தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உயிரே உனக்காக... (28)

உயிரே உனக்காக... (28)

உயிரே உனக்காக... (28)


PUBLISHED ON : ஜூன் 19, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 19, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை:

கவிதாவின் மாஜி கணவன் ஆண்டர்சன் ஏற்படுத்திய குழப்பம் மற்றும் நரேன் - மதுரிமா இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, விவாகரத்து வரை கொண்டு சென்றது. மதுரிமா மீது தான் கொண்டுள்ள அன்பையும், காதலையும் எப்படி நிரூபிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தான் நரேன். இந்த டென்ஷனில் இருந்து விடுபட அலுவலகம் சென்ற நரேனை, அவனது சி.இ.ஓ., வைத்தீஸ்வரன் தொடர்பு கொண்டு விவாகரத்து விஷயத்தைப் பற்றி விசாரித்தார் —

நரேன், யோசனையுடன் வைத்தீஸ்வரனின் கேபினுக்குள் நுழைந்தான். இவனது வருகைக்காக காத்திருந்த வைத்தீஸ்வரன், நரேனைப் பார்த்தவுடன் அவரது இதழ்களில் லேசான புன்னகை அரும்பியது. அந்த புன்னகைக்குப் பின் ஒளிந்திருக்கும் அவரது உண்மையான மனநிலையை புரிந்து கொள்ள முடியாதவனாய் இருந்தான் நரேன்.

''வா நரேன்... உட்கார். என்ன சாப்பிடுகிறாய்; காபியா, டீயா?''

நரேனுக்கும், சூடாக எதையாவது குடிக்க வேண்டும் போல் இருந்தது.

''குட் மார்னிங் சார்... உங்க ஆஸ்திரேலிய பயணம் எப்படி இருந்தது?''

''நரேன்... இதுதான் உங்கிட்ட இருக்கும் கெட்ட பழக்கம்.''

''கெட்ட பழக்கமா... எதை சொல்றீங்க சார்?''

''நீ என்ன குடிக்கறேன்னு நான் உன்னை கேள்வி கேட்டேன்; நீ, என் கேள்விக்கு பதில் சொல்லாமல், என்னை கேள்வி கேக்கற.''

''சாரி சார்... எனக்கு காபி.''

வைத்தீஸ்வரன் காலிங்பெல்லை அழுத்த, அவசர, அவசரமாக ஒரு பணியாள் உள்ளே வந்ததும், ''சூடா ரெண்டு கப் காபி... ஒண்ணு சர்க்கரை இல்லாமல். நரேன்... உனக்கு எதுவும் சுகர் பிரச்னை இல்லையே?''

நரேனோடு, அவர் எத்தனையோ முறை காபியும், டீயுமாக குடித்திருந்தும், வேண்டுமென்றே அந்த கேள்வியை அவனிடம் கேட்டார் வைத்தீஸ்வரன்.

''எனக்கு சுகர் பிராப்ளம் இல்லேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியுமே!''

''ஓ.கே., ஒரு காபி வித் சுகர்; ஒரு காபி வித் -அவுட் சுகர்.''

காபி கொண்டு வர வெளியே போனான் பணியாள்.

''நரேன்... நீ சரியா சொன்னே... உனக்கு சர்க்கரை நோய் இல்லேன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா, ஒரு விஷயம்... எந்த பிரச்னை எப்ப வரும், எப்படி வரும்ங்றது நாம யாருக்குமே தெரியாம இருக்கறதுதான் மிகப் பெரிய பிரச்னையே!''

வைத்தீஸ்வரன் எது பற்றி குறிப்பிடுகிறார் என்பது நரேனுக்கு நன்றாகவே புரிந்தது.

''என்ன நரேன்... எதையோ தீவிரமாக யோசிக்கிறாய்?''

''ஒன்றுமில்லை சார்... மதுரிமா உங்களுக்கு போன் செய்ததாக...''

''ஒரு சின்ன திருத்தம்... மதுரிமா எனக்கு போன் செய்யவில்லை; ஆனால், மதுரிமா என்னோடு போனில் பேசினாள்.''

அவர் சொல்வது நரேனுக்கு குழப்பமாக இருந்தது. போன் செய்யாமல் ஒருவரால் எப்படி போனில் பேச முடியும். அவனது சிந்தனையைப் புரிந்து கொண்டவரைப் போல பேசினார் வைத்தீஸ்வரன்...

''நரேன்... உனக்கு என்னோட நண்பர் ரங்கராஜனை தெரியுமில்ல.''

''நல்லாத் தெரியும் சார். தஞ்சாவூர்க்காரர்; வக்கீல். உங்களோட நாலஞ்சு தடவை பார்த்திருக்கேன். எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கீங்க. அவருக்கு என்னாச்சு சார்?''

''அவருக்கு ஒண்ணும் ஆயிடல. காவேரி தண்ணி குடிச்சு வளர்ந்துட்டு, இப்ப அமெரிக்க தண்ணி அடிச்சுக்கிட்டிருக்கற கிரீன் கார்டு வெச்சிருக்கற வக்கீல். காலம்பற அவர் எனக்கு போன் பண்ணாரு...''

''என்ன விஷயமா சார்?''

''உன்னோட விவாகரத்து விஷயமா... மதுரிமாவும், அவளோட அம்மாவும், அது விஷயமாக அவரைப் போய்ப் பார்த்திருக்காங்க. மதுரிமா யாருன்னு தெரிஞ்சதும் எங்கிட்ட பேசினாரு; அப்பதான் மதுரிமாகிட்ட நான் பேசினேன்.''

வைத்தீஸ்வரன் சொன்னதைக் கேட்டு, மவுனமாக அமர்ந்திருந்தான் நரேன். இவரோடு மதுரிமா விவாகரத்து விஷயமாகப் பேசியதன் பின்னணியை நரேனால் யூகிக்க முடிந்தது.

''நரேன்... ஒரு விஷயத்தை கவனிச்சியா? என்ன இருந்தாலும், இந்த மண் வாசனைங்கறது நல்ல விஷயம்தான். நம்மூர்க்காரங்களுக்கு ஒரு பிரச்னை வேற மண்ணுல வரும் போது, நம்பள யோசிக்க வெச்சுடுது.''

''ரங்கராஜன் என்ன சொன்னார் சார்?''

''உனக்காக ரொம்பவும் வருத்தப்பட்டார். 'இந்த சின்ன வயசுலேயே இப்படி வாழ்க்கையை நரகமாக்கி, நீ பெரிசா எதை சாதிக்கப் போறே...'ன்னு கேட்டாரு.''

ரங்கராஜன் சொன்னதாக, வைத்தீஸ்வரன் சொன்னது, நரேனை கோபப்படுத்தியது.

அவன் நினைத்துக் கூடப் பார்க்காத ஒன்றை, தேவையில்லாமல் பிரச்னையாக்கி, இப்படி மற்றவர்களைப் பேச வைத்து விட்டாளே என்று, மதுரிமாவின் மீது கோபம் வந்தது.

தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசினான் நரேன்...

''சார்... உண்மை என்னன்னு புரிஞ்சுக்காம, நூறு பேர், நூறு விதமா பேசலாம்; கேள்வி கேட்கலாம். அவர் கேட்டது இருக்கட்டும்... மது என்ன சொன்னாளாம்?''

ஒரு வக்கீலைத் தேடிப் போய், அவன் சகதர்மினி அவனைப் பற்றி என்னவெல்லாம் சொல்லி இருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம், அவனது கேள்வியில் இருப்பதை வைத்தீஸ்வரனால் உணர முடிந்தது.

''டாக்டர்கிட்டேயும், வக்கீல்கிட்டேயும் உண்மைகளை மறைக்கக் கூடாதுன்னு சொல்வாங்க இல்ல... மதுரிமாவும் உன்னைப் பற்றிய உண்மைகளை ரங்கராஜன்கிட்ட சொல்லி இருக்கா.''

''என்னை பற்றின உண்மைகளா... என்ன சார் அது?''

''உன்னைப் பற்றிய உண்மைகளை, உன் மனைவி வக்கீலிடம் சொன்னது இருக்கட்டும். அது, என்னவென்று உன்னால் சொல்ல முடியுமா?''

''என்னைப் பற்றி நீங்கள் என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்களோ, அதுதான் என்னைப் பற்றிய உண்மைகள். நான் எதையும், யாரிடமும் மறைத்து வாழ்வதில்லை சார்; நான் ஒரு திறந்த புத்தகம்.''

நரேன் சொன்னதைக் கேட்டு, வாய்விட்டு சிரித்தார் வைத்தீஸ்வரன்.

''சாரி... இதை நான் ஏற்க மறுக்கிறேன். எந்த ஒரு மனிதனுடைய வாழ்க்கையுமே ஒரு திறந்த புத்தகமல்ல. நிச்சயம் பதிப்புக்கு வராத ஒரு சில பக்கங்கள் எல்லாரது வாழ்க்கையிலும் இருக்கும்.''

''நாம் எல்லாரும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றா சொல்கிறீர்கள்?''

''நிச்சயமாக... உடலின் வாழ்க்கை வெளிப்படையானது... ஒழுக்கம், பண்பாடு, சட்டம் என்ற பல விஷயங்களுக்கு அது கட்டுப்பட்டது. ஆனால், ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் நிகழ்ந்து கொண்டிருக்கிற வானவில்லின் வர்ணஜால வாழ்க்கை வேறு,'' என்று சொல்லிவிட்டு, அவர் மனசுக்குள் ரசிப்பவராய் மெல்ல புன்னகைத்தார் வைத்தீஸ்வரன்.

''சார்... இப்படி பொதுவான விஷயங்களை நம் வாழ்நாள் முழுக்க நம்மால் பட்டிமன்றம் போட்டு பேசிக் கொண்டிருக்க முடியும். என் இப்போதைய பிரச்னை இதுவல்ல. மது, என்னைப் பற்றிய என்ன உண்மைகளைச் சொன்னாள்?''

நரேனின் சிந்தனை, மதுவின் எண்ணத்தை அறிந்து கொள்வதிலேயே குறியாக இருந்தது. ஆனால், மது என்ன சொன்னாள் என்பதை அத்தனை சுலபத்தில் சொல்லி விடாமல், சுற்றி வளைத்தே பேசிக் கொண்டிருந்தார் வைத்தீஸ்வரன். அது, நரேனுக்கு சற்று எரிச்சலைக் கிளப்பியது.

''நரேன்... உன்னைப் பற்றி, உன் மனைவி மதுரிமாவிற்குள் சந்தேக நிழல்கள் படர ஆரம்பித்து விட்டன.''

''சார்... நீங்களே சொல்கிறீர்கள்; அவை நிழல்கள் என்று.''

''நிஜம் இல்லாமல், நிழல் எப்படி விழும்?''

வைத்தீஸ்வரனின் இந்தக் கேள்வி, நரேனை மேலும் கோபப்படுத்தியது. கொஞ்சம் விட்டால் மதுரிமாவிற்கு சாதகமாகவும், அவனுக்கு எதிராகவும் இவரே கோர்ட்டுக்கு வந்து, சாட்சி சொல்ற மாதிரி இருந்தது அவரது பேச்சு.

''நிஜம் என்று நீங்கள் எதை சொல்கிறீர்கள் சார்?''

''உன் மனசுக்குள் எது நிழலாக விழுந்திருக்கிறதோ அதைத்தான் சொல்கிறேன். உனக்கும், யாரோ ஏர் ஹோஸ்டஸ் கவிதாவுக்கும் பழக்கமாமே... நிஜமாகவா?''

வைத்தீஸ்வரனின் இந்தக் கேள்வியில் லேசான குறும்பு தெரிந்தது.

''ஏர் ஹோஸ்டஸ் கவிதா மட்டுமல்ல... இன்னும் நிறைய பெண்களோடு நான் பழகுகிறேன். இப்போது அதற்கு என்ன?''

''பழக்கம் என்பது பொதுவான ஒரு வார்த்தை. பழகும் தன்மையையும், நபரையும் பொறுத்து அது வேறு, வேறு அர்த்தங்களைக் கொண்டு விடும்.''

''என்னைப் பொறுத்தவரையில் அதற்கு ஒரே அர்த்தம்தான். நட்பு என்ற ஒன்றுதான். மற்றவர்கள் அதை வேறு மாதிரியாகப் புரிந்து கொண்டால் அதற்கு நானா பொறுப்பு?''

''மற்றவர்கள் வரிசையில் மதுரிமாவை நீ எப்படி சேர்க்கலாம்? அவள் உன் மனைவி. எந்த ஒரு ஆணையும், மற்றவர் பார்க்கிற கோணம் வேறு; அவன் மனைவியின் பார்வை வேறு.''

''என் வாதமும் அதுதான் சார்... கணவனை மற்றவர்களைக் காட்டிலும், மனைவி சரியாகப் புரிந்து கொள்ள வேண்டாமா... எதற்காக வீணாக அவன் மேல் சந்தேகப்பட வேண்டும்?''

''அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.''

''என்ன பெரிய காரணம்?''

''அந்த கணவன் மூலமாக மட்டுமே அவள் அடைகிற விஷயம் அது. அவனையும், அவளையும் காலத்திற்கும் ஒரே கட்டுக்குள் கட்டிப் பிணைத்து அவள் நினைத்து, நினைத்து சந்தோஷிக்கிற விஷயம்.''

''சரி... சந்தோஷமாய் இருந்துவிட்டுப் போக வேண்டியதுதானே...''

''அதெப்படி... அந்த சந்தோஷம் தனக்கு மட்டுமே சொந்தம் என்பதுதானே நம் பெண்களின் சித்தாந்தம். அதை, அவள் விட்டுக் கொடுக்கவோ, வேறு எந்த பெண்ணுடனும் பகிர்ந்து கொள்ளவோ ஒரு போதும் விரும்புவதில்லை.''

''நான் அப்படி ஒரு தவறை செய்யும் பட்சத்தில், நீங்கள் சொல்வது சரி. எந்த தவறுமே செய்யாமல், 'பொசசிவ்னஸ்' என்பதையே தங்கள் பிறவிக் குணமாக்கி, கணவனை தண்டிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம் சார்?''

''நீ சொல்வதெல்லாம் சரி... இது, எனக்கும் தெரிந்த விஷயம்தான். இந்த விஷயத்தில் வாழ்க்கை சந்தோஷமாக அமைய ஒரே ஒரு வழிதான் நரேன்.''

''என்ன வழி சார்?''

''நீ எதிர்பார்க்கிற பெரிய, பெரிய விஷயங்களுக்காக மதுரிமா தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்க்காதே. மாறாக, மதுரிமாவின் சின்னச் சின்ன ஆசைகளுக்கு ஏற்ப, நீ உன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்.''

''நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டுமா? எதில், எப்படி?''

''மதுரிமாவுக்கு பிடிக்காத விஷயங்களை செய்யாதே. அவ்வளவுதான்.''

''மதுரிமாவுக்கு எது பிடிக்கவில்லை?''

''இதென்ன புரியாத மாதிரி ஒரு கேள்வி... நீ அந்த ஏர் ஹோஸ்டஸ் கவிதாவுடன் பழகுவது அவளுக்குப் பிடிக்கவில்லை.''

''அவளுடன் பழுகுவது தவறா?''

''இன்னும் சொல்லப் போனால், கவிதாவைப் பார்ப்பதே தவறு என்ற நிலைமைக்கு, மதுரிமாவைக் கொண்டு, போய் விட்டாய்.''

''சரி... நான் கவிதாவை பார்ப்பதையோ, பழகுவதையோ நிறுத்திக் கொண்டால், எல்லாம் சரியாகி விடுமா? பார்ப்பதையும், பழகுவதையும் தவிர்த்து நான் எனக்குள் கவிதாவைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டால்...''

''இதைத்தானே நான் முதலிலேயே சொன்னேன். நீ கூட இரட்டை வாழ்க்கை என்று புதுசா ஒரு விளக்கம் கொடுத்தாயே... உடம்பால் ஒரு வாழ்க்கை; மனசால் ஒரு வாழ்க்கை. ஒரு உண்மையை சொல்லட்டுமா நரேன்?''

''சொல்லுங்கள்...''

''நம்ம பெண்களைப் பொறுத்தவரையில், அவங்களுக்குத் தெரியாம நாம் மனசளவுல எப்படி வாழ்ந்துகிட்டு இருந்தாலும், அதைபற்றி அவங்க கவலைப்பட்டு, ஆர்ப்பாட்டம் பண்றது இல்ல. ஆனா...''

வைத்தீஸ்வரன் முடிப்பதற்கும் முன்பாக குறுக்கிட்டான் நரேன்...

''சார்... நீங்கள் சொல்றது படு அயோக்கியத்தனமா இல்லை. நம்பள நல்லவங்கன்னு நம்பிக்கிட்டிருக்கற பெண்களை நாம ஏமாத்தற மாதிரி இல்ல?''

''தப்புத்தான்... நானும், அது சரின்னு சொல்லல. ஆனா, நடைமுறையில் அது ரொம்பவும் சாத்தியம் இல்லாத ஒண்ணா இருக்கும்.''

''சரி... மதுரிமா என்ன முடிவுக்கு வந்திருக்கா. ரங்கராஜன் என்ன சொன்னார்?''

''மதுரிமா கொஞ்ச நாளைக்கு உன்னைப் பிரிஞ்சு வாழணும்ன்னு ஆசைப்படுறா.''

''அதெப்படி... கொஞ்ச நாளைக்குக் பிரிஞ்சு வாழறது? அப்புறம், எல்லாத்தையும் மறந்துட்டு, மறுபடியும் ஒண்ணா சேர்ந்துக்கறதா. நடக்கற விஷயமா இது?''

''ஏன் முடியாது... தாராளமா மறுபடியும் சேர்ந்து வாழ முடியும். சொல்லப் போனா முன் இருந்ததைவிட இன்னும் சந்தோஷமா கூட வாழலாம்.''

''எப்படி சார் முடியும்... அந்த பழைய நினைப்பு... பிரிஞ்சு வாழ்ந்தது மறுபடியும், மறுபடியும் ஞாபகத்துல வந்து இம்சைதான் பண்ணும்.''

''எந்த விஷயத்தையுமே ரெண்டு விதமா புரிஞ்சுக்கலாம் - பாசிட்டிவ், நெகட்டிவ். நீ நெகட்டிவா பாக்குற; நான் பாசிட்டிவா சொல்றேன். அந்த ரெண்டு பேருக்கு இடையில வந்த பிரிவு, அவுங்களுக்கு எத்தனையோ நல்ல விஷயங்களை உணர்த்தும். இனிமேல் பிரியவே கூடாதுங்கற ஒரு நெருக்கத்துக்கு கொண்டு போய் சந்தோஷத்தை அதிகப்படுத்தலாம்.''

வைத்தீஸ்வரன் பேசுவதில் முதலில் கோபப்பட்ட நரேன், அவர் வாழ்க்கை பற்றி பேச, பேச அவரைப் பற்றி பெருமையாகவே உணர்ந்தான்.

'வாழ்க்கைப் பற்றி எத்தனை யோசித்திருக்கிறார் இந்த மனிதர். நானும், மதுரிமாவும் வாழ்க்கையை, இவர் போல் சிந்தித்துப் பார்க்கவில்லை. வெறும், ஆண் - பெண் சம்பந்தப்பட்ட சலனங்களோடு எங்கள் சிந்தனையை குறுக்கிக் கொண்டோம். வாழ்க்கை வான் அளவிற்கு உயர்ந்தது. அனைவருக்கும் அத்தனை சுலபத்தில் வசப்படுவதில்லை.'

''சார்... மதுரிமாவை, என் உயிரினும் மேலாக நான் நேசிக்கிறேன். அவள் என்னைப் போய்...''

சொல்ல வந்ததை முடிக்க முடியாமல், நரேனுக்குத் தொண்டையை அடைத்தது.

அவன் கண்களில் லேசாக நீர்த்துளிகள் கோர்ப்பதை கவனித்தார் வைத்தீஸ்வரன்.

''கூல் டவுண் மை டியர் பாய்... உன் நிலைமை எனக்கு நன்றாகவே புரிகிறது; ஆனால், உன்னை, நீ மதுரிமாவுக்கு சரியாகப் புரிய வைக்கத் தவறி விட்டாய். அதை மட்டும் நீ செய்துவிட்டு அதன் பிறகு நீ நூறு பெண்களோடு பழகினாலும் மதுரிமா உன்னை நிச்சயம் தவறாகப் பார்த்திருக்க மாட்டாள்.''

''என்னை இப்போது என்ன செய்யச் சொல்கிறீர்கள்?''

''மதுரிமாவை நீ பிரிந்திருப்பதன் மூலம், உனக்கு, அவளை உணர்த்தப் பார்க்கிறாள். இந்தப் பிரிவின் மூலம் அவளுக்கு, நீ உன்னை உணர்த்தப் பார்.''

''அதைத்தான் சார் கேட்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?''

''மதுரிமா என்ன இருந்தாலும் ஒரு பெண்... உன்னிடம் அவள் விவாகரத்துக் கோரி, பின் வாழ்க்கை முழுவதும் ஒரு குற்ற உணர்வில் வாழ்வதைவிட, பிரிவது சேர்வதற்கே என்ற நோக்கத்தோடு அவளுக்கு பதில் நீயே அவளிடம் விவாகரத்து கேள்.''

வைத்தீஸ்வரன் சொன்னதை கேட்கவே நரேனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது நடைமுறையில் தன்னால் சாத்தியமா என்று யோசித்தான் நரேன்.

''இதுபற்றி இன்னமும் நீ யோசித்துக் கொண்டிருந்தால், இந்த விஷயம் ஒரு முடிவுக்கு வராமல் உன்னைக் குழப்பிக் கொண்டே இருக்கும்.''

''அதுக்கில்ல சார்... மதுரிமாவிடம் நானே விவாகரத்துக் கேட்பது எந்த அளவுக்கு சரியாக இருக்கும். ஒருவேளை, இது தவறாகப் போய் விட்டால்.''

''என் அறிவுக்கும், அனுபவத்திற்கும் தெரிந்த ஒன்றைத்தான் நான் உனக்கு ஆலோசனையாக சொல்லி இருக்கிறேன். ஏற்பதும், விடுவதும் உன் விருப்பம். நான் உன்னைக் கட்டாயப் படுத்தவில்லை.''

''சரி... இதை எப்படி ஆரம்பிக்கலாம்?''

''அது ஒன்றும் அத்தனைப் பெரிய சிரமமான காரியம் இல்லை. இதில், உனக்கு சம்மதமா? அதைச் சொல்.''

''எது எப்படியோ... முடிவு நன்றாக இருக்க வேண்டும்; அது தான் என் கவலை.''

''எல்லா விஷயங்களுமே நல்ல முடிவை கருத்தில் கொண்டுதான் ஆரம்பிக்கப்படுகின்றன. இருந்தும், சில நேரங்களில் சரியாக இல்லாமல் போவதற்கு தவறான ஆரம்பங்கள் காரணமாக இருக்கலாம். நாம் இதை சரியாகவே ஆரம்பிப்போம். ஓ.கே., வா?''

நரேனை உற்சாகப்படுத்துகிற மாதிரி வைத்தீஸ்வரன் குரல் தெம்புடன் ஒலித்தது.

''ஓ.கே., சார்...''

வைத்தீஸ்வரன் அவரது மொபைல் போனில் மதுரிமாவின் வக்கீலும், அவரது நண்பருமான தஞ்சாவூர் ரங்கராஜனை அழைத்தார். அவர் பேசுவது நரேனுக்கும் கேட்டது.

''என்னப்பா வைத்தி... உன்னோட கிளையன்ட்கிட்ட பேசிட்டியா?''

''பேசிட்டேம்பா... ஒருவழியா புரிய வெச்சுட்டேன். நாம பேசிகிட்ட மாதிரியே நீ மதுரிமாவோட விவாகரத்து கேசை கொஞ்சம் டிலே பண்ணு. மத்ததை நான் பாத்துக்கறேன்... தேங்க் யூ!''

ரங்கராஜனுடன் சுருக்கமாக பேசி முடித்தார் வைத்தீஸ்வரன்.

''சார்... நீங்கள் என்னப் பண்ணப் போறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?''

''நிச்சயமா... உன் சார்பா என்னோட வக்கீல் மதுரிமாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப் போறாரு... அவ்வளவுதான்.''

சொல்லிவிட்டு, வாய்விட்டு சப்தமாக சிரித்தார் வைத்தீஸ்வரன். அழுவதா, சிரிப்பதா என்று புரியாத நிலையில், வைத்தீஸ்வரனை உற்றுப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான் நரேன்.

— தொடரும்.

தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us