தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஆக 29, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

பல்கலைக் கழகம் ஒன்றில், புவியியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து, பின்னர், அதே துறையில், தலைமை பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர், அவர். தன் சொந்த ஆர்வம் காரணமாக, 'தமிழர்களின் அறிவியல் நுட்பம்' என்ற தலைப்பில், ஆய்வு செய்து, பிஎச்.டி., பட்டமும் பெற்றார்.

நம் இதழுக்கு, பல அறிவியல் கட்டுரைகளும் எழுதுபவர். தமிழகத்தில் மேற்கொண்ட பல அகழ்வாராய்ச்சிகளில் இவரது பங்கும் உண்டு.

சமீபத்தில், மழை துாறிக் கொண்டிருந்த ஒரு மாலை வேளை, ஆசிரியரை சந்திக்க அலுவலகம் வந்து, காத்திருந்தார். ஏதாவது, 'மேட்டர்' கிடைக்குமே என்று, அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். காபி, டீ அருந்தும் பழக்கம் அவருக்கு இல்லாததால், 'வெந்நீர் கொடுத்தால் போதும்...' என்றார்.

கெட்டிலில் இருந்து ஊற்றிக் கொடுத்தேன்.

என் எண்ணத்தை புரிந்து கொண்டாரோ என்னவோ, திடீரென, 'பழந்தமிழரின் மழைமானி எது தெரியுமா...' என்று, கேட்டார்.

தெரியாது என்ற அர்த்தத்தில், இட வலமாக தலையை அசைத்தேன்.

தொடர்ந்தார்:

ஆட்டுக்கல் தான். அது, வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல, அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. ஒவ்வொரு வீட்டு முற்றத்தில் தான், பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும்.

முதல் நாள் இரவு மழை பெய்திருந்தால், அதன் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து, அது ஒரு உழவுக்கு ஏற்ற மழையா அல்லது இரண்டு உழவுக்கு ஏற்ற மழையா என்று அறிந்து கொள்வர்.

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை, 'செவி' அல்லது 'பதினு' எனப்படும். இது, 10 மி.மீ., அல்லது 1 செ.மீ., மழை அளவுக்கு சமமானது. மழையின் அளவுக்கும், நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதை, 'பதினை' என்றனர்.

மிக அதிகமாக, 5 செ.மீ., அளவுக்கு மழை பெய்தால், அதை ஒரு உழவு மழை என, சொல்வதுண்டு.

எத்தனை, 'பதினு' மழை பெய்திருக்கிறது என தெரிந்த பின்னரே, முதல் உழவுக்கு தயாராவர்.

பெய்யும் மழை அளவின் அடிப்படையில், தமிழில் பெயர் வைத்தனர்.

அதாவது, துாறல் என்பது, பசும்புல் மட்டுமே நனைவது; விரைவில் உலர்ந்து விடும்.

சாரல் - பூமிக்குள் ஓரளவு நீர் செல்லும்; மழை - ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்; பெருமழை - நீர்நிலைகள் நிரம்பும்; அடைமழை - ஐப்பசியில் பெய்வது; கனமழை - கார்த்திகையில் பெய்வது.

இதையே இன்றைய அறிவியல் வேறு வகையில் கூறுகிறது...

மழைத்துளியின் விட்டம், 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால், துாறல்.

விட்டம், 0.5 மி.மீ.,க்கு மேல் இருந்தால், மழை. 4- - 6 மி.மீ.,க்கு மேல் துளியின் விட்டம் இருக்குமானால், கனமழையாகும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நீர் மேலாண்மையில் நம் முன்னோர் சிறந்து விளங்கினர். அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை; பின்வரும் சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே, அனைத்து காரியங்களையும் செய்தனர்.

அவர்கள், பல குளங்களை வெட்டினர் என்று படித்துள்ளோம். ஆனால், குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதை உன்னிப்பாக கவனித்த அவர்கள், குளத்தை சுற்றிலும், பல ஆயிரம் பனை மரங்களை நட்டு வளர்த்தனர்.

காரணம் என்னவென்றால், மற்ற மரங்களின் வேர்கள், பக்கவாட்டில் மட்டுமே பரவும். ஆனால், பனை மர வேர் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச் செல்லும்.

அதுமட்டுமில்லாமல், தன் வேரை குழாய் போன்று மாற்றி, தரைப் பகுதியில் உள்ள நீரை, நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

இதனால், அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி, அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல், பல நுாறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்து, வற்றாத ஜீவ நதியாக ஓட வழிவகை செய்யும்.

பனை மரங்களை வெட்ட வெட்ட, ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும்.

நிலத்தடி நீரைக் காப்பாற்ற, பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றனர், நம் முன்னோர்.

தமிழனின், அறிவியல் சூட்சுமத்தை உலகறிய செய்வது, நம் கடமை.

- இவ்வாறு கூறி முடித்தார்.

நம் பெருமையை உணராமல் இருக்கிறோமே என்று நினைத்து, வருந்தினேன்.



மாபெரும் வெற்றிகளை படைத்தவர், பல போர் முனைகளை கண்டவர், மாவீரன் நெப்போலியன்.

ஒருமுறை, ஒரு சிறிய நாட்டை வெற்றிகொள்ள விரும்பினார். அதற்கான படையை நடத்திச் செல்ல, தன் தளபதியே போதும் என்று, அவரை போருக்கு அனுப்பி வைத்தார்.

படைகள் முகாமிட்டிருந்த இடத்தின் கூடாரத்தில் தங்கி ஓய்வெடுத்தார். கொஞ்ச நேரத்தில் அயர்ந்து துாங்கியும் விட்டார்.

அவருடைய தளபதியும் படைகளை நடத்திச் சென்றார். அந்த நாட்டு படைகளோடு, தன் படைகளை மோத விட்டார். ஆனால், அவர்கள் நினைத்தபடி அது சாதாரண படையாக இல்லை. எதிரிகளின் படை வலுவாகவே இருந்தது. ஏற்கனவே இருந்த போர் தந்திரங்கள் போதுமானதாக இல்லை. அதனால், எதிரிகள் புது வியூகம் அமைத்து போராடினர்.

தளபதிக்கு இப்போது சில ஆலோசனைகள் தேவைப்பட்டன. அதை வழங்கக் கூடிய ஆற்றல் மாவீரன் நெப்போலியனுக்கே உண்டு. அதனால், படை வீரர்களை போரிட்டுக் கொண்டிருக்கும்படி கட்டளையிட்டு விட்டு, ஒரு குதிரையில், படை கூடாரத்தை நோக்கி வேகமாக வந்தார்.

மாவீரன் நெப்போலியன், அப்போது நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். அவர் உறங்குவதே அபூர்வம். அதனால், உறங்கும்போது அவரை எழுப்பக் கூடாது என்ற கட்டளை இருந்தது.

என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றார், தளபதி. அப்போது, அவர் கண்கள் அருகிலிருந்த மேசை மீது சென்றன. அதன் மீது ஏதோ எழுதப்பட்ட காகிதம் இருந்தது. அதை எடுத்து படித்தார்.

என்ன ஆச்சரியம்... எதிரிகள் புது வியூகம் அமைக்கக்கூடும் என்பதை ஊகித்து, அதை சமாளிப்பது எப்படி என்று, நெப்போலியனின் ஆலோசனைகள் அதில் எழுதப்பட்டிருந்தன. சிலிர்த்து போனார், தளபதி. அந்த முறைகளை பின்பற்றி, வெற்றி பெற்றார்.

துாங்கும்போது கூட விழிப்போடு இருப்பது என்பது, இதுதான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us