தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உயிரோடு உறவாடு... (25)

உயிரோடு உறவாடு... (25)

உயிரோடு உறவாடு... (25)


PUBLISHED ON : ஆக 29, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை சுருக்கம்: மாமன் மகள் ரேவதியை திருமணம் செய்து கொள்ளுமாறு, அம்மா கூறியதை, தமிழ்செல்வியிடம் போனில் தெரிவித்தான், ரிஷி. தனக்கும் உடனே திருமணம் செய்ய முடிவு செய்து, வேலையை ராஜினாமா செய்துவிட்டு அப்பா வர சொன்னதாக கூறினாள், தமிழ். அச்சமயம், மாமன் மகள் ரேவதி அங்கு வந்தாள்-

ரேவதி வருவதைப் பார்த்ததுமே, குரலை தழைத்து, தமிழிடம் பேசத் துவங்கினான், ரிஷி.

''தமிழ், என் மாமா பொண்ணு ரேவதி திடுதிப்ன்னு வந்து நிக்கிறா. மாமா, எங்க கல்யாணம் பத்தி சொல்லியிருப்பார்ன்னு நினைக்கிறேன். அதான், உடனே பார்க்க வந்துருக்கா போலயிருக்கு!''

''அட்றா சக்கை... அப்ப ஒரு, 'ரொமான்ஸ் ஸ்டார்ட்' ஆக போகுதுன்னு சொல்லு.''

''தமிழ்... யோசிச்சு சொல்றேன்னு தான் சொல்லியிருக்கேன். நான் இன்னமும் முடிவெடுக்கல.''

''அப்ப, உன் மாமா பொண்ணோட பேசி இப்ப முடிவு எடுத்துடு.''

''விளையாடுறியா... நான் எப்படி இதுலருந்து தப்பிக்கலாம்ன்னு பார்க்கறேன். நீ போய் சிக்கிக்க சொல்றியா?''

''வாழ்க்கைத் துணை கிடைக்கப் போறத, ஏன் சிக்கல்னு நினைக்கறே... அதுலயும், உன் அம்மா இப்ப இருக்கற நிலைக்கு, நிச்சயமா ஒரு துணை அவசியம், ரிஷி.''

''என்ன தமிழ்... என்ன நீ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்றியா?''

''நானே பண்ணிக்கும்போது, உனக்கென்ன வந்தது... சந்தோஷமா அந்த பொண்ணு கூட பேசு. நான், 'கட்' பண்ணிக்கறேன்.''

சொன்னது போலவே, போனை, 'கட்' செய்தாள், தமிழ்ச்செல்வி.

மொபைல் போனை டேபிள் மேல் வைத்து, ரேவதி பக்கம் திரும்பினான், ரிஷி.

எங்கோ பார்த்தபடி, டேபிள் மேலிருந்த புத்தகம் ஒன்றை சுருட்டி குழாய் போல ஆக்கி, அதை ஆட்டிக் கொண்டிருந்தாள்.

''வா ரேவதி... எப்படியிருக்கே?'' அவனே ஆரம்பித்தான்.

மவுனமாக ரிஷியை பார்த்தாள்.

''என்ன, எதுவும் பேசாம அப்படி பார்க்கறே?''

''இல்ல... எப்படி பேசறதுன்னு தெரியல... அதான்...''

''நமக்கு கல்யாணம்ன்னு சொல்லவும், உடனே, உனக்கு வெட்கம் வந்துருச்சாக்கும்?''

அவன் அப்படி கேட்கவும், மிக அதிர்வாக அவனை பார்த்தாள்.

''என்ன ரேவதி... எதுக்கு நீ இப்படி, 'ஆக்ட்' பண்றே... உங்கப்பா எதுவும் சொல்லலியா?''

''இல்ல, ஒண்ணுமில்ல...''

''அப்படின்னாலே நிறைய இருக்குன்னு தான் அர்த்தம். 'கமான்' எதுவா இருந்தாலும் பேசு.''

''என்னத்த பேச... ஆமா, உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?''

''அப்ப, இதை கேட்க தான் வந்தியா?''

''கொஞ்சம் மனம் விட்டு பேசவும் தான் வந்திருக்கேன்.''

''அப்ப பேசு... யார் வேண்டாங்கறா?''

''ஆனா, எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தான் தெரியல...''

''நீ, இப்படி பேசறது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. இந்த காலத்துல, முதல் முதலா சந்திக்கிறவங்க கூட, இப்படி தயங்கி நான் பார்த்ததில்ல...''

''யெஸ் தயக்கம் தான்... எப்படி சொல்றதுங்கற தயக்கம் தான்.''

''என்கிட்ட உனக்கு என்ன தயக்கம். எதுவா இருந்தாலும் சொல், உள்ள ஒண்ணு வெளிய ஒண்ணு எனக்கு எப்பவும் பிடிக்காது.''

''எனக்கும் தான்... நீங்க, மணிரத்னத்தோட, ரோஜா படம் பார்த்திருக்கீங்களா?''

''என்ன திடீர்னு, ரோஜா சினிமாகிட்ட போயிட்டே?''

''அதுல, அரவிந்தசாமி, பொண்ணு பார்க்க போற காட்சி ஞாபகம் இருக்கா?''

''உம்... நல்லா ஞாபகம் இருக்கு. அக்காவை பெண் பார்க்க போய், தங்கையை கட்டிக்குவாரு.''

''அதே மாதிரி தான். அந்த படத்துல ஒரு தங்கை இருந்தா. என் வாழ்க்கையில நான் மட்டும் தான் இருக்கேன்; என் கூட யாரும் பிறக்கலை...''

''நீ என்ன சொல்ல வர்ற ரேவதி?''

''இன்னுமா புரியல... அந்த படத்துல அக்காவை பிடிக்கலன்னு அரவிந்தசாமி சொன்ன மாதிரி, என்னையும் பிடிக்கலன்னு, நீங்க என் அப்பாகிட்ட சொல்லணும்.''

''புரியுது... அப்ப, நீ யாரையாவது காதலிக்கிறியா?''

'ஆம்' என்பது போல் மெல்ல தலையை அசைத்தாள், ரேவதி!

சுரீர் என்றது ரிஷிக்கு. அதன்பின் ஒரு நெடிய மவுனம் இருவர் இடையிலும்...

ரிஷிக்கு ஒருபுறம் தான் தப்பித்து விட்டது போலவும் இருந்தது. இன்னொருபுறம் அம்மாவுக்கு எப்படி சமாதானம் சொல்வது என்கிற குழப்பம்.

''என்ன யோசனை... நான் காதலிக்க கூடாதா?''

''சேச்சே... அப்படியெல்லாம் இல்ல. ஆனா, உன் அப்பா, உன்னை பத்தி சொல்லும்போது, 'என் பொண்ணு, நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டா'ன்னு சொன்னார். நீ தாண்டலை... கோட்டையே அழிச்சுட்ட மாதிரி தோணுது, எனக்கு...''

பதிலுக்கு அவள் மவுனமாகவே நின்றாள்.

''பதில் சொல்... காதலை, உன் அப்பாகிட்ட சொல்றதுல என்ன தயக்கம் உனக்கு?''

''சொல்லணும்... சரியான சமயத்துல.''

''அது என்ன சரியான சமயம். கல்யாணப் பேச்சு நடக்கற இது, சரியான சமயமில்லையா?''

''சரியான சமயம் தான்! நீங்க என்ன பிடிக்கலன்னு சொல்லிட்டா, அப்பாவுக்கு கோபமும், ஏமாற்றமும் ஏற்படும். அப்ப, என் காதலை சொன்னா, பெரிய எதிர்ப்பு இருக்காதுன்னு நான் நினைக்கறேன்.''

''என்னை பயன்படுத்தி ஜெயிக்க பார்க்கறியா?''

''என் காதலுக்கு உதவி செய்யச் சொல்றேன். இல்லேன்னா பரவாயில்ல, நானே சமாளிச்சுக்கறேன்,''

ரிஷியை புருவம் வளைக்க விட்டாள், ரேவதி.

அப்படியே சில வினாடிகள் அவளை பார்த்தவன், ''உன் காதலை பற்றி தெரிஞ்சுக்கலாமா,'' என்று கேட்டபடியே, சோபாவில் அமர்ந்தான்.

''சொன்னா ஆச்சரியப்படுவீங்க.''

''ஓ... பெரிய வி.ஐ.பி.,யோ?''

''இல்ல... அவர், உங்க ஸ்கூல்மேட்!''

''ஸ்கூல்மேட்டா?''

''ஆமாம்... சங்கர்ராமன்னு பேர். உங்க கூட ஒண்ணா படிச்சேன்னு சொன்னாரே?''

''சங்கர்ராமனா... அவனா?'' ரிஷியிடம் ஒருவகை இன்ப அதிர்ச்சி.

''ஏன்... நல்லவர் இல்லையா?''

''சேச்சே... அவன்தான் வகுப்புல எப்பவும் முதல் மாணவன். ஆமா, இப்ப என்ன பண்றான்?''

''பார்மா டிவிஷன்ல, சேல்ஸ் மேனேஜரா இருக்காரு.''

''ஓ... மேனேஜரா இருக்கானா... குட்!''

''அப்ப உதவி பண்ணுவீங்கன்னு, நான் நம்பலாமா?''

அவள் உடனே அப்படி கேட்கவும், சிரித்தான்.

''தேங்க்ஸ்,'' என்றாள்.

''எதுக்கு?''

''உதவி பண்ணப் போறதுக்கு.''

''நான் இன்னும் வாயைத் திறந்து அப்படி சொல்லலியே?''

''அப்ப சிரிச்சீங்களே...'' அவள் சிணுங்கினாள்.

திரும்ப சிரித்தவன், ''உன் காதலை நானே எடுத்துச் சொல்லி, உங்களை சேர்த்து வைக்கிறேன். நான், ரோஜா அரவிந்தசாமியை காப்பி அடிக்க விரும்பல,'' என்றான்.

''ஐயோ, அப்பா எகிறிக் குதிப்பாரே?''

''நல்லா குதிக்கட்டும்... குதிச்சா நின்னுதானே தீரணும்... குதிச்சுகிட்டேவா இருக்க முடியும்?''

அவளிடம் அப்போது அப்படி கேட்டவன், அதன்பின் ஆஸ்பத்திரியில், அம்மாவை பார்க்க வந்த மாமாவிடம், ரேவதியின் காதலை சொல்லவும், சற்று கலங்கித்தான் போனார்; அவன் அம்மாவும் இடிந்து போனாள்.

''மாமா... இந்த தலைமுறையினரை நான் நல்லா புரிஞ்சு வெச்சுருக்கேன்னு, நீங்க சொன்னது உண்மையா இருந்தா, ரேவதிக்கு அவ விரும்புற, அந்த சங்கர்ராமனையே கட்டி வையுங்க; என் சினேகிதன் தான் அவன்...

''எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன். ஸ்கூல்லயும் முதல் மாணவன். இப்பவும் சேல்ஸ் மேனேஜரா, 50 ஆயிரத்துக்கு குறையாம சம்பாதிக்கிறான்,'' என்று, அவனை பற்றி மேலும் கூறவும், அவரால் பேச முடியவில்லை. தொடர்ந்து அங்கே நிற்க முடியாமல், மெல்ல விலகினார்.

அவன் அம்மா சிவகாமி, மிக ஏமாற்றமாய் அவனை பார்த்தாள்.

''இப்ப என்ன ஆயிடிடுச்சுன்னு இப்படி பார்க்கறே?''

''இப்படி தலைல கல்லை துாக்கி போட்டுட்டாளேடா...''

''தப்பா சொல்றே... அவ கல்லையும் துாக்கல, போடவும் இல்ல... நீயும், மாமாவும் தான் தன்னிச்சையா முடிவு செய்து, அவ தலைல கல்லைப் போடப் பார்த்தீங்க. அவ ரொம்ப சமத்து. என்கிட்ட எப்படி பேசணுமோ அப்படி பேசி, தன் வாழ்க்கையை காப்பாத்திக்கிட்டா... அவ செய்தது தான் சரி.''

''அப்ப, எங்களுக்கு விருப்பங்களே இருக்க கூடாதா... பெத்து, வளர்க்க மட்டும்தானா நாங்க?''

''நீ, ஒரு ஸ்கூல் டீச்சர்... இப்படியெல்லாம் அர்த்தமில்லாம கேள்வி கேட்காதே... கல்யாணம்ங்கிறது முதல்ல யார் பண்ணிக்க போறாங்களோ அவங்க விருப்பம் சார்ந்தது. ஏன்னா, அவங்க தான் வாழப் போறவங்க. அப்புறம் தான் உங்க விருப்பம்.

''அவ என்ன ஓடியா போயிட்டா... அப்படி செய்தாலாவது, வருத்தப்படறதுல ஒரு அர்த்தம் இருக்கு. அவ தன் விருப்பத்தை சொல்லியிருக்கா... பையனும் நல்ல பையன், பெருந்தன்மையா கட்டி கொடுங்களேன். சந்தோஷமா வாழ்வாங்கல்ல...'' என, ஒரு போடு போட்டான், ரிஷி.

''பேசறத பார்த்தா, நீ கூட யாரையோ காதலிக்கற மாதிரி தெரியுதேடா... அப்படியிருந்தா சொல்லு, என் வரையில உனக்கு கல்யாணமாகி, எனக்கொரு மருமக வரணும். முடிஞ்சா, அவ எனக்கு ஒத்தாசை பண்ணட்டும்; இல்லாட்டி பரவாயில்ல... நீ, நல்லா வாழ்ந்தா போதும்டா எனக்கு,'' என்று, கண் கலங்கினாள்.

அம்மாவின் கைகளை பிடித்த ரிஷி, ''இதுவரை அப்படி எதுவும் இல்லம்மா. இனி, எப்படியோ தெரியாது. ஆனா, நான் நல்லா வாழ்ந்தா போதும்ன்னு சொன்னே பார்... இதைவிட வேற என்னம்மா வேணும் எனக்கு...

''இப்ப சொல்றேன், உனக்காகவே ஒரு பெண்ணை நான் காதலிக்கறேன். உன் சம்மதத்தோட கல்யாணம் பண்ணி, என் கூட உன்னை கூட்டிட்டு போய் வெச்சுக்கறேன். போதுமா?'' என்று கேட்க, அவனை இழுத்து கட்டிக் கொண்டாள், சிவகாமி.

நான்கு நாட்கள் போனதே தெரியவில்லை. மாமாவும் சகஜமாகி விட்டார். ரேவதிக்கும் சொல்ல முடியாத அளவு சந்தோஷம். அம்மாவை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லி, சென்னைக்கு புறப்பட்டான், ரிஷி.

இம்முறை ரயிலில் இரண்டாம் வகுப்பு 'ஏசி கோச்'சில், ஜன்னலோரம் அமர்ந்து, மொபைலை பார்த்தான். 'வாட்ஸ் - ஆப்'பில், 'கிணிங்' சத்தத்துடன் ஒரு புகைப்படம்!

அதில், மடிசார் புடவைக்கட்டில், மைத்ரேயி! கீழே, 'நல்லா இருக்கேனா?' என்கிற கேள்வி வேறு... அப்போது, மாமியே அவனை கூப்பிட்டாள்.

''ரிஷி, கிளம்பிட்டியா?''

''ஆமாம் மாமி... டிரெயினுக்குள்ள தான் இருக்கேன். ஆமாம், என்ன மாமி - மைத்ரேயிக்கு மடிசார்ல்லாம் கட்டி விட்டுருக்கீங்க போலருக்கு?''

''அதை ஏன் கேட்கறே... என் மடிசார் கட்டு, அவளுக்கு ரொம்ப பிடிச்சு போச்சாம். எனக்கும் கட்டி விடுங்கன்னு ஒரே அடம். இதையெல்லாம் கல்யாணம் ஆனவா தான் கட்டிப்பான்னா கேட்கவே இல்லை... சரி போன்னு கட்டி விட்டேன். ஆனா, அதுல பார்க்க களையா நன்னா இருக்கால்ல?''

''சரிதான்... மேடம் உங்ககிட்ட அடக்கி வாசிக்கிற மாதிரி தெரியுது. எப்படியோ அடக்கமா இருந்தா சந்தோஷம் தான்.''

''எனக்கென்னவோ இவகிட்ட எந்த தப்பும் தெரியல, ரிஷி. எதையும் வெளிப்படையா பேசிடறா... என்கிட்ட எதையும் மறைக்கல... யார் யார் எப்ப கைய பிடிச்சு இழுத்தா, கட்டிப்பிடிக்க பார்த்தான்னு தேங்காய் உடைக்கிற மாதிரி உடைச்சுட்டா. ஆனா, யார்கிட்டயும் தன்னை இழக்கவேயில்லை. அந்த விஷயத்துல இவ நெருப்பா தான் இருக்கா...''

''நாலு நாள் பழக்கத்துக்கே இவ்வளவு எபெக்டா... அவ, பயங்கர கில்லாடி தான் மாமி.''

''அப்படியெல்லாம் இல்ல ரிஷி. அவ, இப்ப தான் சந்தோஷமா வாழத் துவங்கியிருக்கிற மாதிரி தெரியறது. எனக்கு எவ்வளவு ஒத்தாசை பண்றா தெரியுமா?''

''போதும் மாமி... மிச்சத்த நான் நேர்ல பார்த்து தெரிஞ்சுக்கறேன்; மைத்ரேயி புராணத்தை கொஞ்சம் மூட்டை கட்டுங்க. நான் கொஞ்சம் தமிழ்ச்செல்வியோட பேசணும்... ரெண்டு நாளா அவகிட்டேர்ந்து போனும் இல்லை.''

''சொல்ல மறந்துட்டேனே... தமிழ்ச்செல்வி, இரண்டு நாள் முன், ஆத்துக்கு வந்தா. மைத்ரேயிகிட்டயும் தானே அறிமுகப்படுத்திண்டா... அவளுக்கு, வர்ற முகூர்த்தத்துல கல்யாணமாமே?''

''முடிவாயிடுச்சா... எனக்கு தெரியாதே மாமி?''

''முடிவாயிட்ட மாதிரி தான் தெரியறது. 'ஊருக்கு போய் பத்திரிகை அனுப்பறேன். நீங்கல்லாம் கட்டாயம் கல்யாணத்துக்கு வரணும்'ன்னா... அதுக்கென்னம்மா, கட்டாயம் வரேன்னு சொன்னேன். மைத்ரேயியையும், 'இன்வைட்' பண்ணினா. ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிண்டிருந்தான்னா பார்த்துக்கோயேன்.''

''ரைட் மாமி... நான், நேர்ல பேசறேன்; இப்ப, 'கட்' பண்ணிக்கறேன்,'' என்று இணைப்பை துண்டித்து, தமிழ்ச்செல்விக்கு போன் செய்தான். ஆனால், 'சுவிட்ச் ஆப்' என்றே வந்தது.

சுகுமாரின் வேலையாக இருக்கும் என்றும் தோன்றியது. அப்போது, 'வாட்ஸ் - ஆப்'பில் திரும்பவும் ஒரு சிணுங்கல். பார்த்தவனுக்கு, நெஞ்சை அடைக்கத் துவங்கியது.

அதில், மிக ஆபாசமாக தமிழ்ச்செல்வியை கட்டிப்பிடித்தபடி இருந்தான், ரிஷி. இருவரிடமும் மேலாடை சுத்தமாக இல்லை!

தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us