
ஒருவர் உதவியில்லாமல், அடுத்தவர் வாழ முடியாது. அனைவருமே ஏதாவது ஒரு வழியில், அடுத்தவர்களின் உதவியால்தான் வாழ்கிறோம். இதை உணர்ந்து செயல்பட்டால், நலம் பல விளையும்.
கவிஞர், இலக்கிய தர்க்க வியாகரண பண்டிதர், ஜோதிடக் கலையிலும் நிபுணர். சுருக்கமாகச் சொன்னால், மாமேதை அச்சுதர்.
அவருடைய சீடர், நாராயணன், 26 வயதிலேயே சம்ஸ்கிருதத்தில் காப்பியங்கள் எழுதும் அளவிற்குத் திறமை பெற்றவராகவும், கூடவே, அலட்சிய குணம் கொண்டவராகவும் இருந்தார். நாராயணனின் இக்குணம், குருநாதரின் மனதில், வருத்தத்தை உண்டாக்கியது.
ஒருநாள்... குருநாதர் வீட்டில் விசேஷ பூஜை நடந்தது. ஆங்காங்கே விளக்குகள் ஏற்றி வைத்திருந்தனர்.
எரிந்து கொண்டிருந்த விளக்கைத் தாண்டி, நாராயணன் செல்ல முயன்ற போது, கால் பட்டு, விளக்கு சாய்ந்தது.
'அப்பா, நாராயணா... என்ன படித்தாய், நீ. எரியும் விளக்கைத் தாண்டலாமா... பார்த்தாயா, என்ன நடந்ததென்று... உன் வாலிப முறுக்கு இப்படி செய்ய சொல்கிறதா... இரும்பு வளைந்தால், அங்குசமாக ஆகி, யானையை அடக்க உதவும்.
'ஆனால், மனித உடம்பில் உள்ள நரம்பு வளையுமானால், செயல்படவே முடியாதேப்பா... அடுத்தவர்களுக்கு பயன்படாமல், இவ்வாறு முறை மீறி நடப்பதற்காகவா, நீ இவ்வளவு படித்தாய்...' என்று கடிந்து கொண்டார், குருநாதர்.
அதே விநாடி, நாராயணனின் அலட்சிய குணம் அகன்றது.
இந்நிலையில், குருநாதருக்கு வாத நோய் வந்து, அவரின் வாழ்க்கை முழுவதுமாக முடங்கியது. இது, நாராயணனின் மனதில் வருத்தத்தை உண்டாக்கியது.
'குருநாதா... அடியேனை மன்னியுங்கள். குருதட்சணையாக, தங்கள் வாத நோயை, அடியேன் ஏற்றுக் கொள்கிறேன்...' எனக்கூறி, அவரை மும்முறை வலம் வந்து, ஆத்மார்த்தமாக சில மந்திரங்களைச் சொன்னார், நாராயணன்; ஒருசில நாட்களிலேயே நோயிலிருந்து மீண்டார், குருநாதர்.
வாத நோயால் நாராயணனின் செயல்பாடுகள் முடங்கியதால், அதிலிருந்து தன்னை காப்பாற்றும்படி, குருவாயூரப்பனை சரணடைந்து, துதிக்கத் துவங்கினார். அத்துதிகளின் தொகுப்பே, ஸ்ரீநாராயணீயம் எனும் அற்புதமான நுால்.
குருவாயூரப்பன் அருளால், நாராயணனின் வாத நோய் முழுவதுமாக நீங்கியது. நாராயண பட்டதிரி தான், அந்த நாராயணன். ஸ்ரீநாராயணீயம் எனும் அந்நுாலை பாராயணம் செய்பவர்களுக்கு, மனநோய் உட்பட நீக்கி, அருள் புரிவது கண்கூடாக நடக்கிறது.
சீடருக்கு நல்லுபதேசம் செய்து, அவரை வழிப்படுத்திய குருநாதர்; குருநாதருக்காகவே வாழ்ந்து, அவர் நோயை ஏற்றான், நாராயணன். அவரால் உருவான, ஸ்ரீநாராயணீயம் ஆகிய நிகழ்வுகள், இன்றும் நமக்கு நல்வழி காட்டுகின்றன.
பி. என். பரசுராமன்