PUBLISHED ON : ஜூன் 19, 2011

பாபர் மசூதி பின்னணி படம்!
பாபர் மசூதி இடிப்பு பின்னணியில், இந்தியில் ஒரு படம் தயாராகிறது. அமீர்கான் நடிக்க மறுத்து விட்ட இப்படத்தில், இப்போது அஜய் தேவ்கன் நடிக்க சம்மதித்துள்ளார். சர்ச்சைக்குரிய இப்படத்தை, பால் தாக்கரேயின் மருமகள், ஸ்மிதா தாக்கரே தயாரிக்கிறார். இந்தியில் உருவாகும் இப்படம், இந்தியாவிலுள்ள பல மொழிகளுக்கும், 'டப்' ஆக இருக்கிறது.
— சினிமா பொன்னையா.
தமன்னா அதிரடி முடிவு!
முத்தக்காட்சி என்றாலே காத தூரத்துக்கு அப்பால் ஓடிய தமன்னா, இப்போது, உதட்டு முத்தக் காட்சியில் நடிக்கவும் தயாராகி விட்டார்; அதேசமயம், ஒன்று முதல், இரண்டு கோடி ரூபாய் வரை கூலி கேட்கிறார். தமன்னாவின் இந்த பேச்சு, படாதிபதிகளுக்கு எரிச்சல் கொடுத்தாலும், அவரது இந்த மாற்றம் இளவட்ட ஹீரோக்கள் மத்தியில், 'கிளுகிளு'ப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைமுகமாக தமன்னாவுக்கு சிபாரிசும் செய்து வருகின்றனர். ஆளை ஏய்க்குமாம் நரி; அதை ஏய்க்குமாம் ஒற்றைக்கால் நண்டு!
— எலீசா.
இசை ஆர்வத்தில் இலியானா!
நடிகை இலியானா நல்ல பாடகி. நடிப்பில் பிசியாக இருப்பதால் சினிமாவில் பாட முயற்சி எடுக்கவில்லை என்கிறார். அதேசமயம், எதிர்காலத்தில் சொந்தமாகவே இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற ஆசை வைத்திருக்கிறார். அதில், அவர் தான் முக்கிய பாடகியாக இடம்பெற விரும்புவதாகவும் கூறுகிறார். ஆடிய காலும், பாடிய நாவும் சும்மா இராது!
— எலீசா.
தக்காளி சீனிவாசன் இயக்கும் திகில் படம்!
பிரபு நடித்த, நாளைய மனிதன், மனசுக்குள் மத்தாப்பூ, இவர்கள் வருங்காலத் தூண்கள் உட்பட பல படங்களை தயாரித்தவர் தக்காளி சீனிவாசன். இவர், தற்போது, அடுத்தது என்ற பெயரில், ஒரு படத்தை இயக்குகிறார். பரபரப்பான திகில் கதையில் உருவா கும் இப்படத்தில், நாசர், இளவரசு, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய வேடங் களில் நடிக்கின்றனர்.
— சி.பொ.,
பரதநாட்டிய ஆசிரியை சரண்யா மோகன்!
வெண்ணிலா கபடிக்குழு, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களில், ஹீரோயினாக நடித்த போதும், சரண்யா மோகனை அடுத்தடுத்து யாரும் கதாநாயகி கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. விஜய்யின், வேலாயுதம் படத்தில் தங்கையாக நடிப்பதை அறிந்து, தொடர்ந்து தங்கை வேடம் தரவே முன் வருகின்றனர். இதனால், சினிமா மீதான கவனத்தை குறைத்து, பரத நாட்டியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். எதிர்காலத்தில் வெளிநாடுகளில் பரதநாட்டிய பள்ளிகள் துவங்கும் எண்ணமும் இவருக்கு உள்ளதாக கூறுகிறார். ஆடி ஓய்ந்தால் அங்காடிக்கு வர வேண்டும்!
— எலீசா.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதியளித்த மல்லிகா!
ஹாலிவுட் ரேஞ்சுக்கு கொடி நாட்டியுள்ள மல்லிகா ஷெராவத், இளகின மனம் கொண்டவர். அதனால், அடிக்கடி சமூக சேவைகளிலும் பங்களித்து வரும் இவர், சமீபத்தில் தான் நடித்த ஒரு ஹாலிவுட் படத்தின் மொத்த சம்பளத்தையும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த சேதி, ஹாலிவுட் சினிமா வட்டாரங்களில் இவரது, 'இமேஜை' இன்னும் உயர்த்தியுள்ளது.
— எலீசா.
விஜய் கட்சியில் கவர்ச்சி நடிகை!
கவர்ச்சி நடிகை சோனா, விஜய்யின் தீவிர ரசிகையாம். அதன் காரணமாக, விரைவிலேயே விஜய்யின் மக்கள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ளப் போவதாக சொல்கிறார். 'எதிர்காலத்தில், விஜய் கட்சி தேர்தலில் இறங்கும் போது, பெரிய பிரசார பீரங்கியாகவும் விளங்குவேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா.
