
'ஊரிலிருந்து வரும் கணவர் நீலகண்டன், என்ன தீர்மானத்துடன் வருகிறாரோ...' என்று சத்யாவின், மனதில் ஒரு சந்தேகம்.
காரணம், கணவனின் தங்கை மகன், அசோக்.
பிளஸ் 2 முடித்த அவன், இன்ஜினியரிங் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று, 'கவுன்சிலிங்' மூலம் இந்த ஊரில் உள்ள பிரபல கல்லுாரியில் சேர இருப்பதாக, ஏற்கனவே தகவல் வந்திருந்தது.
மகிழ்ச்சி தான். ஆனால், ஒரு சங்கடம்.
''இங்குள்ள கல்லுாரியில், 'சீட்' கிடைத்திருப்பதால், மாமா வீட்டில் தங்கி படிக்க, கல்லுாரிக்கு போக, வர வசதியாக இருக்கும் என்று முடிவெடுத்து விட்டால், என்ன செய்வது?'' என்றாள், சத்யா.
''அதனால் என்னம்மா... இது, அவன் மாமா வீடு. தனி அறை இருக்கு. இங்கே தங்கிக்க அவனுக்கு உரிமை இல்லையா... நம்மால் மறுக்க முடியுமா,'' என்று கேட்டாள், மகள் பூமிகா.
''இப்போது தான், கல்லுாரிக்கு போக ஆரம்பித்திருக்கிறாய். 18 வயசு. அழகாக இருக்கும் உன்னை, ஒருமுறை பார்த்தவர்கள், மறுமுறை திரும்பி பார்க்காமல் போக மாட்டார்கள்.
''இந்த நிலையில், நிரந்தரமாக ஒருவனை வீட்டில் தங்க அனுமதிப்பதென்பது எத்தனை ஆபத்தானது. ரொம்ப வேண்டப்பட்டவனாகவே இருந்தாலும், அதான் சங்கடமாக இருக்கிறது,'' என்றாள்.
''சங்கடம் எங்கிருந்து வந்தது. அசோக், நமக்கு புதுசா... இங்கே அவன் வந்ததே இல்லையா?'' என்றாள், பூமிகா.
''அது வேறு... விடுமுறையில் வந்து ரெண்டு நாள் தங்கி போவான். ஆனால், ஒரேடியாய் இங்கே தங்கி, படிக்க விரும்பினால், அதைப்பத்தி யோசிக்கணும்டி... நீ, குறுக்கே வராதே... நானும், அப்பாவும் பேசிக்கறோம்,'' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, வந்தார், நீலகண்டன்.
வரவேற்று, வேண்டிய உபசாரங்கள் செய்யும்போதே, அவர் முகத்தையும் ஆராய்ந்தாள். அதில் திருப்தி படர்ந்திருந்தது.
சத்யாவிற்கு புரிந்து விட்டது.
'நாம் யோசிக்கும் முன்பே, தீர்மானம் செய்து, வாக்கும் கொடுத்து வந்திருப்பார். அடுத்த பஸ்சிலோ, மறுநாளோ, பெட்டியும் படுக்கையுமாக வந்து நிற்கப் போகிறான், அசோக். அவனுக்கு இங்கே என்னென்ன சவுகரியங்கள் செய்ய வேண்டும் என்று ஆணையிட, அவரது தங்கையும் வந்து விடுவாள்.
'ஏற்கனவே அண்ணன் வீடு என்ற உரிமை. இப்போது மகன், இன்ஜினியரிங் படிக்கப் போகிறான் என்ற பெருமையும் சேர்ந்து, 'தாம் துாம்' என்று உத்தரவு பறக்கும். மறுத்தால், சங்கடம், சண்டை. என்ன செய்யலாம்...' என்று யோசித்தவள்...
நீலகண்டன் வாய் திறக்கும் முன், ''பாருங்க, ஊர்ல, என்ன நடந்திருக்கும்ன்னு, என்னால யூகிக்க முடியுது. அசோக்கை, நம் வீட்டில் வச்சு, படிக்க வைக்கிறதுங்கிறது, நம் கடமை. ஆனால், அதை நிறைவேற்றத்தான் வேணுமா என்பதில் எனக்கு தயக்கம்.
''உடனே, என்னை தப்பா நினைச்சுடாதீங்க. நான் ஏன் அப்படி சொல்றேன்னா, பின்னால் நிகழக்கூடிய அனாசாரங்களை அல்லது ஏமாற்றங்களை ஆரம்பத்திலேயே தடுத்துடலாமேன்னு தான்...
''உங்க மனசுக்குள்ள ஒரு கணக்கு இருக்கும். அதாவது, எதிர்காலத்துல, பூமிகாவை, அசோக்கிற்கு கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்ன்னு. இரண்டு வீட்டு தரப்பிலும் இப்படி ஒரு பேச்சு ஓடிண்டு தான் இருக்கு.
''அது, பரவலா குடும்பங்களில் போடுற கணக்கு தான். ஆனால், நாம போடற கணக்குப்படி, இந்த கல்யாண விஷயங்கள் கூடி வர்றதில்லை.
''வரது மாமாவை தெரியும்தானே... அவருக்கு ரெண்டு பெண்கள். ஒரு பெண்ணை, தன் அக்கா மகனுக்கு கொடுக்கலாம்ன்னு யோசனை செய்து, ஊரிலிருந்து அவனை வரவழைத்து, வீட்டில் தங்கி, படிக்க வைத்து, வேலையும் வாங்கி கொடுத்தார்.
''அடுத்து, தன் மகளுக்கும், அவனுக்கும் கல்யாணம் என்று தீர்மானித்த நிலையில், அவன், வேறு பெண்ணை திருமணம் செய்து போய் விட்டான்.
''ஊரில், கங்காதரன் மாமா, தன் உறவுக்காரர் மகனை தத்து எடுத்து, போற்றி வளர்த்தார். அந்த நன்றிக்காக, அவர் மகளை வரதட்சணை இல்லாமல் மணந்து கொள்வான் என்று, அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். அவனோ, அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு, வேறு இடத்தில் கல்யாணம் செய்து கொண்டான்,'' என்றாள்.
''இதெல்லாம் எனக்கும் தெரியுமே... ஏன், இதையெல்லாம் இப்ப சொல்ற?''
''உலக நடப்பை சொன்னேன். இப்போ நம் பெண்ணுக்கும், அசோக்குக்கும் எதிர்காலத்தில் திருமணம் செய்யறதுன்னு, லேசா ஒரு யோசனை ஓடிகிட்டிருக்கு. எனக்கோ, மகளுக்கோ, அப்படி ஒரு சிந்தனை இல்லை.
''என்றாலும், அண்ணனாகிய உங்களுக்கும், தங்கைக்கும் இடையில் எழுதப்படாத ஒப்பந்தம் ஒண்ணு இருக்கு. அது, கண்கூடா தெரிஞ்ச விஷயம். சம கால பாசமலர்கள். நீங்க, விட்டுக்கொடுக்க மாட்டீங்க. இங்கே, யார் மறுத்தாலும் அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்காமல், என் மீது பாய்வீங்க.''
''புரியும்படி சொல்லேன்,'' என்று, காபியை உறிஞ்சினார்.
''புரிஞ்சிருக்கும். ஆனால், புரியாத மாதிரி காட்டிக்கறீங்க. என் வாயிலிருந்து என்ன வருதுன்னு ஆழம் பார்க்கறீங்களோ... அசோக், இன்ஜினியரிங் படிக்கப் போறது நல்ல விஷயம். எனக்கும், மகிழ்ச்சி தான். ஆனால், நம் வீட்டில் தங்கி, கல்லுாரிக்கு போயிட்டு வர்றது போல ஒரு யோசனை இருந்தால், அது வேணாம்.
''அவன், ஹாஸ்டலில் தங்கி படிக்கட்டும். கல்லுாரி, ஹாஸ்டல் கட்டணம், ரெண்டையும் நாமே கட்டிடலாம் அல்லது சில மாணவர்களை கூட்டு சேர்த்துகிட்டு, கல்லுாரிக்கு பக்கத்தில் அறை எடுத்து தங்கலாம். 'மெஸ்'சில் சாப்பிடறதோ அல்லது சுய சமையலோ செய்து சாப்பிடட்டும்.
''குகன் மகன், சென்னை, மெடிக்கல் காலேஜில் படிக்கும்போது அப்படிதானே தனி அறை எடுத்து படிச்சான். அவரும் ஒவ்வொரு மாதமும் நேரில் போய் பணம் கொடுத்துட்டு வருவாரே... அப்படி ஏதாவது ஒரு ஏற்பாட்டை செய்துடுங்கோ.''
''உனக்கு ஏன் இப்படி எல்லாம் சிந்தனை ஓடுது... வயசுப்பெண் இருக்கிற வீட்டில் எப்படி ஒரு பையனை தங்க வைக்கிறதுன்னு யோசிக்கறீயா... அசோக், ரொம்ப நல்ல பையன். தப்பெல்லாம் செய்ய மாட்டான். என் தங்கை வளர்ப்பு.''
''நான் மட்டும் மகளை ஏனோ தானோன்னு வளர்த்திருக்கேனா... அவளும் தங்கம் தான். என் பயமெல்லாம், எதிர்காலத்தில், அசோக் படிப்பு முடிஞ்சதும், அதற்கு ஒரு தொகையை கொடுத்துட்டு வெளியேறி, வேற பொண்ணை கட்டிக்கிட்டான்னு வைங்க... அது, நமக்கு அசிங்கமாவும், ஏமாத்தமாவும் இருக்குமா இல்லையா?''
''ரொம்ப அலட்டிக்கிற... எங்கெங்கோ நடக்கிற விஷயங்கள், நம் வீட்டிலும் நடக்கும்ன்னு நினைச்சு, ஏன் சந்தேகப்படணும்.''
''நம் வீட்லயும் அப்படி நடக்காதுங்கிறதுக்கு என்ன உத்தரவாதம்?''
''நடந்தால் நடந்துட்டு போகுது. படிச்சு, அசோக் வேற பெண்ணை கட்டிக்கட்டும். நம் மகளுக்கு, வேற பையனா கிடைக்க மாட்டான்?''
''என்ன சொல்றீங்க, ஆண்டுக்கணக்கா உறவுக்காரப் பையன் இருந்துட்டு போனால், புதுசா வர்றவன் கொஞ்சமாவது யோசிக்க மாட்டானா... ஏன், முறைப்பையன் கட்டிக்காம போனான்னு, கேள்வி வராதா. அந்த பயம் தான் எனக்கு.''
''எனக்கு ஒண்ணும் புரியலை. இங்கே, நீ இப்படி பேசற...
''அங்கே, 'நீங்களும், அண்ணியும் பெருந்தன்மையாக நடந்துகிட்டாலும், நாளைக்கு ஒரு சொல்லுக்கு இடமாகிடக் கூடாது. எந்த வகையிலும் நம் உறவும் பாதிக்க கூடாது. அசோக்கை கல்லுாரியில் சேர்க்கும்போதே ஹாஸ்டலிலும் சேர்க்க ஏற்பாடு பண்ணிட்டேன். நேரம் கிடைக்கும்போது அவனை கல்லுாரிக்கு போய் எட்டிப்பார்த்தீங்கன்னா போதும்'ன்னு சொல்லிட்டாள்,'' என, காலி கோப்பையை கீழே வைத்து, குளியல் அறை நோக்கி நடந்தார்.
இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை, சத்யா.
அவளுக்கு, நாத்தனார் மேல் பெரிய மரியாதையே வந்தது.
உடனே, நீலகண்டனின் தங்கையிடம் போனில் தொடர்பு கொண்டு, ''ரொம்ப நன்றி. அசோக் விஷயமா ஒரு நல்ல தீர்மானம் எடுத்து, என்னை சங்கடத்திலிருந்து மீட்டுட்டே. ஆனால், நான் ஏன் அப்படி யோசிச்சேன்னு நினைக்கும்போது, எனக்கே வெட்கமா இருக்கு. சாரி...'' என்றாள்.
''ஏன் மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு... நானும் அம்மா தானே, உங்களுக்கு ஏற்பட்ட சங்கடம் எனக்கு மட்டும் வராதா... எதற்கும் தள்ளியே இருக்கட்டும்ன்னு, நாந்தான் முந்திக்கிட்டு, அவனை ஹாஸ்டலில் போட்டேன். எதிர்காலத்தில் எது எப்படி திரும்பும்ன்னு சொல்ல முடியாது பாருங்க,'' என்றாள், நீலகண்டனின் தங்கை.
''இப்போ கொஞ்சம் விலகியிருந்தாலும், எதிர்காலத்தில், அவங்க ஒண்ணா சேரணும்,'' என்றாள், சத்யா.
''அது, நம் கையிலா இருக்கு... இன்னாருக்கு இன்னாருன்னு கடவுள் எப்படி தீர்மானிக்கிறாரோ, அப்படி நடந்துட்டு போவுது. பார்க்கலாம், அண்ணி,'' என்று, கைபேசியை வைத்தாள்.
'ஏன்தான் இவளிடம் வாய் கொடுத்தோம்' என்று, நொந்து கொண்டாள், சத்யா.
படுதலம் சுகுமாரன்