
காமெடியனின் மனக்கண்ணில், நயன்தாரா!
நயன்தாராவை வைத்து, மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கிய, காமெடியன் ஆர்.ஜே.பாலாஜி, மீண்டும் கதாநாயகியை மையமாக வைத்து, அதிரடியான கதையை தயார் செய்து வருகிறார். 'இந்த படத்தின் கதையை எழுத, நான் பேனா - பேப்பருடன் அமர்ந்தாலே, நயன்தாரா தான், என் மனக்கண்ணில் வந்து நிற்கிறார். அதனால், புதிய படத்தில், வேறு நடிகையை நடிக்க வைக்க திட்டமிட்ட நான், மீண்டும் நயன்தாராவையே நடிக்க வைக்க முடிவெடுத்து விட்டேன். அந்த அளவுக்கு அழுத்தமான, 'பர்பாமென்ஸ்' மூலம், என் மனதில் ஆழப்பதிந்து விட்டார்...' என்று, நயன்தாராவின் நடிப்பை, பக்கம் பக்கமாக அள்ளி விடுகிறார்.
சினிமா பொன்னையா
யோகா டீச்சரான, வரலட்சுமி!
நடிகை அனுஷ்காவைப் போலவே யோகா செய்வதில் சூரப்புலியாக இருக்கிறார், வரலட்சுமி. 'ஜிம்மிற்கு சென்று, வியர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சி செய்வதை விட, யோகா செய்வது உடம்புக்கும், மனதுக்கும் ஆரோக்கியமானது. தினமும் நான் தவறாமல் யோகா செய்து வருகிறேன். அதனால் தான், 'ஆக்டீவாக' இருக்கிறேன்...' என்று சொல்லி, தன் சக நடிகர் - நடிகையருக்கும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா சொல்லிக் கொடுக்கிறார். இதனால், கோலிவுட்டில் வரலட்சுமியை, யோகா டீச்சர் என்றே அழைக்கத் துவங்கி விட்டனர். கற்ற வித்தையைக் காய்ச்சி குடிக்கிறதைப் போல!
எலீசா
'குட் புக்'கில், கதாநாயகியர்!
அஜீத்தைப் பொறுத்தவரை, படப்பிடிப்புக்கு செல்வதோடு சரி, அதன்பிறகு, தன் படங்களின் எந்த விழாக்களிலும் பங்கேற்க மாட்டார். அதேசமயம், தன்னுடன் பணியாற்றும் அனைவரிடத்திலும் நட்பை தொடர்கிறார். குறிப்பாக, தன் படங்களில், 'ஹீரோயினி'யாக நடிக்கும் நடிகையர், திருமணமாகி செட்டிலான பிறகும் கூட, அதே பழைய நட்பை கடைப்பிடிக்கிறார், அஜீத். அந்த வகையில், அவரது ஆரம்ப கால நாயகியர்களான சங்கவி, ஸ்வாதி துவங்கி, இப்போதைய த்ரிஷா, நயன்தாரா வரை, அஜீத்தின், 'குட் புக்'கில் இடம்பிடித்து இருக்கின்றனர்.
சி.பொ.,
புதுமையான வில்லன் வேடம்!
ஜிகர்தண்டா படத்தில், வில்லனாக நடித்து, தேசிய விருது பெற்ற, பாபி சிம்ஹா, அதன்பிறகு, 'ஹீரோ' அவதாரம் எடுத்தது, அவருக்கு போதாத காலமாகி விட்டது. 'ஹீரோ'வாக நடித்த எந்த படமும் வெற்றி பெறவில்லை. அதையடுத்து, சாமி - 2வில் இருந்து மறுபடியும் வில்லன் வேஷம் கட்டி வந்தபோதும், பழைய, 'ரீச்' இன்னமும் கிடைக்கவில்லை. அதனால், வழக்கமான வில்லனாக நடித்தால், தன் வித்தியாசமான வில்லன் என்ற, 'இமேஜ்' காலியாகி விடும் என்று, 'வில்லன் வேடமென்றாலும், இதுவரை யாரும் நடிக்காத, ஒரு மாறுபட்ட வில்லனாக மட்டுமே நடிக்க விரும்புகிறேன். அமெரிக்கன் மற்றும் கொரியன் படங்களில் வரும் வித்தியாசமான வில்லன், 'கெட் - அப்'களை, இங்குள்ள இயக்குனர்களின் கவனத்துக்கு கொண்டு வந்து, இதுபோன்று, தமிழ்ப்படங்களிலும் என்னை வித்தியாசப்படுத்திக் காட்டுங்கள்...' என்று வலியுறுத்துகிறார்.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* தனக்கு ஒரு வேலை ஆக வேண்டுமென்றால், அவர் எத்தனை பெரிய நடிகராக இருந்தாலும் தட்டித்துாக்கி விடுவார், டார்லிங் நடிகை. அப்படித்தான் தொடர்ந்து அவர், பட வாய்ப்புகளை பெற்று வந்தார். இப்போது, திடீரென்று மார்க்கெட் குடைசாய்ந்த நிலையில், மறுபடியும் சில செழிப்பான, 'ஹீரோ'களுக்கு, 'ரூட்' போட்டு வருகிறார். முக்கியமாக, அம்மணிக்கு, 'சரக்கு பார்ட்டி' வைப்பதெல்லாம் டீ சாப்பிடுவது போல் என்பதால், சில இளவட்ட, 'ஹீரோ'களை தட்டித்துாக்கும் வேலைகளில் மறுபடியும் இறங்கியிருக்கிறார். அந்த வகையில், தற்போது அம்மணியின், 'சரக்கு பார்ட்டி'க்கு, சில இரண்டாம் தட்டு நடிகர்கள், 'என்ட்ரி' கொடுத்து வருவதாக, கோலிவுட்டில், 'கிசுகிசு'க்கின்றனர்.
'நம் கல்லுாரி, 'ஹாக்கி டீமில்' இருக்கும், நிக்கி கல்ராணின்ற ஒரு இந்திக்கார பொண்ணை தெரியுமா?'
'கேள்விப்பட்டிருக்கிறேன். அவளுக்கென்ன...'
'பிரமாதமான ஆட்டக்காரியாக இல்லா விட்டாலும், முன்பு ஒருமுறை, கல்லுாரிகளுக்கு இடையே நடந்த, 'மேட்ச்'சில், வெற்றி பெற தேவையான முக்கியமான ஒரு, 'கோல்' அடித்து, கல்லுாரி மானத்தையும், தன் பெயரையும் காப்பாற்றிக் கொண்டாள். அதன்பின் நடந்த எந்த, 'மேட்ச்'சிலும் சொல்லிக்கொள்ளும்படி எதையும் சாதிக்கல. எங்கே, 'டீமில்' இருந்து நீக்கிட போறாங்களோன்னு, 'கோச்' மற்றும் பிரின்ஸ்பாலுக்கு அப்பப்ப சரக்கு வாங்கிக் கொடுத்து, தன் இடத்தை, தக்க வைத்துக் கொண்டாள்.
'இப்ப, பழைய, 'கோச்' மாறி, புதிதாக ஒருவர் வந்திருக்கிறார். பிரின்ஸ்பாலும் பணி ஓய்வு பெற்று விட்டார். புது பிரின்ஸ்பால் மற்றும், 'கோச்'சுக்கு, அதே பழைய, 'டெக்னிக்'கை பயன்படுத்தி, தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறாள்...' என, இரு தோழியர் பேசிக் கொண்டனர்.
சினி துளிகள்!
* டார்லிங் என்ற, 'ஹாரர்' படம், தனக்கு, 'சூப்பர் ஹிட்'டாக அமைந்ததால், மீண்டும் மாறுபட்ட, 'ஹாரர்' கதைகளில் நடிக்க, சில அமானுஷ்ய பட இயக்குனர்களை சந்தித்து பேசி வருகிறார், நிக்கி கல்ராணி.
* மகேஷ்பாபுவுடன் நடித்து வரும் படம், 'ஹிட்' அடித்தால், ராஷ்மிகாவைப் போன்று, ஐதராபாத்தில் நிரந்தரமாக முகாமிட, கீர்த்தி சுரேஷும் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
அவ்ளோதான்!