PUBLISHED ON : ஜூன் 12, 2011

குறும் படங்கள் இயக்கும் பாண்டியராஜன்!
மகன் பிருத்வியை வைத்து, படம் இயக்கப் போவதாக சொன்ன பாண்டியராஜன், அந்த முயற்சியை கிடப்பில் போட்டு விட்டார்; மாறாக, குறும் படங்கள் இயக்கி வருகிறார். குழந்தைகள் விழாவுக்காக, மகன் என்ற படமும், போலியோ நோய் ஒழிப்புப் பற்றி - இரு துளிகள், உடல் உறுப்பு தானம் பற்றி - அழகு, சமூக விழிப்புணர்வுக்காக - ஹெல்ப் போன்ற குறும் படங்களை இயக்கியுள்ளார். இதில், ஹெல்ப் குறும் படம் மட்டும், ஆங்கில மொழியில் உருவாகியுள்ளது. பிரேசில் நாட்டில் நடைபெறும் பட விழாவில், இப்படம் கலந்து கொள்கிறது.
— சினிமா பொன்னையா.
சினேகாவுக்கு நிறைவான புராண படங்கள்!
ஆக்ஷன், முத்தக்காட்சி, நீச்சல் உடை என்றொரு, 'டிராக்' சென்று கொண்டிருந்தாலும், புராணக் கதைகளில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் சினேகா. தற்போது, நாகார்ஜுனாவுடன், பக்த ராமதாஸ் என்ற படத்தில் நடித்திருப்பவர், மீண்டும் அவருடன் இணைந்து, இன்னொரு தெலுங்கு புராண படத்திலும் நடிக்கிறார். 'இது மாதிரி கதைகளில் நடிப்பது மனதுக்கு நிறைவாக உள்ளது...' என்கிறார். அருள் வேணும்; பொருள் வேணும்; ஆகாச வாணி துணையும் வேணும்!
— எலீசா.
முத்தக் காட்சியில் நடித்த அசின்!
இந்தி சினிமாவில், ஹம் தில் தே சுகி சனம் என்ற படத்தில் சல்மான்கான் - ஐஸ்வர்யாராய் கொடுத்த முத்தக்காட்சி இன்று வரை பாலிவுட்டில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அதே சல்மானுடன், ரெடி படத்துக்காக அசின் கொடுத்த முத்தமும், தற்போது இந்தி சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அசின் மார்க்கெட் இன்னும் உச்சத்துக்கு செல்லும் என்கின்றனர். ஆடாதது எல்லாம் ஆடி அவரைக்காயும் பறிச்சாச்சு!
— எலீசா.
தஞ்சை பெரிய கோவில் கதையில் ஒரு படம்!
கோ படத்தை அடுத்து, எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜீவா. இப்படம், தஞ்சை பெரிய கோவில் பின்னணியில் உருவாகிறது. சரித்திரக் கதை என்பதால், பெரிய பட்ஜெட்டில் அப்படத்தை இயக்க விருப்பதாக சொல்லும் ஜனநாதன், 'ஏற்கனவே, நான் இயக்கிய இயற்கை, ஈ, பேராண்மை வரிசை யில் இதுவும் வித்தியாசமான படமாக இருக்கும்...' என்கிறார்.
— சி.பொ.,
இந்திக்கு சென்ற டாப்ஸி!
தமிழில் ஹன்சிகா மோத்வானிக்கு போட்டி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட, ஆடுகளம் டாப்ஸி, வந்தான் வென்றான் படத்திற்கு பிறகு, புதிய படங்கள், 'கமிட்' ஆகாததால், இந்திக்கு சென்று விட்டார். அங்கு டேவிட் தவான் இயக்கத்தில், சாஸ்மே பதூர் என்ற படத்தில், 'கமிட்' ஆகியிருக்கும் இவருக்கு, இது வரை எந்த படத்திலும் வாங்காத அளவுக்கு கூடுதலான சம்பளமும் கிடைத்துள்ளது. ஆடி செவ்வாய் தேடி குளி; அரைத்த மஞ்சளை தேய்ச்சிக் குளி!
— எலீசா.
சந்தானத்தின் உறுதி!
வடிவேலு, விவேக், கருணாசை தொடர்ந்து, கஞ்சா கருப்புவும் ஹீரோவாகி விட்டார்; ஆனால், சந்தானம் மட்டும் இந்த விஷயத் தில் எச்சரிக்கையாக உள்ளார். 'நம்பர்-ஒன் காமெடியன் ஆவதே என் விருப்பம். அதற்காகவே முழுவீச்சில் இறங்கியுள்ளேன். ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டு, இருக்கிற மரியாதையை கெடுத்துக் கொள்ள மாட்டேன்...' என்கிறார்.
— சி.பொ.,
நயனுக்கு, இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு!
ராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தில், நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பதற்கு, ஆரம்பத் திலிருந்தே எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், அப்படத்தை ரிலீஸ் செய்யும் தியேட்டர்களுக்கு முன், போராட்டம் செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளது இந்து மக்கள் கட்சி. குறிப்பாக, பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத்தின் வாழ்க்கையில் புகுந்து, அவருக்கு துரோகம் செய்த நயன்தாரா, சீதை வேடத்தில் நடிக்க தகுதியற்றவர் என்றும் கொடி பிடித்துள்ளனர்.
— சினிமா பொன்னையா.
ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் இசைக் கல்லூரி துவங்கியிருப்பது போல் இளையராஜாவும், தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுடன் இணைந்து திருப்பதியில் ஒரு இசைப் பல்கலைக்கழகம் துவங்க உள்ளார்.
அவ்ளோதான்!
