PUBLISHED ON : ஆக 29, 2021

* என். ஆசைத்தம்பி, சென்னை: தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்காமல், 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே, பா.ம.க.,வின் இலக்கு என்கிறாரே... அதன் நிறுவனர் ராமதாஸ்...
பாவம்... 83 வயதாகி விட்டது அவருக்கு... நிறைய கனவுகள் வருகிறது போலும்... கண்டு விட்டு போகட்டுமே!
மு. காந்திமதி, திசையன்விளை: நீங்கள் யாரையாவது பார்த்து பொறாமைப்பட்டதுண்டா?
பலரைப் பார்த்து பொறாமைப் படுகிறேன்... அவர்கள், மிகச் சரளமாக, ஹிந்தி பேசும் தமிழர்கள்! நமக்கு இந்த பாக்கியம் கிடைக்காமல் போய் விட்டதே என்று!
* சி. கணேசன், ராயகிரி, தென்காசி: என் வயது 57. நான், மனைவியை தினமும் புகழ்ந்து கொண்டிருக்கிறேன். என் சகோதரிகளோ... 'அப்படி பேசக் கூடாது... மட்டம் தட்டி பேசு...' என்று, ஆலோசனை சொல்கின்றனர். நான் என்ன செய்வது?
கடைசி வரை உடன் இருக்கப் போகிறவர், மனைவி தான்! சகோதரிகள் பேச்சை தட்டிக் கழியுங்கள். முடிந்தவரை, அவர்களின் முன் புகழ்ந்து பேசுவதைத் தவிருங்கள்!
ஜி. கண்ணாத்தாள், திருச்சுழி, விருதுநகர்: ஆண்கள் துணையின்றி, பெண்களால் எதுவும் சாதிக்க முடியாது என்கிறாளே, என் தோழி...
தவறு... இந்திரா, ஜெயலலிதா எந்த ஆண் துணையுடன் சாதித்து காட்டினர் என்பதை, அவரிடமே கேளுங்கள்!
எம்.இசக்கி, சென்னை: நாளிதழ் நடத்துவதில் உள்ள பிரதான சவால் எது சார்?
வாசகர்கள் அன்பைப் பெறுவது!
வே. ராஜேந்திரன், ரோஸ்மியாபுரம், நெல்லை: சசிகலாவிடம் அப்படி என்ன திறமை கொட்டிக் கிடக்கிறது?
என்னிடமும், உங்களிடமும் கொட்டிக் கிடக்கிறதா, கோடிக்கணக்கில் கொட்டிக் குவிக்கும் திறமை!
* என். சீனிவாசன், கன்னியாகுமரி: என் நண்பன், சுய விளம்பரத்தில் அதிக ஆசை கொண்டுள்ளானே...
உப்பு தெரியும் தானே... சுய விளம்பரம், உப்பு போன்றது! அளவுக்கு அதிகமாக சாப்பாட்டில் உப்பு போட்டால் கரிக்கும்! நண்பரிடம் சொல்லி வையுங்கள்!
பி. கவிதா, சிதம்பரம்: தினமும் காலையில், 'குட்மார்னிங்' என, 'மெசேஜ்' அனுப்புபவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இவ்வளவு அன்பா என, நெகிழ்ந்து போவேன்!
