
எல்லையை விரிவுபடுத்தும், விஜய்!
சமீபகாலமாக, தனுஷ், விஜய்சேதுபதி போன்ற தமிழ் நடிகர்கள், பாலிவுட் சினிமாவிலும் முத்திரை பதித்து வருவதால், அஜீத்தின், வலிமை படத்தை, ஹிந்தி உட்பட ஐந்து மொழிகளில் வெளியிடுகின்றனர். இதைப் பார்த்து, விஜயும் தன் படங்களின் வியாபார வட்டத்தை விரிவுபடுத்தும் வேலைகளை துவங்கியிருக்கிறார். அதனால், தன், 65வது படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என, அனைத்து மொழி ரசிகர்களின் ரசனைகளையும் கருத்தில் கொண்டு, கதை மற்றும் காட்சிகளை உருவாக்குமாறு, இயக்குனர்களை கேட்டுள்ளார்.
சினிமா பொன்னையா
தெறிக்க விடும், பிரியா பவானி சங்கர்!
கமர்ஷியல் நாயகி என்ற எல்லைக்கோட்டை, 'டச்' பண்ணி விட்டபோதிலும், 'என்னை, கவர்ச்சி கதாநாயகி என்று சொல்லாதீர்; 'ஹோம்லி' நாயகி என்று சொல்லுங்கள். அந்த அளவுக்கு மற்ற நடிகையரை போன்று, கவர்ச்சியை வெளிப்படுத்தாமல், குடும்ப பெண்ணாக, பட்டும் படாமலும் இலைமறை காயாக, 'அவுட்' பண்ணப் போகிறேன்...' என்கிறார், பிரியா பவானி சங்கர்.
'சுனாமியா மாறப் போறேன்னு, 'பில்ட் - அப்' கொடுத்தீர்களா?' என்று கேட்பவர்களிடத்தில், 'சுருக்குன்னு இருந்தால் தான், சூடு அதிகமாகும். அதை நான் சொன்னா புரியாது. போகப் போக என்னோட, 'பர்பாமென்ஸை' பார்த்து புரிஞ்சிக்கோங்க...' என்று சொல்லி, தெறிக்க விடுகிறார். அடித்தது ஆட்டம், பிடித்தது பெண்டு!
— எலீசா
துாள் பண்ணிய, அஜீத்!
சமீபத்திய, அஜீத் பட பாடல்களில், வேதாளம் படத்தில் இடம்பெற்ற, 'ஆளுமா டோளுமா...' பாடலை, அவரது ரசிகர்கள் இப்போது வரை கொண்டாடி வருவதோடு, அதுபோன்ற ஒரு பாடலை படத்துக்குப் படம் கேட்டு வருகின்றனர். இதனால், விஸ்வாசம் படத்தில், 'அடிச்சுத்துாக்கு...' -என்ற பாடலை வைத்தார். அதையடுத்து, தான் நடித்து வரும், வலிமை படத்திலும் அதே பாணியில், 'பெப்பி டான்ஸ்' பாடல் ஒன்றை வைத்திருக்கிறார். இந்த பாடலுக்கு, 'ஆளுமா டோளுமா'வை மிஞ்சும் அதிரடி நடனமும் ஆடி, துாள் கிளப்பி உள்ளார்.
சி.பொ.,
ராதிகா வழங்கும் சினிமா, 'டிப்ஸ்!'
அம்மா நடிகையாகி விட்ட, 'மாஜி ஹீரோயின்' ராதிகா, இப்போதைய நாயகியரான நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா போன்றவர்களுக்கு, 'ஸ்பாட்'டில், நடிப்பு, அழகு, 'டிப்ஸ்' மட்டுமின்றி, சினிமாவில், நம்பர் ஒன் நாற்காலிக்கு வர நினைப்பவர்கள், எந்த மாதிரியான கதைகள், கதாபாத்திரங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று, 'அட்வைஸ்' கொடுக்கிறார். இதனால், தற்போதைய முன்வரிசை இளவட்ட நடிகையர், ராதிகாவை, 'சினிமா கைடு' போன்றே கருதுகின்றனர்.
— எலீசா
'ரீ - என்ட்ரி' கொடுக்கிறார், வடிவேலு!
கடந்த, 2017ல், விஜயின், மெர்சல் படத்திற்கு பின் எந்த படத்திலும் நடிக்கவில்லை, வடிவேலு. 'மீண்டும் காமெடியனாக என்னால், 'ஸ்கோர்' பண்ண முடியும்...' என்று, சில அபிமான இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டார். ஆனால் அவர்களோ, 'இனி, உங்கள் காமெடி எடுபடாது...' என்று சொல்லி, கேரக்டர் வேடத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளனர். அதையடுத்து, தன் பிடிவாதத்தை தளர்த்தி, கேரக்டர் நடிகராக, 'ரீ- - என்ட்ரி' கொடுக்க முடிவு செய்துள்ள வடிவேலு, தன் உடல் எடையையும் குறைத்து, முன்பை விட சற்று, 'ஸ்லிம்' ஆகி இருக்கிறார்.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
ராசியில்லாத நடிகை என்ற முத்திரையில் இருக்கும் அந்த ராசியான நடிகை, எடை குறைத்து, 'ஸ்லிம்' ஆன பிறகு, கோலிவுட்டின் இளவட்ட, 'ஹீரோ'களை வெகுவாக சுண்டியிழுத்து வருகிறார். இதனால், அம்மணியின் தோல்வி, 'சென்டிமென்ட்'டைப் பற்றி கவலைப்படாமல், அவரை, தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்களுக்கு, 'ஆர்டர்' போட்டு வருகின்றனர், 'ஹீரோ'கள்.
விளைவு... தன்னைச்சுற்றி போட்டு வைத்திருந்த அனைத்து செக்போஸ்டுகளையும் அப்புறப்படுத்தி விட்ட நடிகை, சமீபத்தில், அபிமானிகளுக்கு நள்ளிரவு விருந்து கொடுத்தும் உபசரித்துள்ளார். அந்த, 'பார்ட்டி'யில் ஆஜரான, 'ஹீரோ'களுடன், அதிரடி ஆட்டம் போட்டும் கிறங்கடித்துள்ளவர், 'என்னை, கோலிவுட்டின், 'நம்பர் ஒன்' நடிகையாக்குவது உங்கள் பொறுப்பு...' என்று கூறி, அளவற்ற அன்பையும் வாரி வாரி வழங்கியிருக்கிறார். அதில், திக்குமுக்காடிப் போன, 'ஹீரோ'கள், அம்மணியின், சினிமா மேனேஜர்களைப் போலவே, இப்போது அவருக்காக, கம்பெனி கம்பெனியாக, சிபாரிசுகளை முடுக்கி விட்டுள்ளனர்.
'நாமெல்லாம் கல்லுாரியில் சேர, போராடி, 'அட்மிஷன்' வாங்கியிருக்கோம். ஆனா, இந்த ராசி கண்ணான்ற பொண்ணு, குறைவான மார்க் எடுத்தும், சுலபமா வந்து சேர்ந்துட்டாளே... அது எப்படிடி?'
'அடி போடி... அவ என்ன செஞ்சு, 'அட்மிஷன்' வாங்கினா தெரியுமா? முதலில், பிரின்ஸிபாலை கைக்குள் போட்டுக்கிட்டா... தன் பிறந்த நாள் என்று சொல்லி, நம்ம பிரிவு பேராசிரியர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று, செம விருந்து, 'கிப்ட்'டுன்னு கொடுத்து அசத்தியிருக்கா.
'அப்புறமென்ன... எல்லாரும் கவுந்துட்டாங்க. 'சீட்' கொடுத்ததோடு, பாடங்களுக்கு நோட்ஸ் எடுத்து கொடுப்பதற்கும், 'அசைன்மென்ட்' தயார் செய்யவும், உதவி செய்யிறாங்க...' என்று, தோழியர் இருவர் பேசிக் கொண்டனர்.
சினி துளிகள்!
* விஜய்சேதுபதியுடன், சங்கத்தமிழன் படத்தில் நடித்த, ராசி கண்ணா, இப்போது, துக்ளக் தர்பார் படத்திலும் இணைந்திருக்கிறார்.
அவ்ளோதான்!