தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வி.வி.ஐ.பி. அனுபவங்கள்! (4) - ரஜத்

வி.வி.ஐ.பி. அனுபவங்கள்! (4) - ரஜத்

வி.வி.ஐ.பி. அனுபவங்கள்! (4) - ரஜத்


PUBLISHED ON : ஜூன் 12, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வர்ம சிகிச்சை நிபுணர், எஸ்.ராஜாமணி பேட்டி!

சென்னை கத்திப்பாரா ஜங்ஷனில், பாரதத்தின் சிற்பி, முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உருவச் சிலை திறக்கப்பட்டது. அந்த சரித்திரப் புகழ் பெற்ற நிகழ்ச்சியில் பங்கு கொண்டு, தன் தாத்தாவின் உருவச் சிலையை திறந்து வைக்க, ராஜிவ், டில்லியிலிருந்து வந்திருந்தார். எம்.ஜி.ஆர்., மீது, மிகுந்த பாசமும், மரியாதையும் எப்போதும் வைத்திருந்தார் ராஜிவ்.

விழா முடிந்து, எம்.ஜி.ஆர்., வீட்டுக்குத் திரும்பிய போது, லிப்டில் ஏறாமல், மாடிப்படியில் நடந்தே ஏறினார் எம்.ஜி.ஆர்., படிகளில் ஏறும் போது, வேஷ்டி தடுக்கி விட்டது. ஆனா லும், கீழே விழாமல் சமாளித்து ஏறி விட் டார். அருகில் இருந்த எனக்கு, இக்காட்சி மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது.

எம்.ஜி.ஆருக்கு நன்றாக குணமாகி விட்டதால், டிச., 23, 1987 மாலை, 5,000 பேருக்கு சாப்பாடு போடுவதாக, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தேன். நாகர்கோவிலில் அதை நிறைவேற்ற திட்டமிட்டிருந்தேன். எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து, கிறிஸ்துமஸ் கேக் கொடுத்தேன்.

'உங்க வர்ம சிகிச்சைக்கு நல்ல எதிர்காலம் இருக்கு; உங்களுக்கு நான் ஒரு பிளான் வெச்சிருக்கேன்...' எனக் கூறினார் எம்.ஜி.ஆர்., அன்று மதியம் நான் ஊருக்கு கிளம்ப ஆயத்தமானேன். என் மனைவிக்கு உடல்நலம் சரியாக இல்லை. 'நீங்கள் இங்கேயே இருங்களேன். ஊருக்குப் போய்த்தான் ஆக வேண்டுமா?' என அவரும் கேட்டார்.

நேர்த்திக் கடனை செய்து முடிக்க, நான் போக வேண்டி இருந்தது. ரயிலில் பயணம். மணியாச்சி ரயில்வே ஸ்டேஷன் அடைந்த போது, தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி, 'சி.எம்., காலமாகி விட்டார்...' என்று சொன்னார் டிக்கெட் பரிசோதகர்; நான் நம்பவில்லை.

'பொய்... சி.எம்., நன்றாகத் தான் இருக்கிறார். நேற்று மதியம் கூட பார்த்து பேசினேன். யாரோ தவறாக கிளப்பிவிடும் வதந்தி இது...' என்றேன்.

வண்டி நெல்லை ஜங்ஷனை அடைந்தது. ஜங்ஷன் முழுவதும் ஒரே மக்கள் கூட்டம்; டாக்சி, ஆட்டோ எதுவுமே ஓடவில்லை.

ஜங்ஷனிலிருந்து எப்படி வெளியே போவது என தவித்துக் கொண்டிருந்த சமயம், 'தினமலர்' நாளிதழிலிருந்து காரை அனுப்பி, சகுந்தலா ஓட்டலில் எனக்கு ஒரு அறை, 'புக்' செய்து கொடுத்தனர்.

எப்படியாவது எம்.ஜி.ஆர்., உடலை பார்க்க வேண்டும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று துடியாய் துடித்தேன். எந்த வழியிலும் சென்னைக்கு செல்ல முடியவில்லை. மதுரை, திருவனந்தபுரத்திலிருந்து, சென்னைக்கு விமானங்கள் இயங்கவில்லை. சென்னையிலிருந்து ஏன் கிளம்பி வந்தேன் என, என்னை நானே நொந்து கொண்டன்.

இந்திய நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஒரு தலைவர், நாட்டின் பிரதமர். அத்தகைய ஒருவருக்கு மருத்துவராக பணியாற்றும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான், கனவிலும் நினைத்ததில்லை; ஆனாலும், அந்த அதிசயம் நிகழ்ந்தது.

புதுடில்லியில் டாக்டர் பஜாஜ், பிரபல மருத்துவர். நீரிழிவு நோயை குணப்படுத்துவதில் எக்ஸ்பர்ட். பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவர். அவருக்கு கழுத்து வாதம். வர்ம சிகிச்சை முறையில் அவருக்கு சிகிச்சை அளித்தேன். டாக்டர் பஜாஜே வியக்கும் வகையில், நல்ல பலனும், வலியிலிருந்து முழு நிவாரணமும் கிடைத்தது.

நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது, அவருடைய மருத்துவ நிபுணர்கள் குழுவிற்கு தலைவராக பணியாற்றியவர், டாக்டர் பஜாஜ் தான்.

நரசிம்மராவுக்கு நீண்ட காலமாக நீரிழிவு நோய் இருந்தது. டாக்டர் பஜாஜ் தான், அவருக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

நரசிம்மராவுக்கு நாள்பட்ட முதுகுதண்டு வலி பிரச்னை. அவர், ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து கொண்டவர். இப்படிப்பட்டவர்களுக்கு டிஸ்க் ப்ரோலபில் ஏற்பட்டால், அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யக் கூடாது. ஆபத்தான பின் விளைவுகள் ஏற்படும். பிரதமர் நரசிம்மராவுக்கு, ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்திருப்பதால், முதுகில் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்பது தெளிவாயிற்று. மாற்று வழியில் கிகிச்சை செய்து, அவருடைய முதுகுவலி பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாயம்.

மாறுபட்ட சிகிச்சை செய்து, பிரதமரின் முதுகு வலியை முற்றிலும் போக்கிவிட வேண்டும். டாக்டர் பஜாஜ், பிரதமருக்கு நான் சிகிச்சை அளித்தால், விரும்பிய பலன் கிடைக்கும் என்று கருதினார். என்னிடம், முதுகு வலிக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த, தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,யும், முன்னாள் பார்லிமென்டின் துணை சபாநாயகருமான தம்பித்துரையும், என் வர்ம சிகிச்சையின் சிறப்பு பற்றி நரசிம்மராவிடம் பேசியிருக்கிறார்.

மருத்துவ நிபுணர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று, என்னிடம் சிகிச்சை பெற நரசிம்மராவ் ஒப்புக் கொண்டார்.

தினமும் காலை, 6:00 மணி முதல், 8:30 மணி வரை, இரண்டரை மணி நேரம், அவருக்கு நான் பிரத்யேகமாக தயாரித்திருந்த மூலிகை எண்ணெய் தடவி, மசாஜ் செய்து, தொடர்ந்து, 21 நாள், நரசிம்மராவுக்கு சிகிச்சை அளித்தேன். என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் அது.

'தேச அளவிலும், சர்வதேச அளவிலும் அவருக்கு ஏராளமான, முக்கியமான, அரசியல் மற்றும் நிர்வாக பணிகள் இருந்தாலும், அந்த, 21 நாட்கள், டில்லியை விட்டு வேறு எங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல், வெளியே செல்வதை தவிர்த்து, டில்லியிலேயே இருந்தார்.

இந்திய நாட்டின் தலைவிதியையே நிர்ணயிக்கும் நாட்டின் பிரதமருக்கு சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. மறக்க முடியாத, பெருமைப்படக்கூடிய அனுபவம்.

சூடாக பால் வரவழைத்து கொடுத்து, குடிக்கச் சொல்வார். நான் அவருக்கு சிகிச்சை அளிக்கும் போது, தன் மொபைல் போனை ஆப் செய்து விடுவார். இல்லாவிடில், அது தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கும்.

பிரதமருக்கு வர்ம மருத்துவம் செய்து முடித்த பிறகு, மருத்துவ நிபுணர் குழுவைச் சேர்ந்த டாக்டர்கள் வந்து, அவரை தினமும் பரிசோதிப்பர்.

நரசிம்மராவ், பழகுவதற்கு இனிமையானவர். எம்.ஜி.ஆருக்கு நான் சிகிச்சை அளித்தது பற்றி, மிகுந்த ஆர்வமாக கேட்டு அறிந்தார். எம்.ஜி.ஆர்., பற்றி, மிகவும் உயர்வாக என்னிடம் பேசினார்.

தொடர்ந்து, 21 நாள் டில்லியிலேயே தங்கி, நரசிம்மராவுக்கு சிகிச்சை அளித்த பிறகு, தொடர்ந்து பல மாதங்கள், வாரம் ஒரு முறை டில்லி சென்று, அவருக்கு சிகிச்சை அளித்து வந்தேன்.

என் சிகிச்சை, அவருக்கு முழுமையாக பலன் அளித்திருக்கிறது என்பதை, மகிழ்ச்சியுடன் சொன்னார்.

என் சிகிச்சையின் பயனாக, அவருக்கு முதுகு வலி பிரச்னை முற்றிலுமாக தீர்ந்தது. அவரது இறுதி காலம் வரை, அந்த பிரச்னை மீண்டும் வரவே இல்லை.

என் சிகிச்சை குறித்து, முழு திருப்தி அடைந்திருந்தார் நரசிம்மராவ் என்பதற்கு சான்றாக, ஒரு நாள் என்னிடம், 'குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் சிங் இருவருக்கும், உங்களிடம் சிகிச்சை பெற சிபாரிசு செய்திருக்கிறேன்...' என்றார்.

அப்போது, ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மாவுக்கு, மூட்டுவாதம் இருந்தது. நடப்பதற்கு மிகவும் கஷ்டப்படும் நிலை. காலையில் பிரதமருக்கு சிகிச்சை அளித்தபின், 11:00 மணியிலிருந்து, பிற்பகல் 1:00 மணி வரை, சங்கர் தயாள் சர்மாவுக்கு, ராஷ்ட்ரபதி பவனில், வர்ம சிகிச்சை அளிப்பேன். சூடான ஜிலேபியும், தேநீரும் கொடுத்து, உபசரிப்பார். சிலசமயம், அவரது மனைவி விமலா சர்மாவுக்கும் சிகிச்சை செய்வதுண்டு. நேரமாகி விட்டால், அங்கேயே மதிய உணவு சாப்பிடச் சொல்வார்.

நரசிம்மராவ் சிபாரிசு செய்து, நான் சிகிச்சை அளித்த மற்றொரு, வி.வி.ஐ.பி., வெளிநாட்டு விவகார அமைச்சர் தினேஷ் சிங். அவருக்கு தீவிரமான பக்கவாதம் மற்றும் பேச முடியாத நிலை. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் வீதம், ஏழு நாட்கள் தீவிர சிகிச்சை கொடுத்தேன். ஒரு வார முடிவிலேயே, அவர் இழந்த பேசும் சக்தி, மீண்டும் கிடைத்து விட்டது. உடல்நலக் குறைவு காரணமாக எங்கும் பயணம் செய்யாமல் இருந்த தினேஷ் சிங், வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய ஆரம்பித்தார். தொடர் சிகிச்சை மூலம், பக்கவாதமும் குணமாகி விட்டது.

மூட்டு வலிக்காக, அப்போதைய, ஜவுளித் துறை அமைச்சர் வெங்கடசாமிக்கும், முதுகு வலிக்காக, அப்போதைய உள்துறை ராஜாங்க அமைச்சர் ராஜேஷ் பைலட்டுக்கும், அப்போதைய தகவல் தொடர்பு துறை அமைச்சர் சுக்ராமிற்கும், சிகிச்சை அளித்து, அவர்கள் முழு நிவாரணம் பெற உதவினேன்.

அப்போதைய சுகாதார அமைச்சர் சங்கரானந்த் மற்றும் அப்போதைய பார்லிமென்ட சபாநாயகர் பல்ராம் ஜாக்கர் ஆகியோருக்கும், தொடர்ந்து சிகிச்சை அளித்திருக்கிறேன்.

ஜனாதிபதியாக இருந்த கே.ஆர்.நாராயணனுக்கும் சிகிச்சை அளித்திருக்கிறேன். ஜனாதிபதியாக அவரது பதவிக்காலம் முடிந்த பிறகு நாராயணன், என்னிடம் சிகிச்சை எடுக்க, சென்னைக்கு வந்து, சென்னை கிண்டி ராஜ்பவனில், ஒரு மாதம் தங்கினார்.

காலை, 10:00 மணி முதல், 12:30 வரை, பிறகு மாலை, 4:30 முதல், 6:30 மணி வரை, கிட்டத் தட்ட, 4:30 மணி நேரம், தினமும் அவருக்கு பிரத்யேக சிகிச்சை அளித்தேன்.

பத்து நாட்களிலேயே, நல்ல முன்னேற்றம் தெரிந்தது.

ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு, முழுமையான முன்னேற்றம் தெரிந்தது. நிற்க, நடக்க கஷ்டப்பட்டவர், ஒரு ஆளை பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து வந்தவர், தானே நடந்து செல்லும் அளவு முன்னேற்றம் கண்டார். கே.ஆர்.நாராயணனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. என் சிகிச்சையின் மீது பூரண திருப்தி.

என்னிடம் சிகிச்சை பெற்ற பிறகு, கே.ஆர்.நாராயணன் டில்லிக்கு திரும்பிச் சென்றார். பின் அங்கிருந்து, சைனா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு, சொந்த முறையில் சுற்றுப்பயணம் செய்தார்.

ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரை பலருக்கு சிகிச்சை அளித்து, மீண்டும் உடல்நலம் பெற காரணமாக நான் செயல்பட்டிருந்தாலும், சிகிச்சை அளித்ததற்கு, அவர்கள் யாரிடமும், ஒரு ரூபாய் கூட பெற்றுக் கொள்ளவில்லை என்பது, எனக்கு நிறைவை அளிக்கிறது.

தொலைபேசி எண் : 044 - 24911111

rajavarma—dr@yahoo.co.in

— முற்றும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us