப்பிடுவர். தட்டி பறித்து சாப்பிடும் மனநிலையில் தான் இருக்கிறார், உன் மாமனார்.
மாமனார் விஷயத்தை அலசி ஆராய்வோம். முன்கோபத்தை, வக்கிரத்தை முகமூடியாக மாட்டி, அனைவரையும் பயமுறுத்தி திரிகிறார். பயந்தது போதும், திமிறி எழு.
'யோவ் பெரியவரே... 80 வயதான நீ, தினம் ஐந்து வேளை தொழ பார். விழித்திருக்கும் நேரமெல்லாம் இறைவனின் நாமத்தை திக்கிர் எடு. எல்லா கடமைகளையும் முடித்துவிட்ட நீ, ஹஜ் யாத்திரை போ. வீட்டுக்குள் அமர்ந்து, என்னை சீண்டாதே...
'உனக்கு இன்னொரு திருமணம் செய்ய ஆசை இருந்தால், மகள்களிடம் போய் கேள். என்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தால், கண்களை நோண்டி விடுவேன். பேரனை பற்றி அவதுாறாய் பேசினாய் என்றால், உன் வாய் விளங்காமல் போய்விடும்.
'இத்துடன் உன் தவறான நடத்தையை நிறுத்திக் கொள். இனி, இந்த வீட்டில் உனக்கு இடமில்லை; வீட்டை விட்டு வெளியே போ. உன் துர்நடத்தையை, மகள்கள் குடும்பத்தாரிடமும், ஜமாஅத்திடமும் புகார் செய்வேன்.
'குடும்ப வன்முறையில் ஈடுபடுகிறாய் என்று, மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பேன். மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைக்கும். யாரிடம் வாலை ஆட்டுகிறாய்... வாலை ஒட்ட நறுக்கி விடுவேன்...' என, போர்க்குரல் எழுப்பு.
குடும்ப அங்கத்தினர்கள் அனைவரிடமும் பேசி, மாமனாரை ஒரு நல்ல மனநல ஆலோசகரிடம் அனுப்பு.
'கரன்ட் ஷாக்' கொடுத்து, கொலைகாரி ஆகாதே. கணவனின் கோழைத்தனத்தை போக்கு. மேற்படிப்பு படிக்காவிட்டாலும் வீட்டு வாசலிலேயே, 'கிளினிக்' வைத்து தினம், 10 நோயாளிகளை குணப்படுத்து.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

