
அன்புள்ள அம்மா —
எளிமையான குடும்பத்திலிருந்து வந்த, முதல் பட்டதாரி மாணவி, நான். எம்.ஏ., - எம்.பில்., - பி.ஹெச்டி., ஆங்கிலத்தில் படித்து முடித்து, 'நெட்' தேர்வும் தேர்ச்சி பெற்றேன்.
அரசு கலைக்கல்லுாரியில் விரிவுரையாளர் பணி கிடைத்தது. பணியில் சேரப்போன என்னை வரவேற்ற, துறை தலைவர்,
58 வயது பெண்மணி; திருமணமாகாதவர். ஆங்கில இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்ப்பதில் திறமையானவர்; ஆள் பார்க்க, மகாலட்சுமி மாதிரி இருந்தார்.
என்னை சேர்த்து அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, 'தேவதையே... உன்னை, என் துறை, இரு கரம் நீட்டி அன்புடன் வரவேற்கிறது...' என்றார்.
எனக்கு பெரியதாய் வித்தியாசம் தெரியவில்லை. அம்மா வயதுள்ள மூத்த பெண்மணி, மகள் வயதுள்ள இளைய பெண்ணை அன்புடன் வரவேற்கிறாள் என்றே நினைத்தேன்.
அதன்பின், பலமுறை என்னை அறைக்கு அழைத்து, அங்கும் இங்கும் தொட ஆரம்பித்தார், துறை தலைவர். அவருடைய மொபைல் நம்பரை கொடுத்து, என் மொபைல் நம்பரை வாங்கியதுடன், என் உருவ அமைப்பை, அங்க லட்சணங்களை கவிஞர் போல வர்ணிக்க ஆரம்பித்து விட்டார்.
'எங்கு தங்கியிருக்கிறாய்?' என, கேட்டார்.
'வேலை பார்க்கும் பெண்கள் விடுதி...' என்றேன்.
'ஏன் சிரமப்படுகிறாய்... பங்களா போல வீடு கட்டியிருக்கிறேன். நீ அங்கு வந்து தங்கு...' என்றார்.
நான் பதில் பேசவில்லை.
துறையில் இருக்கும் இன்னொரு பெண் விரிவுரையாளர், 'என்னம்மா.... ஹெச்.ஓ.டி.,யோட, 'டார்ச்சர்' அதிகமாயிருச்சா... அவங்களை பத்தி சொல்றேன் கேளு...' என, பழைய கதைகளை வரிசைப்படுத்தி, கூற ஆரம்பித்தார்.
'ஓரின சேர்க்கையாளர். அவருக்கு ஏராளமான ஓரின சேர்க்கை காதலியர் வந்தனர். ஆனாலும், யாரும் நிலையாக நிற்கவில்லை...' என்றார்.
மொபைல் போனில் அழைத்த துறை தலைவர், 'டார்லிங், ஐ லவ் யூ... என்னுடன் சேர்ந்து வாழ தயார் என்றால், நீ கேட்டதை எல்லாம் அள்ளி தருவேன். உனக்கு ஒரு மாதம் அவகாசம் தருகிறேன். என்னுடன் ஒத்துழைக்க மறுத்தால், இந்த துறையில், நீ ஒரு நிமிஷம் கூட குப்பை கொட்ட முடியாது. சீக்கிரமே முடிவை சொல்...' என்றார்.
உடன் பணிபுரியும் பெண்மணி, 'தயங்காமல் அவளது, 'ஆபரை' ஏற்றுக் கொள். இன்னும் இரண்டு ஆண்டுகள் தான், அவளுக்கு சர்வீஸ். அதுக்குள்ள அவ சொத்து பத்தையெல்லாம் உன் பேர்ல எழுதி வாங்கிக்க. 'ரிட்டையர்மென்ட்' ஆன, 'ஷாக்'லயே செத்து போயிடுவா.
'இப்ப உனக்கு, 26 வயசு. ரெண்டு மூணு வருஷத்ல, நீ கோடீஸ்வரி ஆகி, ஒரு ஆணை, 'ஜாம் ஜாம்' என்று கல்யாணம் செய்துக்கலாம். அவளுடைய மொழிபெயர்ப்பு தொடர்புகளை எல்லாம் நீ மடக்கிப் போட்டா, அதிலும் நீ, 'பேமஸ்' ஆயிடலாம். இது, ஓரின சேர்க்கைதானே கற்பா கெட்டு போயிட போகுது...' என, துாபமிட்டார்.
எனக்கு அடுத்தவர் பொருளின் மீது ஆசை இல்லை. துறை தலைவரின் அத்துமீறல்களிலிருந்து தப்ப, வழி சொல்லுங்கள், அம்மா.
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
துறை தலைவரிடம், 'அம்மா... நீங்கள், என்னை விட, 32 ஆண்டு மூத்தவர். துறை அனுபவமும், உலக அனுபவமும் மிக்கவர். ஓரின சேர்க்கையாளர்களை நான் இழிவாக பார்ப்பதில்லை. அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன்.
'அதேநேரம், ஓரின சேர்க்கை எனக்கு உடன்பாடான விஷயமல்ல. சீக்கிரமே நான் ஒரு ஆணை திருமணம் செய்து, 'செட்டில்' ஆக விரும்புகிறேன். உங்களுக்கு ஒத்துழைப்பது போல நடித்து, சொத்துகளை சுருட்ட நான் விரும்பவில்லை.
'துறையில், உங்களது ஆணைகளை ஏற்று, கீழ்படிந்துள்ள ஊழியராக செயல்படுவேன். மொழிபெயர்ப்பு பற்றி சொல்லி கொடுங்கள் கற்றுக் கொள்கிறேன். இனி, தவறான எண்ணத்துடன் என்னை தொட முயற்சி செய்யாதீர்...' என, மனம் விட்டு பேசு.
உன் பேச்சை கேட்டு, துறை தலைவர் ஒதுங்கி கொண்டால் மிகவும் நல்லது. சீண்டல்கள் சிறிய அளவில் தொடர்ந்தால், இரண்டு ஆண்டுகளுக்கு தாக்குபிடிக்கும் மனோதிடம் உன்னிடம் இருந்தால், எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காது, சமாளி. இல்லையென்றால், நீ கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும்.
துறை தலைவர், உன்னிடம் ஆபாசமாய் பேசுவதை பதிவு செய். துறை பணியில் எவ்வித குறைபாடும் இல்லாமல் பார்த்துக்கொள். தொடர்ந்து சீண்டினால் முதலில் வாய் வழி எச்சரிக்கை செய். அடுத்து, கல்லுாரியில் அமைந்திருக்கும் யூனியனிடம் புகார் செய்.
யூனியனிடம் புகார் செய்யும்போதே, கல்லுாரி பிரன்ஸ்பாலிடமும் புகார் செய். மகளிர் அமைப்புகளிடம் புகார் செய்தும், மேல் நடவடிக்கை எடுக்கலாம். துணை சங்கம் எதுவும் செய்யவில்லை என்றால், சென்னையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகத்திடம் நேரடியாக புகார் செய்யலாம்.
காவல்துறைக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. காவல்துறை தலையீட்டை, கல்லுாரி நிர்வாகம் விரும்பாது.
புகார் விஷயத்தில், துறையின் மற்ற ஆசிரியர்கள், ஊழியர்களின் கருத்துக்களும் கேட்கப்படும். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். துறை தலைவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர் பணி நீக்கம் செய்யப்படலாம்.
துறை தலைவருக்கு அரசியல் செல்வாக்கு அதிகம் இருந்தால், நீ வேறொரு அரசு கல்லுாரிக்கு பணி மாற்றம் செய்யப்படுவாய். இரண்டுமே பிரச்னைக்கான இருவித தீர்வுகள் தான்.
சக ஆசிரியையின் யோசனையை ஏற்று, நீ, ஓரின சேர்க்கையாளராக விரும்பாதது, உன் கண்ணியத்தையும், நேர்மையையும் காட்டுகிறது. மிக நீண்ட உன் ஆசிரியப்பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.