PUBLISHED ON : ஆக 29, 2021

மவுன படத்தில் விஜய் சேதுபதி!
கடந்த, 33 ஆண்டுகளுக்கு முன், ஹிந்தி- மற்றும் தெலுங்கில், புஷ்பக விமானா என்ற, மவுன படத்தில் நடித்தார், கமல். அந்த படம் தான் தமிழில், பேசும் படம் என்ற பெயரில் வெளியானது. தற்போது, காந்தி டாக்ஸ் என்றொரு மவுன படத்தில் நடிக்கப் போகிறார், விஜய் சேதுபதி. இந்த படமும், ஹிந்தியில் தயாராகி, தமிழ் உட்பட ஆறு மொழிகளில் வெளியாக உள்ளது. 'இப்படம், என் திறமைக்கு ஒரு சவால் என்பதால், 'மோனோ ஆக்டிங்' மட்டுமின்றி, 'பாடிலாங்குவேஜ்' மூலம் சில வித்தியாசமான அசைவுகளையும் பிரதிபலிக்க திட்டமிட்டுள்ளேன். படம் முழுக்க ஒரே மாதிரியான உடல்மொழி வரவேண்டும் என்பதற்காக, இப்படத்தில் நடிக்கும்போது, வேறு எந்த படத்திலும் நடிக்காமல் முழுக் கவனத்தையும் செலுத்தி, நடிக்கப் போகிறேன்...' என்கிறார், விஜய் சேதுபதி.
— சினிமா பொன்னையா
'ரீ - என்ட்ரி' கொடுக்கும், ஷாலினி!
கடந்த, 2002ல், அமர்க்களம் படத்தில் நடித்தபோது, அஜீத்துடன் காதல் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்து கொண்ட, ஷாலினி, அதன்பிறகு, எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில், 20 ஆண்டு இடை வெளிக்குப்பின், தற்போது, மணிரத்னம் இயக்கி வரும், பொன்னியின் செல்வன் படத்தில், 'கெஸ்ட் ரோலில்' ஷாலினி நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அது எந்த மாதிரியான கேரக்டர் என்பது, 'சஸ்பென்சாக' உள்ளது. சுற்றிச் சுற்றி சுங்கச் சாவடிக்கே வந்தது போல!
— எலீசா
கெத்து காட்ட வரும், சன்னி லியோன்!
'கோலிவுட்டிலும் கொடி நாட்டியே தீருவேன்...' என்று, வீரமாதேவி என்றொரு சரித்திர படத்தில் நடித்தார், சன்னி லியோன். ஆனால், அந்த படம், சில ஆண்டுகளாகவே கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில், தற்போது, ஷீரோ என்றொரு படத்தில் நடித்து வரும் அவர், 'சன்னி லியோன் என்றாலே கவர்ச்சி நடிகை என்றாகி விட்டது. ஆனால், இந்த படத்தில், நான் கவர்ச்சியை ஓரங்கட்டி, 'ஆக் ஷன்' காட்சிகளிலும் வில்லன்களை புரட்டி எடுக்கிறேன். அதிலும், 'டூப்'பே போடாமல், நானே நின்று அடித்திருக்கிறேன்...' என்று, 'ஆக் ஷன் ஹீரோ'களுக்கே சவால் விடும் வகையில், கெத்து காட்டுகிறார். அடி அதிசயமே, சீமைச் சரக்கே!
— எலீசா
யோகிபாபுவிற்கு, 50 கிலோ கேக்!
சமீபத்தில், ஒரு படப்பிடிப்பு தளத்தில், தன், 36வது பிறந்தநாளை கொண்டாடினார், காமெடியன் யோகிபாபு. அப்போது, அந்த படத்தின் நாயகியான, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுண்ட்லா, 50 கிலோ கேக் வாங்கி வந்து, யோகிபாபுவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அப்படி, அவர், 'ஆர்டர்' செய்த கேக்கின் மதிப்பு, ஒரு லட்சம் ரூபாய். அந்த அளவுக்கு சமீபகாலமாக, 'ஹீரோயினி'களும் கொண்டாடும் நடிகராக, 'பிரமோஷன்' பெற்றிருக்கிறார், யோகிபாபு.
— சி.பொ.,
சாய் பல்லவியின், 'டெக்னிக்!'
தெலுங்கு சினிமாவில், முன்னணி, 'ஹீரோ'களின் படங்கள் என்றாலும், தன்னைச்சுற்றியே கதை நகர வேண்டும் என்ற நிபந்தனை போட்டு நடித்து வரும், சாய் பல்லவியை, சிலர் அவ்வப்போது, சீனியர் நடிகர்களின் தங்கையாக நடிக்கவும் அழைக்கின்றனர். ஆனால், அவர்களிடம் நேரடியாகவே, தங்கையாக நடிப்பதில் விருப்பமில்லை என்று சொன்னால் கோபித்துக் கொள்வர் என்பதால், கதையைக் கேட்ட பின், '3 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன்...' என்று, ஒரே போடாக போடுகிறார். 'கதாநாயகியாக நடிப்பதற்கே ஒரு கோடி வாங்குபவர், தங்கையாக நடிக்க, மூன்று கோடி கேட்கிறாரே...' என்று, இயக்குனர்கள் தெறித்து ஓடுகின்றனர். 'தங்கை வேடங்களில் நடிக்க, அடுத்து யாரும் என்னை கேட்டு வரக்கூடாது என்பதற்காகவே, இந்த, 'டெக்னிக்'கை கையாண்டு வருகிறேன்...' என்கிறார், சாய் பல்லவி.
— எலீசா
கறுப்புப்பூனை!
இதுவரை, 'கதை பிடித்தால் எந்த இயக்குனரின் படங்களிலும் நடிப்பேன்...' என்று சொல்லி வந்த, சுள்ளான் நடிகர், இப்போது தன் பாலிசியை மாற்றி விட்டார். அதாவது, 'ஹிட்' படங்களை கொடுத்தவர்களின் படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார். அதன் காரணமாக, பல ஆண்டுகளாக ஒரு, 'ஹிட்' படம் கூட கொடுக்காமல், தன்னிடம் கதை சொல்வதற்காக, அணுகிய சில இயக்குனர்களை துரத்தியடித்த, சுள்ளான், 'புதுவரவு இயக்குனர்கள், திறமை இல்லாதவர்களின் படங்களில் நடித்து, 'ரிஸ்க்' எடுக்க, நான் தயாராக இல்லை. அதற்கு, எனக்கு நேரமும் இல்லை...' என்று சொல்லி, கைவிரித்து விட்டார். இதனால், சுள்ளானை நம்பி பல ஆண்டுகளாக காத்திருந்த இயக்குனர்கள், மிகுந்த அதிர்ச்சியுடன் காணப்படுகின்றனர்.
'எந்தவித பின்னணியும் இல்லாமல், தன் அப்பாவின் சிபாரிசில் ஏற்றுமதி பிசினசில் கால் வைத்த, நம் பிரெண்ட் தனுஷ், இப்ப பெரிய லெவலுக்கு வந்துட்டான். அவனோடு பங்குதாரராக சேர, கேட்டிருந்தோம் அல்லவா... அவனும் ஒப்புக்கொண்டிருந்தான்.
'ஆனா, இப்ப, நம்மள கழட்டி விட்டுட்டு, 'ஏற்கனவே, ஏற்றுமதி தொழிலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கு தான் முன்னுரிமை...' என்று, அந்தர் பல்டி அடிச்சுட்டான்டா...'
'ஐய்யோ... இப்ப நாம என்னடா செய்யிறது...' என்று புலம்பினர், இரு நண்பர்கள்.
சினி துளிகள்!
* தெய்வ நம்பிக்கை கொண்டவரான தனுஷ், மதுரையில் உள்ள தன் குலதெய்வம் கோவிலுக்கு ஆண்டுதோறும் குடும்பத்துடன் சென்று, சாமி தரிசனம் செய்கிறார்.
* கடந்த, 1981ல், ராஜபார்வை படத்தில், கண்பார்வை இல்லாதவராக நடித்த கமல், தற்போது, விக்ரம் படத்திலும் கண் பார்வை இல்லாத வேடத்தில் நடிக்கிறார்.
அவ்ளோதான்!
