PUBLISHED ON : ஆக 29, 2021

இன்றும், எஸ்.வி.சேகர் குழுவினர் நினைத்து வருத்தப்படும் ஒரு நிகழ்வு, அன்று நடந்தது.
பாரிவெங்கட் என்ற, அவர்கள் குழுவைச் சேர்ந்த இளம் நடிகர், பிரமாதமாக காமெடி செய்வார். வடிவேலு போல சிறப்பாக வருவார் என்று கணித்திருந்தனர். மனைவி, குழந்தைகள், பெற்றோருடன் சென்னையில் வசித்து வந்தார்.
ஒரு படப்பிடிப்பில் பங்கேற்று, சென்னை வரும் வழியில், விபத்தில் இறந்து போனார்.
அவர் எடுத்து போன பெட்டியில் இருந்த குறிப்புகளை வைத்து, அவரது பெயர் மற்றும் சென்னை விலாசத்தை கண்டுபிடித்தனர். ஆனால், அந்த வீட்டை விட்டு குடும்பத்தோடு ஒரு வாரத்திற்கு முன்பு தான் வேறு வீட்டிற்கு மாறியிருந்தார், பாரிவெங்கட்.
வீடு மாறிப் போனவர்கள், தங்கள் புது வீட்டு விலாசத்தை கொடுக்க மறந்து விட்டனர். வேறுவழியின்றி, ஆதரவற்ற பிணம் என்ற பட்டியலில், பாரிவெங்கட்டை புதைத்து விட்டனர்.
இதெல்லாம் நடந்து முடிந்த நிலையில் தான், பாரிவெங்கட் ஊர் வந்து சேரவில்லை என்ற தகவல், எஸ்.வி.சேகருக்கு கிடைத்தது.
அவர் பயணம் சென்ற வழியில் உள்ள காவல் நிலையங்களில், அந்த நாளில் ஏதேனும் விபத்து நடந்ததா என்று விசாரித்தபோது, மணல்மேடு விபத்தில், பாரி இறந்தது தெரிய வந்தது.
மன்றாடி கேட்டும், 'அவரது உடலை புதைத்தது புதைத்தது தான்; திரும்ப எடுக்க முடியாது...' என்று, மறுத்து விட்டனர், போலீசார்.
அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதியின் உதவியால், பாரிவெங்கட் பிரேதம் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு, அவர்களது குடும்பத்தார் முன்னிலையில், முறைப்படி தகனம் செய்யப்பட்டது.
நிர்கதியான அக்குடும்பத்திற்கு என்ன உதவி செய்வது என்று யோசித்த போதுதான், குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும், இன்சூரன்ஸ் செய்திருப்பது தெரிய வந்தது. அதை வைத்தும், குழு மூலமாக நிதி திரட்டியும், அன்றைய காலகட்டத்தில் அக்குடும்பத்திற்கு, 19 லட்சம் ரூபாய் நிதி வழங்கினர்.
அவர் இறந்தபோது, ஒரு வயதிலும், ஆறு மாத கைக்குழந்தையாகவும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்கள் பெயரில் பணம் டிபாசிட் செய்யப்பட்டது.
எஸ்.வி.சேகர், 'கார்டியன்' ஆக இருந்தார். அந்த குழந்தைகள் மேஜரானவுடன், பணம் வழங்கப்பட்டது.
இதே போல, இன்னொரு மூத்த நடிகர் பாலன், காமெடி வசனங்களை மிக ரசித்து ரசித்து பேசுவார். மகாபாரதத்தில் மங்காத்தா நாடக அரங்கேற்றம். நாடகம் ஆரம்பிக்க ஐந்து நிமிடத்திற்கு முன் வந்தார்.
'என்ன பாலன்... உங்கள் 'மேக் - அப்'பிற்கே அரைமணி நேரமாகுமே... ஏன் லேட்...' என்றார், எஸ்.வி.சேகர்.
'என்னை, இப்போது ஒன்றும் கேட்காதே, சேகர்...' என்று சொல்லி, மளமளவென, 'மேக் - அப்' போட்டு, நாடகத்தில் நடித்தார். நாடகத்திற்கு நல்ல வரவேற்பு.
எல்லாரும் கிளம்பும் முன், எஸ்.வி.சேகரை தனியே சந்தித்த பாலன், 'இன்று காலை, என் குழந்தை இறந்து விட்டது. அதை அடக்கம் பண்ணிவிட்டு வர தாமதமாகி விட்டது...' என்றார்.
அழுது விட்டார், எஸ்.வி.சேகர்.
மனுஷன் இவ்வளவு பெரிய சோகத்தை மனதில் சுமந்து, எப்படித்தான் அப்படி காமெடியாக நடித்தாரோ... இதுதான் கலையின் நிஜமா அல்லது கலைஞர்களின் நிஜமா என்பது புரியாமல், வேதனையில் ஆழ்ந்தார்.
கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி
சென்னை, பெரியார் திடலில், ஒரு நாடகம் போட்டேன். அந்த நாடகத்தின் ஒரு காட்சியில், 'நான் கடவுளை பார்த்தேன். அவரை நம்பாதவன் முட்டாள்; காட்டுமிராண்டி...' என்ற வசனத்தை பேசினேன். நாடகம் முடிந்ததும், 'என்ன சேகர்... பெரியார் திடலில் வந்து இப்படி பேசி விட்டீர்கள்...' என்றனர்.
'இடத்தை வாடகைக்கு விட்டதோடு, உங்கள் வேலை முடிந்து விட்டது...' என்றேன்.
— தொடரும்
எல். முருகராஜ்
